ஒரு படம் உலகம் முழுக்க ஒரேமாதிரியான உணர்வலைகளை எழுப்ப முடியுமா? நிச்சயமாக அது சாத்தியமில்லை.
ஏனென்றால், வளர்ந்த நாடுகளில் தவழும் சிந்தனைகளுக்கும் வளர்ந்துவரும் நாடுகளில் படிந்திருக்கும் எண்ணவோட்டங்களுக்கும் நிறையவே வேறுபாடு உண்டு.
கிழக்கில் இருக்கும் நாடுகள் மேற்கு நோக்கி நகர்ந்துவரும் காலச்சூழலில், பெரும் வடிவிலான திரைப்பட வெற்றி என்பது மேற்கத்திய சிந்தனை சார்ந்தே இருக்கும். அதன் ஒவ்வொரு அசைவையும் போற்றிப் புகழ் பாடும்.
மாறாக, இந்த பூமிப்பந்தின் தொல்குடிகளைச் சிறப்பிக்கிற திரைப்படங்கள் வெளியாக முடியுமா? வளங்களைச் சூறையாடுவதை ஆதரிக்கும் மனநிலையை விமர்சிக்க முடியுமா?
முடியும் என்கிறார் ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன்.
‘அவதார்’ வெற்றியைத் தொடர்ந்து தற்போது வெளியாகியிருக்கும் ‘அவதார் 2’ பிரமாண்டத்தில் மட்டுமல்லாமல் சக உயிர்களின் மீது அன்பு செலுத்த வேண்டுமென்ற சென்டிமெண்ட் பார்வையிலும் அசத்தியிருக்கிறது.
பாண்டோரா தெரியுமா?
2009இல் வெளியான அவதார் முதல் பாகம் பார்க்காதவர்களும் கூட அவதார் 2: தி வே ஆஃப் வாட்டர் படத்தைப் பார்க்கலாம், பிரமிக்கலாம். அந்த வகையிலேயே அதன் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
பூமியில் இருந்து கிளம்பும் ஒரு படை, பாண்டோரா எனும் கிரகத்திலுள்ள வளங்களை சூறையாட முயற்சிக்கிறது. அங்கு வசிக்கும் நாவிக்கள் போலவே மாறுவதற்காக, படைத்தலைவர்களில் ஒருவரான ஜேக் சல்லி உள்ளிட்டோரை அங்கு அனுப்புகிறது.
போன இடத்தில், நாவிகளின் இயற்கை மீதான காதலையும் அவர்களது வாழ்வியலையும் பார்த்து ஜேக்கும் இன்னும் சிலரும் பிரமிக்கின்றனர்; தங்களை அனுப்பிய மனித சமூகத்திற்கு எதிராகத் திரும்புகின்றனர்.
அதன்பிறகு, நாவிகளோடு நடக்கும் மோதலில் மனிதப்படை தோற்றுப்போய் பாண்டோராவை விட்டு வெளியேறுவதுடன் முதல் பாகம் நிறைவடையும்.
சில ஆண்டுகள் கழித்து ருசி கண்ட பூனையாக மீண்டும் பாண்டோராவைச் சுற்றிவரும் மனித சமூகத்தின் குயுக்திகளையும் தீவினைகளையும் பேசுகிறது இரண்டாம் பாகம்.
முதல் பாகத்தில் நெய்த்ரி மீது காதலில் விழுவார் ஜேக் சல்லி. இரண்டாம் பாகத்தில், அந்த ஜோடிகளுக்கு நான்கு பிள்ளைகள். அவர்களைக் காப்பதுதான் தனது தலையாய கடமை என்று நினைக்கிறார் ஜேக்.
மீண்டும் மீண்டும் நாவிகள் மீது தாக்குதல் தொடுக்கப்பட, எதிர்தரப்பின் குறி தான் மட்டுமே என்று உணர்கிறார் ஜேக்.
தாங்கள் வசித்த வனப்பகுதியை விட்டு வெளியேறி கடல் வாழ் மக்களிடம் தஞ்சம் புகுகிறது ஜேக் குடும்பம்.
வனத்தில் வசித்தவர்களால் கடல் நீரில் எப்படி வாழ முடியும்?
