மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதைப் போன்ற அவலம் வேறில்லை. ஆனாலும் அந்த அவலம் தொடர்ந்து நிகழ்வதை, நிகழ்த்தப்படுவதைக் குற்றமாகக் கருதாத சமூகத்தை நோக்கி கேள்வியெழுப்புகிறது ’விட்னஸ்’ திரைப்படம்.
ரோகிணி, சாரதா ஸ்ரீநாத், சண்முகராஜன், தமிழரசன், செல்வா, சுபத்ரா ராபர்ட் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார் தீபக்.
முத்துவேல் ஜே மற்றும் ஜே.பி.சாணக்யா இணைந்து இதன் திரைக்கதை வசனத்தைக் கையாண்டுள்ளனர்.
சோனி லிவ் தளத்தில் ‘விட்னஸ்’ காணக் கிடைக்கிறது.
யாருடைய குற்றம்?
சென்னையின் புறநகர்ப்பகுதியான செம்மஞ்சேரியில் வசிக்கும் இந்திராணி (ரோகிணி), சென்னை பெருநகர மாநகராட்சியில் ஒப்பந்த துப்புரவுப் பணியாளராக இருந்து வருகிறார்.
இரவு நேரத்தில், சக பணியாளர்களுடன் சேர்ந்து நகரைச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடுகிறார்.
இந்திராணியின் ஒரே மகன் பார்த்திபன் (தமிழரசன்), கல்லூரியொன்றில் படிக்கிறார். நீச்சல் வீரராகவும் சாதித்து வருகிறார்.
படிப்பை முடித்தவுடன் நல்ல வேலையில் சேர்ந்து சம்பாதிக்கத் தொடங்கியவுடன், தாய் ஓய்வாக வீட்டில் இருக்க வேண்டுமென்று விரும்புகிறார்.
ஒருநாள் இரவு இந்திராணி வேலைக்குச் செல்கிறார். அடுத்த நாள் காலையில் வீடு திரும்புபவருக்கு பார்த்திபன் மரணமடைந்த தகவல் கிடைக்கிறது.
அடையாறு பகுதியிலுள்ள அடுக்குமாடிக் குடியொருப்பொன்றில் கழிவறைத் தொட்டியைச் சுத்தம் செய்ய இறங்கியவர் விஷ வாயு தாக்கி இறந்ததாகத் தகவல்.
பார்த்திபன் குடி போதையில் இருந்ததாக கையெழுத்திட வேண்டுமென்றும், அப்போதுதான் பிணத்தைப் பார்க்க முடியுமென்றும் நிர்ப்பந்திர்க்கின்றனர் காவல் துறையினர்.
இந்திராணியும் அவரது சகோதரரும் (வினோத் சாகர்) அதற்கு ஒப்புக்கொள்கின்றனர்.
அந்த நேரத்தில், துப்புரவுப் பணியாளர்களை ஒன்று திரட்டிப் போராடிவரும் பெத்தராஜு (செல்வா) அங்கு வருகிறார்.
இந்த விவகாரத்தில், குடியிருப்புவாசிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட வேண்டுமென்கிறார்.
மக்களின் போராட்டம் காரணமாக, வேறு வழியில்லாமல் காவல் துறை அதற்குச் சம்மதிக்கிறது. அதன் தொடர்ச்சியாக, அந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வருகிறது.
வழக்கை எதிர்கொள்ளும்போது இந்திராணியும் அவரைச் சார்ந்தவர்களும் எத்தகைய இன்னல்களைச் சந்தித்தனர், பார்த்திபன் மரணத்தில் குற்றவாளிகள் யார் யார், இறுதியில் தீர்ப்பு என்னவாக இருந்தது என்பதைச் சொல்கிறது ‘விட்னஸ்’.
தன் கழிப்பறையைத் தானே சுத்தம் செய்வதை அவமானமாக கருதும் ஒரு சமூகத்தை, இத்திரைப்படம் நிச்சயமாக குற்றவுணர்ச்சி கொள்ளச் செய்யும்.
இயல்பாக நகரும் காட்சிகள்!
கொஞ்சம் சீரியல், கொஞ்சம் குறும்பட பாணியில் காட்சியாக்கம் இருப்பது ஆரம்பத்தில் துருத்தலாக தெரிந்தாலும், பின்னர் அதுவே கதையுடன் எளிதாக ஒன்றவைக்க வழி வகுக்கிறது.
