கத்தார் உலகக்கோப்பை கால்பந்து. அரையிறுதிச் சுற்று முதல் ஆட்டம். ஆர்ஜென்டினா-குரோஷியா அணிகள் களம்காண தயாராக இருந்த நேரம்.
குரோஷிய அணியின் பயிற்சியாளர் சிலாட்கோ தாலிச், சில உத்திகளை வகுத்திருந்தார் என்று இரண்டு அணிகளின் உத்திகளைப் பற்றி தெளிவாக பதிவிட்டுள்ளார் மோகன ரூபன்.
கடந்த 2018 உலகக்கோப்பைப் போட்டியில், ஆர்ஜெண்டினாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்ஜெண்டினா அணித்தலைவர் லயனல் மெஸ்சியை சூழ்ந்து கொண்டு அவரை செயல்படவிடாமல் தடுத்து ஆடியவர்கள் குரோஷிய வீரர்கள்.
மெஸ்சியால், அந்த ஆட்டத்தின்போது வெறும் 49 தடவைகள் மட்டுமே பந்தை காலால் தொட முடிந்தது. 24 முறை மட்டுமே அவரால் பந்தைக் கடத்த முடிந்தது.
ஆனால், இந்தமுறை அந்த உத்தி வெற்றி தராது என்பது குரோஷிய அணியின் பயிற்சியாளருக்குத் தெரியும்.
காரணம், மெஸ்சி இப்போது பிளேமேக்கர். அவருக்கென குறிப்பிட்ட ஒரு இடம் கிடையாது.
ஆடுகளம் முழுவதும் சுற்றிச் சுழன்றாடி வந்து அணியினருக்கான கோலடிக்கும் வாய்ப்பை உருவாக்குவதும், முடிந்தால் தானே கோல் வலைக்குள் பந்தை அனுப்புவதும்தான் மெஸ்சி என்ற பிளேமேக்கரின் வேலை.
ஆகவே, மெஸ்சியைக் குறிவைக்க முடியாது. அப்படியே வீம்புக்கு மெஸ்சியை குரோஷிய வீரர் ஒருவர் குறிவைத்தால் அவர், அவரது இருப்பிடத்தை கோட்டைவிட வேண்டி யிருக்கும். எதிரணி அந்த இடைவெளியைப் பயன்படுத்தி முன்னேற வாய்ப்பு அதிகம். குரோஷியப் பயிற்சியாளர் சிலாட்கோ தாலிச்சிடம் இன்னொரு உத்தி உண்டு.
பந்தை எப்போதும் தங்கள் வசம் வைத்திருந்து, எதிரணி வீரர்களை பந்துக்காக தங்களை நோக்கி வர வைப்பதுதான் அந்த உத்தி. ‘பந்து பெரும்பாலும் நம் காலில் இருந்தால் எதிரணியால் கோல்போட முடியாது’ என்பது குரோஷிய அணி பயிற்சியாளரின் கணிப்பு.
இதேப்போல நடப்பு உலகக்கோப்பைப் போட்டியில், இன்னொருவிதமான உத்தியையும் குரோஷிய அணி கடைப்பிடித்தது. அது, கோல்கள் இல்லாத ஆட்டத்தை உருவாக்குவது. அல்லது சமமான கோல் கணக்கில் ஆட்டத்தை மெல்ல மெல்ல கூடுதல் நேரத்துக்கும், அதன்பிறகு பெனால்டி சூட்அவுட்டுக்கும் கொண்டு செல்லும் உத்தி.
ஆட்டம் நகர்ந்து பெனால்டி சூட்அவுட்டுக்குச் சென்றால், பொதுவாக குரோஷியாவின் கையே ஓங்கும். காலிறுதியில், பிரேசில் அணியை குரோஷியா அப்படித்தான் காவு வாங்கியிருந்தது.
இதுபோக, 4-3-3 என்ற வடிவமைப்பில் ஆடும் அணி, குரோஷிய அணி. குரோஷிய அணியின் தலைவர் லூகா மோட்ரிச், மத்தெயோ கோவாசிச், மார்செல்லோ போர்வோவிச் போன்ற மூவர் அடங்கிய குரோஷிய அணியின் நடுக்களம், உலகத்திலேயே மிக வலுவான நடுக்களம்.
ஆபத்தான பெர்முடா முக்கோணம் போன்ற நடுக்களம் அது.
