விசித்திரமாகத் தான் இருக்கிறது.
ஒரு கிராமத்திலோ அல்லது நகர்ப்புறத்திலோ நான்கு பேர் உட்கார்ந்நு சூதாடினால் அவர்களை விரட்டிப் பிடித்து குற்றவாளிகள் என்கிற அடைமொழியைக் கொடுத்து சிறையிலும் அடைக்கிறது காவல் துறை.
அதே சமயம் சில காஸ்ட்லியான கிளப்களில் வசதியும், அநிகாரமும் படைத்தவர்கள் சூதாடினால் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டும் இன்னொரும்புறம் இருக்கிறது.
இப்போது அதிலும் நவீனத் தொழில்நுட்பம் சார்ந்ந ஆன்லைனில் சூதாடினால் அரசு என்ன செய்கிறது?
பொருளாதார நெருக்கடிகள் அதிகப்பட்டிருக்கிற இந்தக் காலகட்டத்தில் பணத்திற்குத் திண்டாடுகிறவர்களை ஆசையைக் கிளப்பும் அளவுக்கு விளம்பரங்களைக் காட்டி பார்க்கிறவர்களை வலையில் விழ வைத்து அடிமை போல ஆக்குகிறார்கள். கடன் வாங்கியாவது விட்டதைப் பெற வேண்டும் என்று முனைகிறவர்கள் ஒரு கட்டத்தில் கையில் இருக்கிற பணத்தையும், கடனாகப் பெற்றவற்றையும் இழந்து, பெரும் குற்ற உணர்வுக்கு ஆளாகித் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் மட்டுமே இதுவரை பலர் ஆன்லைன் ரம்மி விளையாட்டு மூலம் மட்டுமே தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். மிக அண்மையில் அடுத்தடுத்து இரண்டு தற்கொலைகள். கடைசியாக மதுரையைச் சேர்ந்து பொறியியல் பட்டதாரி ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த துயரம் தாங்காமல் கல்லூரி விடுதியிலேயே தூக்கில் தொங்கி உயிரை விட்டிருக்கிறார்.
இந்தச் செய்திகள் எல்லாம் அதிகார மையங்களின் கவனத்திற்குப் போகாமல் இருக்குமா?
முந்தைய அ.தி.மு.க அரசும், தற்போதுள்ள தி.மு.க அரசும் ஆன்லைன் ரம்மியைத் தடை செய்யக் கோரி மசோதாவை நிறைவேற்றி ஆளுநரின் பார்வைக்கு அனுப்பியும் இதுவரை ஆளுநர் அதைப் பொருட்படுத்தவில்லை.
தமிழகத்தில் உள்ள பல கட்சிகள், பல அமைப்புகள் ஆன்லைன் ரம்மியைத் தடை செய்யச் சொல்லியும் இதுவரை தடை விதிக்கப்பட வில்லை என்றால் இந்தச் சூதாட்டத்தையும், அதன் உயிரைப் போக்கும் விளைவுகளையும் வேடிக்கை மட்டும் பார்ப்பார்களா அதிகாரம் மிக்கவர்கள்? ஏன் இன்னும் வலைத்தளங்களுக்குள் நுழைந்தாலே ஆன்லைன் விளம்பரங்கள் ஆரவாரமாகக் கும்மியடிக்கின்றன?
அதில் ஆசை வார்த்தை காட்டிய நடிகர்கள் எதிர்ப்பைச் சந்திக்கும் போது அதை நியாயப்படுத்துகிறார்கள்.
மகாபாரதத்தில் சூதாட்டத்தில் மற்றவர்களை வளைப்பதில் சகுனியை உதாரணமாகச் சொல்வார்கள்.
நவீனத் தொழில்நுட்பத்தில் அதே சகுனி வேலையைச் செய்கிறது ஆன்லைன் ரம்மி.
அன்றைக்குப் பாண்டவர்கள் பாதிக்கப்பட்டார்கள்.
இப்போது அதைப் பார்க்கிறவர்கள் நவீன வலையில் விழுந்து பாதிக்கப்பட்டு, தங்கள் உயிரை இழக்கும் அளவுக்குப் போகிறார்கள்.
பொறுப்பில் இருப்பவர்களின் பணி என்ன?
ஆன்லைன் ரம்மியால் நிகழும் உயிரிழப்புகளைக் கண்டும் காணாதது போல இருப்பது மட்டும் தானா?
– யூகி