துயரங்கள் தீர்க்கும் தும்பையின் மகத்துவம்!

அடடா, இதன் அருமை, பெருமை தெரியாமல் இத்தனை நாள் அலட்சியப்படுத்தி விட்டோமே என நம்மை நினைக்க வைக்கும் தும்பையின் மகத்துவங்கள் ஒன்றா?இரண்டா?

சளி, இருமல், தலைவலி, பூச்சிக் கடி தொடங்கி தோல் நோய்கள் வரை துடைத்து எறிந்து விடும் தும்பை, இயற்கை மருத்துவத்தின் சிகரமாகும்!

பெண்களின் முத்துப் பற்களைப் பார்க்கும் போது தும்பைப் பூ தான் கிராமத்து கவிஞனுக்கு நினைவில் வரும்! 

எம்.ஜி.ஆர் ஒரு படத்தில், ”தும்பை பூ போலே.  துளசி செடி போலே பெண்ணைப் பாருங்க, மாப்பிள்ளை இணங்க..” எனப் பாடுவார்!

சிவன் கோயில் வழிபாட்டில் தும்பைப் பூவுக்கு இன்றும் பெரும் முக்கியத்துவம் உண்டு! தும்பைப் பூவைப் பற்றி சிலாகிக்கப்படும் சில தகவல்களைப் பார்ப்போம்.

”எங்க பாட்டி தும்பைப்பூ மாதிரி இட்லி சுட்டுத் தருவாங்க… நிறம் மட்டுமில்ல, அவ்வளவு சாஃப்டா இருக்கும்” என்று சிலாகிப்பவர்களைப் பார்த்திருப்போம்.

‘அவர்கள் வீட்டு விருந்தில் தும்பைப்பூவின் நிறத்தில் சோறு பரிமாறப்பட்டது. கூடவே வீட்டு நெய்யும் ஊற்றப்பட்டது’ என்று சிறுகதை ஒன்றில் பார்த்த வரிகளையும் இங்கே சொல்லியாக வேண்டும்.

‘தும்பைப்பூ மாதிரி இட்லி மட்டுமில்லீங்க, இந்தப்பூவை வச்சு முறுக்குகூட சுடுவோம்’னு ஒரு பெண்மணி சொன்னதையும் இங்கே பகிர விரும்புகிறேன்.

கடைசியாக ஒரு தகவலையும் சொல்ல வேண்டும். ‘தும்பைச் செடியில போய் தொங்கிட்டு சாவு’ என்று சிலர் கேலி பேசுவதையும் கேட்டிருப்போம்.

கெட்ட சக்தி அல்லது எதிர்மறை அம்சங்கள் உள்ள இடங்களில் தும்பை வளராமல் துவண்டு விடும்!

‘ஒரு வீட்டில் தும்பை வளர்க்கும் போது நன்கு துளிர்த்து வளர்கிறது என்றால், அங்கு பாசிடிவ் எனர்ஜி சிறப்பாக உள்ளது என அறிந்து கொள்ள முடியும்’ எனச் சொல்லப்படுவதுண்டு!

தும்பைப் பூவின் அருமை பெருமைகளை இத்தனை சிலாகித்து சொன்னாலும், அது குப்பையில் கேட்பாரற்றுக் கிடக்கிறது.

அதன் மருத்துவ குணங்கள் பற்றி நாம் அறிந்தோமேயானால் நிச்சயம் தும்பைச் செடியை நாம் தேடிப்பிடித்து எடுத்து வந்து பயன்படுத்துவோம்.

மழைக் காலத்தில் செழித்து வளரக்கூடிய தும்பைச் செடி மழைக்கால நோய்களைப் போக்க பயன்படும். குளிர்ச்சியான சூழல் நிலவும் மழைக்காலத்தில் தலைவலி, தலைபாரம் என பலரும் அவதிப்படுவதை பார்க்க முடியும்.

இது போன்ற நேரங்களில் தும்பைப் பூவை எடுத்துவந்து அதை பசும்பால் விட்டு அரைத்து, ஒரு மெல்லிய துணியில் தடவி நெற்றிப் பகுதியில் ஒரு பற்று மாதிரி போட்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

ஜலதோஷம், இருமலால் அவதிப்படுபவர்கள் தும்பைப் பூவை நீர் விட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி குடித்தால் பலன் கிடைக்கும்.

பாலில் சேர்த்தும் கொதிக்க வைத்து மூலிகைப்பால் அருந்தினாலும் சளி தொடர்பான பிரச்சினைகள் சரியாகும்.

சைனஸ் எனப்படும் பீனிசம் ஏற்பட்டு மூக்கில் ரத்தம் வடிந்தால் தும்பைப் பூவையும், தும்பை இலையையும் சம அளவு எடுத்து கசக்கி சாறு பிழிந்து இரண்டு சொட்டு வீதம் காலை, மாலை வேளைகளில் மூக்கின் உள்ளே விட்டு வந்தால் பலன் கிடைக்கும். இல்லையென்றால், ஒரு துணியில் நனைத்து மூக்கில் வைத்து சுவாசிக்கலாம்.

