தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் 1984-ம் ஆண்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பிறகு அவருக்கு அமெரிக்காவின் ப்ரூக்ளினில் உள்ள டவுன் ஸ்டேட் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளைச் செய்தவர் அன்றைய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் எச்.வி.ஹண்டே.
அப்போது எம்.ஜி.ஆருக்கு நடந்தது என்ன என்பது குறித்து அவர் பகிர்ந்துகொண்ட நினைவுகள்…
“1984 அக்டோபர் 5-ம் தேதி நள்ளிரவில் எம்.ஜி.ஆருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவரது மனைவி ஜானகி, பாதுகாவலர் ஆறுமுகம் ஆகியோர் அவரை அப்போலோ மருத்துவமனையில் சேர்த்தனர்.
அக்டோபர் 6-ம் தேதி நான், நாவலர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட சில அமைச்சர்களும் மருத்துவமனைக்குச் சென்று அவரைப் பார்த்தோம். எங்களிடம் சகஜமாகப் பேசினார்.
அப்போது சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடந்து வந்தது. சட்டப் பேரவையில் என்ன பேச வேண்டும் என்பது பற்றி எங்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், 13-ம் தேதி நள்ளிரவில் பக்கவாதம் ஏற்பட்டு அவர் நினைவிழந்தார்.
எம்.ஜி.ஆரின் உதவியாளர் மூர்த்தி எனக்கு தகவல் தெரிவிக்க, நள்ளிரவில் மருத்துவமனைக்கு விரைந்தேன்.
நரம்பியல் மருத்துவ நிபுணர் டாக்டர் ஜெகந்நாதனை வரவழைத்தேன். ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில் மூளையில் ரத்தம் உறைந்திருப்பது கண்டறியப்பட்டது.
இதில் உள்ள ஆபத்தை உணர்ந்து அமெரிக்காவிலிருந்து மருத்துவ நிபுணர்களை வரவழைத்து சிகிச்சை அளிக்க முடிவு செய்தோம்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது எம்.ஜி.ஆருக்கு ரத்தத்தில் யூரியாவின் அளவு 88 மில்லி கிராம் ஆகவும், கிரியாட்டின் 8.2 மில்லிகிராம் ஆகவும் இருந்தது.
இதனால் அவருக்கு ‘பெரிடோனியல் டயாலிசிஸ்’ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் ஏற்பட்ட இரத்த இழப்பால் பக்கவாதம் ஏற்பட்டு இருக்கலாம் என்ற கருத்தும் மருத்துவர்களிடம் ஏற்பட்டது.
அதனால் பெரிடோனியல் டயாலிசிஸ் செய்வது நிறுத்தப்பட்டது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்க அமெரிக்காவிலிருந்து, சிறுநீரக சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் எலய் ப்ரீட்மேன், டாக்டர் கிறிஸ்டோபர் பிளாக், டயாலிசிஸ் நிபுணர் டாக்டர் ஸ்ரீ பாதராவ், டாக்டர் ஜான் ஸ்டிரிலிங்மேயர் ஆகியோரை வரவழைத்தோம்.
இவர்களை அழைத்துவர தொழிலதிபர் பழநி ஜி.பெரியசாமி உதவி செய்தார். இவர்களை விமானத்தில் அழைத்து வர பிரதமர் இந்திராகாந்தி தேவையான உதவிகளை செய்து வந்தார்.
அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் புதிய தொழில் நுட்பத்தில் எம்.ஜி.ஆருக்கு ஹீமோ டயாலிசிஸ் சிகிச்சை அளித்தனர்.
17-ம் தேதி பிரதமர் இந்திரா காந்தியை நேரில் பார்த்து நலம் விசாரித்தார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டும் எம்.ஜி.ஆரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், எங்களுக்கு அச்சம் ஏற்பட்டது.
எனவே ஜப்பானில் இருந்த நரம்பியல் மருத்துவ நிபுணர் டாக்டர்.கானுவை வரவழைத்தோம்.
அமெரிக்காவிலிருந்த அவரை சிங்கப்பூர் வழியாக சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்து சென்னைக்கு வரவழைத்தோம்.
இதற்கு இந்திராகாந்தியின் உத்தரவின் பேரில் அவரது தனிச் செயலர் பி.சி.அலெக்சாண்டர் உதவிகளைச் செய்தார்.
கிளிசரால் என்ற மருந்தை ஊசி மூலம் செலுத்தும் தொழில்நுட்பம் டாக்டர் கானுவிடம் இருந்தது. வரும்போதே பத்து டியூப் கிளிசராலை அவர் கொண்டு வந்தார்.
அதன்மூலம் எம்.ஜி.ஆருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டது.
அதன்பிறகு மேல் சிகிச்சைக்காக நவம்பர் 5-ம் தேதி அமெரிக்காவின் ப்ரூக்ளின் பகுதியில் உள்ள மருத்துவ மையத்திற்கு சிறப்பு விமானத்தில் எம்.ஜி.ஆர். அழைத்துச் செல்லப்பட்டார்.
நானும் உடன் சென்றேன். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் பக்கவாதம் குணமானது.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு எம்.ஜி.ஆர். முழுமையாகக் குணமடைந்தார்.
1985 பிப்ரவரி 4-ம் தேதி அவர் சென்னை திரும்பினார்.”
– நன்றி : தி இந்து நாளிதழ்