சென்னையின் புறநகர்ப்பகுதியிலுள்ள நீர்நிலையொன்றில் நீண்ட தொலைவில் இருந்து பார்த்திபனும் அவரது நண்பர்களும் நீந்திக் கரையேறும் காட்சியில் இருந்து திரைக்கதை தொடங்குகிறது.
இதுநாள்வரை ஒடுக்கப்பட்டவர்களாகச் சமூகத்தால் கருதப்பட்டவர்கள், இப்போது அந்த இழிநிலைகளைக் கடந்து வேறொரு கரையில் ஏறுகின்றனர் என்றும் கூட இதற்குப் பொருள் கொள்ளலாம்.
அது மட்டுமல்லாமல், பார்த்திபன் எத்தகைய உடல்திறன் உடையவர் என்பதையும் அக்காட்சியே விளக்கிவிடுகிறது.
அதனால், ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் கழிவறைத் தொட்டியினுள் விஷவாயு தாக்கி அவர் மரணமடைந்தார் என்ற கொடூரம் உடனடியாக நம் மனதைத் தைக்கிறது.
காவல் துறையினர் அலுவல்ரீதியாக நடந்துகொள்ளும் விதம், கழிவை அகற்றும் தொழிலாளிகளைச் சக மனிதராக எண்ணாத குடியிருப்புவாசிகளின் மனப்பாங்கு, மலக்குழி மரணங்களைத் தடுக்க மாற்று முயற்சிகளை முன்னெடுக்காத அறிவுச் சமூகம், சாதாரண மக்கள் போராடினால் மட்டுமே புறக்கணிப்புகளை எதிர்கொள்ள முடியும் எனும் கள யதார்த்தம் என்று பல விஷயங்களைப் பேசுகிறது ‘விட்னஸ்’. படத்தின் முடிவும் அதிலொன்று என்பது வருத்தப்பட வேண்டியது.
மகன் பிரிவால் வாடிக் கிடக்கும் இந்திராணியிடம் பக்கத்துவீட்டுப் பெண் பைபிளை கொடுத்து பிரார்த்திக்கச் சொல்வது, ஏழைகளுக்கான கைக்கெட்டும் தீர்வாக கடவுள்தன்மை மட்டுமே இருக்கிறது என்ற யதார்த்த நிலையை உணர்த்துகிறது.
இந்திராணியாக ரோகிணி, பார்த்திபனாக தமிழரசன், பெத்தராஜுவாக செல்வா, அவரது மனைவியாக சுபத்ரா, பாதிக்கப்பட்டோருக்கான வழக்கறிஞராக சண்முகராஜன், அவரது உதவியாளராக வருபவர் என்று பலரும் கதாபாத்திரங்களாக மட்டுமே திரையில் தெரிகின்றனர்.
ரோகிணியின் வீட்டருகே வசிப்பவர்கள், துப்புரவுப் பணியில் ஈடுபடுபவர்கள், மாநகராட்சி அலுவலகப் பணியாளர்கள், ஸ்ரீநாத் உள்ளிட்ட அடுக்குமாடிக் குடியிருப்புவாசிகள் என்று பல கலைஞர்கள் இதில் வந்து போயிருக்கின்றனர்.
இவர்களையெல்லாம் மீறி சண்முகராஜன் வாதம் செய்யும்போதெல்லாம் ஆச்சர்யம் காட்டும் நீதிபதி நம்மைக் கவர்கிறார்.
இக்கதையில் சாரதா ஸ்ரீநாத்தும் அவரது தாயாக நடித்தவரும் ஏன் இடம்பெற்றிருக்கின்றனர் என்றே தெரியவில்லை. அவர்களுக்கு இடையேயான உரையாடல் பகுதியும் முழுமையாக இல்லை.
சக குடியிருப்புவாசிகளால் சாரதாவின் பெற்றோர் ஏன் பாதிப்புக்குள்ளாயினர் என்பதற்கு பொட்டிலறைந்தாற்போல எந்த விளக்கமும் திரைக்கதையில் சொல்லப்படவில்லை.
பார்த்திபன் இறந்துபோன விதம் குறித்த சாட்சியம் மட்டுமே சாரதாவின் பாத்திரம் இடம்பெறுவதற்கான காரணமாக உள்ளது.