அடிப்படை கலாசாரம், வாழ்க்கை முறை வெவ்வேறாக இருந்தாலும், இயற்கை மீதான காதலில் எந்த வித்தியாசமுமில்லை.
அந்த ஒரு விஷயமே, ஜேக் குடும்பம் கடல்சார் வாழ்வுக்கு மாறுவதை எளிதாக்குகிறது.
அந்த இடத்தையும் கண்டுபிடித்து மனிதர்கள் குழு போர் தொடுக்க வருகின்றனர்; அதன்பின் ஜேக்கும் அவரது சகாக்களும் என்ன செய்கின்றனர் என்பதே ‘அவதார் 2’ கதை.
வித்தைக்கார ஆளுய்யா..!
தமிழ், தெலுங்கு உட்பட எந்த இந்திய மொழிப் படமானாலும், அதில் சென்டிமெண்ட் காட்சிகளுக்குப் பஞ்சம் இருக்காது. இப்போது அந்த நடைமுறை கொஞ்சம் தேய்ந்து வருகிறது.
அந்த விஷயங்கள் அனைத்தும் திரையில் அடித்து துவைக்கப்பட்ட காரணத்தால், அவற்றை ‘க்ளிஷே’ என்று நாம் ஒதுக்கிவிடுவோம்.
அவற்றையெல்லாம் தேர்ந்தெடுத்து ஒன்று சேர்த்து திரைக்கதையில் புகுத்தியிருப்பதுதான் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனின் வெற்றி.
ஒரு நல்ல கமர்ஷியல் படம் எடுக்க, மிக மிக எளிமையான கதை போதும். அதை வைத்துக்கொண்டு, ஒவ்வொரு காட்சியையும் கனகச்சிதமாக உருவாக்கினால் வெற்றி நிச்சயம்.
பார்க்கும்போது அது எரிச்சலூட்டுவதாக இருக்கக் கூடாது என்பது மட்டுமே அதற்கான விதி. அதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, ‘டைட்டானிக்’கில் பிழியப் பிழிய ஏழைப் பையன் – பணக்காரப் பெண் காதலைக் காட்டியவர் கேமரூன்.
‘அவதார்’ படத்தில் கொஞ்சம் உல்டாவாக பேராசையோடு வரும் நாயகன் சக உயிரினங்கள் மீது அன்பு காட்டி வாழும் வேற்றுக்கிரகவாசிகளில் ஒருவன் ஆகிறான் என்பதே மையக் கதை.
அப்படி பாண்டோராவாசியாக மாறிவிட்ட ஜேக் சல்லி, மீண்டுமொரு மனித தாக்குதலை எப்படி முறியடிக்கிறான் என்ற கதையைப் பிரமாண்டமாகத் திரையில் ‘காட்சி விருந்தாக’ மாற்றியிருக்கிறார்.
ரஸ்ஸல் கார்பெண்டரின் ஒளிப்பதிவுதான் ‘அவதார்’ படத்தின் பெரும்பலம்.
என்னதான் ‘மோஷன் கேப்சர்’ தொழில்நுட்பமாக இருந்தாலும், அத்தனை காட்சிகளும் உண்மையாகப் படம்பிடிக்கப்பட்டு பின்னர் விஎஃப்எக்ஸ் நுட்பத்திற்கு உட்படுத்தப்பட்டிருப்பது சிறப்பு.
குறிப்பாக, ஜேக் சல்லியின் இரண்டாவது மகனாக வரும் லோக் பாத்திரம் இடம்பெறும் காட்சிகள் அனைத்தும் திரையரங்குகளில் 2கே கிட்ஸ்களுக்கு கொண்டாட்டம் தரும்.
சிமோன் பிராங்ளென் இசை தரும் பிரமிப்பை விட, மிகச்சில இடங்களில் வெளிப்படுத்தும் இதம் தான் ‘வாவ்’ சொல்ல வைக்கிறது.
கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி தந்த பிரமிப்பு மங்கிப்போன பிறகும், அரைமணி நேரம் வரை திரும்பத் திரும்ப சண்டையிடுவதாக காட்டுவது போரடிக்கிறது.
