உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்திய அர்ஜென்டினா அணி அரை இறுதிக்குள் நுழைந்தது.
கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரின் 2வது கால் இறுதிச் சுற்றில் அர்ஜென்டினா அணி, நெதர்லாந்தை எதிர்கொண்டது.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின், 35-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரர் மொலினா முதல் கோலை அடித்து அணியை முன்னிலை பெறச் செய்தார். இதனால் முதல் பாதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா முன்னிலை வகித்தது.
2 வது பகுதியின் 73-வது நிமிடத்தில் லியோனர் மெஸ்ஸி அர்ஜென்டினாவுக்கான 2-வது கோலை அடித்தார்.
இதனால் வெற்றி அர்ஜென்டினா பக்கம் இருந்தது. எனினும் நெதர்லாந்து வீரர் வெக்ஹோர்ஸ்ட் 83 வது நிமிடத்தில் தமது அணிக்காக முதல் கோலை அடித்தார்.
தொடர்ந்து கூடுதல் நேரம் வழங்கப்பட்டபோது 11 நிமிடங்களில் அவரே இரண்டாவது கோலை அடித்து அர்ஜெண்டினா அணியின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டார்.
கூடுதல் நேர ஆட்டத்தின் முடிவில் 2-2 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.
இதனை தொடர்ந்து முடிவை அறிய பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் அர்ஜெண்டினா 4-3 என்ற கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தது.