மற்றபடி அலுவலகத்திலும் அடுக்குமாடிக் குடிருப்பிலும் சகாக்கள் மத்தியில் அப்பாத்திரம் நடத்தப்படும் விதம் குறித்த தெளிவான விளக்கங்கள் திரைக்கதையில் இல்லை.
இயக்குனரே ஒளிப்பதிவாளர் என்பதால், கதைக்கேற்ற திரைக்கதை ட்ரீட்மெண்டே காணக் கிடைக்கிறது.
சாரதா ஸ்ரீநாத் சம்பந்தப்பட்ட காட்சிகள் தவிர மற்றனைத்திலும் படத்தொகுப்பாளர் பிலோமின்ராஜ் பங்கு அருமை.
ரமேஷ் தமிழ்மணியின் பின்னணி இசை காட்சிகளுடன் பொருந்தியிருக்கிறது. கலை இயக்குனர் சதீஷின் பங்களிப்பு இயல்பான ஒரு உலகத்தைக் காட்ட உதவியிருக்கிறது.
கட்டுரைக்கான சொல்லாடல்கள்!
சென்னை அண்ணாசாலை தேவி திரையரங்கம் அருகிலும் திருவல்லிக்கேணியிலும் வசித்தேன் என்று ரோகிணி வசனம் பேசுமிடம், சென்னையின் புறநகர்ப்பகுதிகளான செம்மஞ்சேரி, கண்ணகி நகர் போன்றவை ஏன் உருவாக்கப்பட்டன என்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கின்றன.
புதிதாக கட்டப்படும் குடியிருப்புக்கான வரைபடத்தில் கழிவுகளை அகற்றுவதற்கான சரியான செயல்முறை குறித்து சாரதா பாத்திரம் ஏதோவொரு முயற்சியை மேற்கொள்கிறது என்று தெரிந்தபோதும், திரைக்கதையில் அது என்னவென்று தெரிய வழி வகை செய்யப்படவில்லை. அதனால், அது வெறுமனே வசனமாகக் கடந்து போகிறது.
சில காட்சிகள் ஏற்கனவே சில படங்களில் பார்த்தவை என்பதால் ‘க்ளிஷே’வாக தெரிகின்றன.
அதேநேரத்தில், பார்த்திபன் இறந்துபோவதற்கு முன் எப்படியிருந்தார் என்று சொல்லும் சாட்சியத்தை அவரது தாய் எவ்வாறு எதிர்கொண்டார் என்பதையோ, அதனைப் பார்த்தவுடன் எப்படி பதைபதைத்தார் என்பதையோ இயக்குனர் திரையில் சொல்லாமல் தவிர்த்திருப்பதற்கு காரணம் என்னவோ?
இது போன்ற மிகச்சில குறைகளை மீறி, குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள் எடுத்துக்கொண்ட பிரச்சனையைத் திரையில் சொல்லியிருப்பதைப் பாராட்டத்தான் வேண்டும்.
பாதாளச் சாக்கடையில் இறங்கியவர் மரணம், கழிவறைத் தொட்டிக்குள் துப்புரவுத் தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி சாவு என்ற தலைப்புச் செய்திகளைக் கடந்து செல்பவர்களுக்கு, அதற்குப் பின்னிருக்கும் பலரது வாழ்வைச் சொல்ல முயன்றிருக்கிறது ‘விட்னஸ்’ படக்குழு.
முடிந்தவரை காட்சிகளை யதார்த்தமாக கண்ணால் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியிருப்பது சிறப்பு.
கழிவறைக் குவியலுக்குள் ஒரு தொழிலாளி இறங்குவதைப் பார்த்து பதைபதைப்பதும், அச்செயலுக்குப் பதிலாக மாற்று ஏற்பாடுகளைப் பின்பற்றலாமே என்று குரல் கொடுப்பதும் மட்டுமே இப்படத்தைக் கண்டவர்களிடம் தென்படும் உடனடி விளைவுகளாக இருக்க வேண்டும்.
அவ்வாறில்லாத பட்சத்தில் காண்பவர்களிடம் ஒரு குற்றவுணர்ச்சி தொற்றும்; நிச்சயமாக, அவர்களெல்லாம் குற்றவாளிகள் தரப்பு உண்மைகளை திட்டமிட்டு மறைத்த ‘விட்னஸ்’ தான்.
– உதய்.பா