அதனாலேயே சுமார் மூன்றே கால் மணி நேரம் திரையரங்கில் இருக்க வேண்டியதாகிப் போகிறது. அதுவும் கூட, இதுநாள் வரை ஜேம்ஸ் கேமரூன் படங்களில் இருக்கும் உத்திதான் என்பது அலுப்பூட்டும் ஒரு தகவல்.
அதையும் மீறி, படம் முடியும்போது அடுத்து ‘அவதார் 3’ வந்தாலும் பார்க்கத் தயார் என்று நம்மைச் சொல்ல வைக்கிறார் கேமரூன். அதனாலேயே, அவரை ‘வித்தைக்கார ஆளு’ என்று பாராட்ட வேண்டியிருக்கிறது.
போதும்.. அழுதுருவேன்..!
நவீன மருத்துவத்தைப் புறக்கணித்துவிட்டு, பாரம்பரிய மருத்துவமுறையை உயர்த்திப் பிடிக்கும் காட்சியொன்றும் இப்படத்தில் உண்டு. எத்தனை பேர் அதனை முன்வைத்து பகுத்தறிவு பேசப் போகிறார்களோ தெரியவில்லை.
என்னதான் ரொமான்ஸ், காமெடி, ஆக்ஷன், த்ரில்லர், அட்வெஞ்சர் என்று மயிர் சிலிர்க்க வைத்தாலும், கண்ணீர் விட்டுக் கதறும் காட்சிகளுக்கு ஈடிணை எதுவுமில்லை.
ஏனென்றால், அதுவே மனித குலத்தின் ஆதார உணர்ச்சி. இன்று, அதனை இழந்துவிடவே மனிதர்கள் பலர் துடிக்கின்றனர்.
அப்படிப் பார்த்தால், நம்மைப் பின்னோக்கிப் பயணிக்க வைக்கிறார் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன்.
கிட்டத்தட்ட பூமிப்பந்தின் ஆதிகுடிகள் வாழ்வுக்கு எதுவுமே ஈடில்லை என்கிறார். அதை திரையரங்கில் கொண்டாடி வரவேற்கின்றனர்.
‘அவதார் 2’ பார்த்து முடியும்போது, ‘போதும், அழுதுருவேன்’ என்று சிணுங்கும் வடிவேலு போலாகிறது நம் முகம். அந்தளவுக்கு கண்ணில் நீர் கசிய வைத்துவிடுகிறது படம்.
முதல் பாகத்தில் நடித்த சாம் வொர்த்திங்டன், ஜோ சல்தானா, ஸ்டீபன் லேங், சிகோர்னி வீவர் உடன் கேட் வின்ஸ்லெட், கிளிப் கர்டிஸ் உட்பட புதிய வரவுகளும் உண்டு.
‘அவதார் 2’வில் தலைகாட்டிய அத்தனை நடிப்புக் கலைஞர்களும் தொழில்நுட்பவியலாளர்களும் சேர்ந்து, இந்த பிரபஞ்சமே உணர்வெழுச்சி கொள்ளும் அளவுக்குத் தங்கள் உழைப்பைத் தந்திருக்கின்றனர்.
பொதுவாகவே பெருங்கூட்டத்தின் முன்னே நின்று அவர்களைக் கடுமையாக விமர்சிப்பதென்பது பெருஞ்சவால்.
நிச்சயமாக அவர்கள் அக்கருத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
முழுக்க நவீனமயத்தின் பக்கம் சாய்ந்துவிட்ட மனிதகுலம், அதற்கு எதிரான விமர்சனங்களை முன்வைக்கும் ‘அவதார் 2’ போன்ற படங்களை கொண்டாடித் தீர்ப்பது ஆகப்பெரிய முரண்.
‘அவதார் 2’ தமிழ் டப்பிங் வசனங்களை காப்பியடித்து சொல்வதானால், ‘இது செய்த பாவத்திற்கான பிராயச்சித்தம்’. அதையும் ரசிக்கும்படி செய்கிறாரே, அதுதான் ஜேம்ஸ் கேமரூன் ஸ்டைல்!
-உதய் பாடகலிங்கம்