நடிகை சாவித்ரிக்குப் பிடித்த நடிகர் யார்?

‘மிஸ்ஸியம்மா’ – 1955 ல் வெளிவந்த படம்.

இப்போது பார்க்கும்போதும் நேர்த்தியாக இருக்கிறது சாவித்திரியின் நடிப்பு.
கோபம், கனிவு எல்லாவற்றிலும் தளுக்காக அவர் ஜெமினியுடன் போட்டி போட்டு நடித்திருப்பார்.

எஸ்.வி.ரங்காராவ், சாரங்கபாணி, தங்கவேலு, நம்பியார், ஜமுனா என்று எல்லோருமே ‘கேஷூவலாக’ நடித்திருக்கிற இந்தப் படத்தில் ஹைலைட் மெல்லிய தென்றல் வீசியதைப் போல நம்மைத் தொடும் ஏ.எம்.ராஜாவின் பாடல்கள்.

“பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொது உடமை அன்றோ” – ராஜாவின் இளங்குரலை மறக்க முடியுமா?

இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது தான், ஜெமினியின் வீட்டுக்கு சாவித்ரி அடைக்கலம் தேடி வந்ததாகப் பின்னாளில் இப்படிச் சொல்லியிருக்கிறார் ஜெமினி.

“அன்றிரவு சாவித்ரி நுழைந்தது என் வீட்டுக்குள் மட்டுமல்ல, என் வாழ்விலும் தான்”
1956 ஆம் ஆண்டிலிருந்து அவரும், சாவித்ரியும் இணைந்து வாழ ஆரம்பித்திருக்கிறார்கள்.

1958-ம் ஆண்டு வெளிவந்த ‘கலை’ என்ற சினிமா இதழுக்கு அப்போது வளர்ந்து கொண்டிருந்த நடிகையான சாவித்ரி அளித்த பேட்டி இது.

கேள்வி : எது உங்களை வியப்படையச் செய்கிறது?

சாவித்ரி பதில் : பொறுப்புணர்ச்சி

கே: உங்களிடத்தில் உள்ள அசந்தர்ப்ப குறைகள்?

ப: வெள்ளை உள்ளத்தோடு எல்லோரையும் நம்புவது

கே: நீங்கள் கோபக்காரரா?

ப: ஆம்

கே : நீங்கள் சினிமா தொழிலில் ஈடுபட்டதால் இப்போது என்ன நினைக்கிறீர்கள்?

ப: எங்கும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவைகளுடன் வாழ முடியும் என்று நினைக்கிறேன்.

கே: மன்னிக்கவும். உங்களுக்குப் பிடித்த நடிகர்?

ப: பிள்ளையார்!

கே: நீங்கள் எதைக் கண்டால் பயப்படுவீர்கள்?

ப: முகஸ்துதியை.

கே : உலகத்திலேயே சிறந்தது என எதைக் கருதுகிறீர்கள் ?

ப: இல்லத்தரசியாக இருப்பது.

கே: எதனால் நீங்கள் ஆத்திரமடையக்கூடும்?

ப: மட்டமான ரசிப்பைக் கண்டு!

கே: சினிமா நட்சத்திரமாவது சுலபமான காரியமா?

ப: என்னைப் பொறுத்த வரையில் நான் மிக மிக கஷ்டப்பட்டேன்.

கே: உங்களிடம் உங்கள் கணவருக்குப் பிடித்தமான விஷயம்?

ப: என் மனம்

கே: நீங்கள் முதன் முதலாக கேமிரா முன் தோன்றிய போது, எந்த விதமான உணர்ச்சிகள் போக்குடன் ஈடுபட்டிருந்தீர்கள்?

ப: கேமிரா, சவுண்டு மிஷின் ஆகியவைகளைக் கண்டு குழந்தைகள் பொருட்காட்சிக்குச் சென்றால் ஒவ்வொன்றையும் எப்படி முறைத்துப் பார்ப்பார்களோ, அவ்வித உணர்ச்சியோடு தான் இருந்தேன்.

You might also like