கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவருகின்றன. நாம் நம்பமுடியாத அணிகள் வெற்றிக்கனிகளைப் பறிக்கின்றன. ரொனால்டோ ஆடும் போர்ச்சுகல் அணியை யாரும் எதிர்பார்க்காத மொராக்கோ அணி வென்றுவிட்டது.
இந்த நிலையில், ஒவ்வொரு அணிக்கும் உள்ள செல்லப்பெயர் பற்றி சமூக வலைதளத்தில் எழுதியுள்ளார் பத்திரிகையாளர் மோகன ரூபன்.
உலகக் கோப்பை கால்பந்தாட்டத்தில் ஆடும் ஒவ்வொரு நாட்டு அணிக்கும் ஒரு செல்லப் பெயர் இருக்கிறது. (இருக்காதா பின்னே?) அசூரி (Azzurri) என்பது இத்தாலிய அணியின் செல்லப்பெயர். நீலம் என்பது அதற்கு அர்த்தமாம்.
இத்தாலி நாட்டு கால்பந்தாட்ட அணியினர், நீலநிறச் சட்டை அணிவதால் இந்தப் பெயர். ஆனால், இத்தாலி நாட்டு தேசியக் கொடியில் நீலநிறம் எதுவும் கிடையாது.
பிரான்ஸ் நாட்டு கால்பந்தாட்ட அணிக்குப் பெயர் லே புளூ (Les Bleus). பிரான்ஸ் கால்பந்தாட்ட அணியும் நீலநிற ஆடை அணிவதால் இப்படியொரு பெயர். பிரான்ஸ் நாட்டின் சின்னம் சேவல். அதனால், ரூஸ்டர்ஸ் என்ற செல்லப்பெயரும் பிரான்ஸ் கால்பந்தாட்ட அணிக்கு உண்டு.
நெதர்லாந்து அணியை ஆரஞ்ச் என்று அழைக்கிறார்கள். கிளாக்வொர்க் ஓரஞ்ச் என்றும் ஒரு பெயர் இருந்திருக்கிறது. ஆரஞ்சு நிற உடை காரணமாக இந்தப் பெயராம்.
லா ரோஜா (La Roja) என்பது ஸ்பெயின் கால்பந்தாட்ட அணியின் செல்லப் பெயர். ‘லா ரோஜா‘ என்றால் சிவப்புநிறம். செஞ்சட்டை அணிவதால் ஸ்பெயின் அணிக்கு இப்படி ஒரு செல்லப்பெயர்.
பெல்ஜியம் அணிக்கும் சிவப்புநிற உடுப்புதான். அதனால், ரெட் டெவில்ஸ் (Red Devil) என்பது பெல்ஜியம் அணியின் செல்லப்பெயர். இங்கிலாந்து அணியை மூன்று சிங்கங்கள் (The Three Lions) என்று அழைக்கிறார்கள்.
அவர்களது சின்னம் அது. அல்பி செலஸ்டி (Albi Celesti) என்பது அர்ஜெண்டினா அணியின் செல்லப்பெயர். வெள்ளையும், வானநீல நிறமும் கொண்ட பட்டை வரிகளுடன் சட்டை அணிவதால் இந்தப் பெயர்.
பிரேசில் வீரர்கள் அணியும் மஞ்சள் நிறச் சட்டை, கேனரி பறவையின் மஞ்சள் நிறம் மாதிரியே இருப்பதால் பிரேசில் அணிக்கு கேனரிஸ் (Canaries) என ஒரு செல்லப்பெயர் உண்டு. பிரேசில் சம்பா நடனத்துக்குப் பேர்பெற்றது.
அதனால் சம்பா பாய்ஸ் என்றாலும் அது பிரேசில் அணியைத்தான் குறிக்கும். செலசாவ் (Selecao) என்றும் பிரேசில் அணியைக் குறிப்பிடுவார்கள். தேர்வு செய்யப்பட்டவர்கள் என்று அதற்கு அர்த்தமாம்.
உருகுவே அணிக்கு லா செலஸ்டி (La Celeste) நீலவானம் என்பது செல்லப்பெயர். கோஸ்டாரிகா அணியை ‘தி டீகோஸ்’ (The Ticos) என்று அழைப்பார்கள். டீகோஸ் என்பது கோஸ்டாரிகா மக்களைக் குறிக்கும் சொல்லாம்.
ஆப்பிரிக்காவின் கேமரூன் அணியை ‘யாராலும் வெல்லமுடியாத சிங்கங்கள்’ (Indomitable Lions) என்று அழைக்கிறார்கள். மொராக்கோ நாட்டு கால்பந்தாட்ட அணிக்கு அட்லஸ் சிங்கங்கள் (Altas Lions) என்பது பெயர்.
அல்ஜீரியா நாட்டு அணியை ஃபென்னக்ஸ் (Fennecs) என்றும், துனீசியா நாட்டு கால்பந்தாட்ட அணியை கார்தேஜ் கழுகுகள் (Carthage Eagles) என்றும் அழைக்கிறார்கள். ஃபென்னக் என்பது சகாரா பாலைவனத்தில் சுற்றித்திரியும் ஒருவகை நரி!
கானா நாட்டு தேசியக் கொடியில் கறுப்புநிற விண்மீன் இருப்பதால், பிளாக் ஸ்டார்ஸ் (Black Stars) என்பது கானா நாட்டு கால்பந்தாட்ட அணியின் செல்லப்பெயர்.
கனடா நாட்டின் அடையாளம் மேபிள் இலை. அதனால் மேபிள் லீஃப் (Maple leaf) என்று கனடா நாட்டு கால்பந்தாட்ட அணி அழைக்கப்படுகிறது.