இந்த நடுக்களத்தையும், மேலே சொன்ன உத்திகளையும் நம்பித்தான் அரையிறுதியின் முதல் ஆட்டத்தில் ஆர்ஜென்டினாவுக்கு எதிராக குரோஷியாவைக் களமிறக்கினார் பயிற்சியாளர் சிலாட்கோ தாலிச்.
ஆனால் நடந்ததோ வேறு. ஆர்ஜென்டினா அணியின் இளம் பயிற்சியாளர் லியனல் ஸ்கேலானி, குரோஷியாவை எதிர்கொள்ள சில பதில் உத்திகளை வைத்திருந்தார்.
ஆட்டத்தின் பெரும்பகுதி முழுக்க குரோஷிய வீரர்கள் தங்கள் வசம் பந்தை வைத்து உருட்டியதை ஆர்ஜென்டினா வீரர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
‘கால்பந்தாட்டத்தில், பந்து யார் காலில் எவ்வளவு நேரம் இருக்கிறது என்பது முக்கியம் இல்லை, யார் கோல் போடுகிறார்கள் என்பதுதானே முக்கியம்?’
அந்த வகையில், ‘பந்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். கோல் அடிக்க மட்டும் எங்களிடம் தாருங்கள். நாங்கள் கோல் அடித்தபின் பந்தைத்திரும்பவும் வாங்கிக் கொள்ளுங்கள்’ என்று பதற்றமே இல்லாமல் ஆடினார்கள் ஆர்ஜென்டினா வீரர்கள்.
அதுபோல லியனல் மெஸ்சி இந்தமுறை பிளேமேக்கர் என்பதால், மெஸ்சியை செயல்பட விடாமல் தடுக்கும் குரோஷிய அணியின் திட்டம் வெற்றி பெறவில்லை.
போதாக்குறைக்கு மெஸ்சியின் தனித் திறமைகளை வெளிக்கொண்டு வரும் விதத்தில் ஆர்ஜென்டினா அணியின் பயிற்சியாளர் லியனல் ஸ்கேலானி, அணியை கட்டமைத்திருந்தார்.
அது என்ன மாயமோ தெரியவில்லை? ஆட்டத்தின் முதல்பாதியிலேயே 2 கோல்களைப் போட்ட ஆர்ஜென்டினா, பெனால்டி சூட்அவுட்டுக்குச் செல்லும் குரோஷியாவின் கனவைக் கலைத்தது.
அதுமட்டுமல்ல, கோலுக்கு முன்புறம் உள்ள ஆர்ஜென்டினா அணியின் பெட்டியை, குரோஷிய அணியால் உடைக்கவே முடியவில்லை.
அதேப்போல, ஆட்டம் சரிபாதி நேரத்தைக் கடந்துவிட்ட நிலையில், குரோஷியாவின் நடுக்கள முக்கோணம் இந்தமுறை வேலை செய்யவில்லை என்பதை குரோஷிய பயிற்சியாளர் சிலாட்கோ தாலிச் புரிந்து கொண்டார்.
தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் என்று அவர் பிடிவாதமாக இருக்கவில்லை.
ஆட்டம் முடிய குறைவான நேரமே இருப்பதால், டக்கென தனது உத்தியை மாற்றிக் கொண்டு வலது, இடது பகுதிகளுக்குப் புதிய பதிலி ஆட்டக்காரர்களை இறக்கி, ஆட்டத்தின் சூட்டை அதிகப்படுத்தினார் அவர்.
ஆர்ஜென்டினாவின் பயிற்சியாளர் லியனல் ஸ்கேலானி சும்மா இருக்கவில்லை. இதை எதிர்கொள்ளும் விதமாக பதிலி ஆட்டக்காரர்களை இறக்கிவிட, முடிவில் 3-0 என ஆர்ஜென்டினா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ஆக, ஆர்ஜென்டினா-குரோஷிய அணிகளுக்கு இடையிலான போட்டி, வீரர்களுக்கு இடையே மட்டும் நடந்த போட்டி அல்ல.
பயிற்சியாளர்களுக்கு இடையே நடந்த விறுவிறு போட்டி அது. அறிவு கலந்த அனுபவம் அதன் வேலையைக் காட்டினாலும், இளமை கலந்த புதுமைதான் இந்தப் போட்டியில் வெற்றிபெற்றது.