தும்பைப் பூவை நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தேய்த்து வெந்நீரில் குளித்தால் தலைபாரம், சளி தொடர்பான நோய்களிலிருந்து விடுபடலாம்.

விஷப் பூச்சிகள் கடித்தால் உடனே தும்பை இலை மற்றும் தும்பைப் பூவைக் கொண்டு ஒரு மருந்து செய்து பலன் பெறலாம். இது முதலுதவியாகவோ அல்லது முழு பலன் தரக்கூடியதாகவோகூட இருக்கலாம்.

கைப்பிடி தும்பை இலை அதே அளவு தும்பைப் பூவை எடுத்து அரைத்து சாறு எடுத்து கால் டம்ளர் அளவு குடிக்க வேண்டும். அதே போல் தும்பை இலை மற்றும் பூவை அரைத்து பூச்சி கடித்த இடத்தில் கனமாக பற்று போட வேண்டும்.

எந்த மாதிரியான விஷப்பூச்சிகள் கடித்தாலும் இதைச் செய்தால் விஷம் முறிந்து விடும். இரவு நேரங்களில் எங்கே போய் தேடுவது என்று நீங்கள் நினைக்கலாம்.

பொதுவாக எல்லா இடங்களிலும் தானாக வளர்ந்து கிடக்கும் இந்த மூலிகையை முதலில் அடையாளம் காணுங்கள்.

அதற்கடுத்து அது எந்த இடத்தில் வளர்ந்திருக்கிறது என்பதை தெரிந்து கொண்டால், அவசரத்துக்கு உதவும். பாம்பு கடிக்கும் கூட இதே முறையைப் பின்பற்றி உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் காப்பாற்றியிருக்கிறார்கள்.

ஏற்கெனவே சொன்னது போன்று ஒரு முதலுதவியாகக்கூட இதைச் செய்யலாம்.

சொறி, சிரங்கு, நமைச்சல், கொப்புளம் போன்ற தோல் நோயால் அவதிப்படுபவர்கள் தும்பை இலை மற்றும் பூவை சம அளவு எடுத்து கல் உப்பு சேர்த்து மையாக அரைத்துப் பூசி ஒரு மணி நேரம் உலரவிட வேண்டும்.

அதன்பிறகு சீயக்காய் தேய்த்துக் குளித்தால் பிரச்சினை சரியாகும். இதை தொடர்ந்து 5 நாட்கள் செய்துவந்தால் பலன் கிடைக்கும்.

மஞ்சள் காமாலை குணமாக;

மஞ்சள் காமாலையைக் குணமாக்குவதற்கும் தும்பை பயன் படுத்தப்படுகிறது. தும்பை இலையுடன் கீழாநெல்லி மற்றும் மஞ்சள் கரிசலாங்கன்ணி இலைகளை சம அளவு எடுத்து அரைத்து பாக்கு அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதை ஒரு டம்ளர் பசும்பாலில் கலந்து தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் பலன் கிடைக்கும். அந்த நாட்களில் உப்பு, புளி இல்லாத உணவு உண்டால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

குழந்தைகளுக்கு தொண்டையில் கட்டியிருக்கும் கோழையை அகற்றுவதற்கு தும்பைப்பூவில் ஒரு மருந்து தயாரித்து கொடுக்கலாம். 25 தும்பைப் பூக்களை அரை டம்ளர் பசும்பாலில் ஒரு மணி நேரம் ஊறவைத்து வடிகட்டிக் கொடுத்தால் கோழை அகலும்.

விக்கல் விலக;

விக்கல் சிலரை பாடாய்ப்படுத்தி எடுத்து விடும். அதற்கு என்னென்னவோ சிகிச்சை மேற்கொண்டும் பலன் தராத நிலையில் தும்பைப்பூ பலன் தரும்.

தும்பைப் பூவை பசும்பால் விட்டு அரைத்து சாப்பிட்டால் விக்கல் நிற்கும். ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுபவர்கள் தும்பையின் முழுச் செடியையும் நீர் விட்டு கொதிக்கவைத்து ஆவி (வேது) பிடித்தால் பலன் கிடைக்கும்.

தும்பை இலையை நீர் விட்டு கொதிக்க வைத்துக் குடித்தால் வயிற்றுபொருமல், வயிற்றுவலி, மாந்தம் சரியாகும். 

இதயம் பலவீனமாக உள்ளவர்கள் தும்பை இலைச்சாறு, முசுமுசுக்கை மற்றும் வல்லாரைச் சாறில் சீரகத்தை தனித்தனியாக ஊறவைத்து காயவைத்துப் பொடியாக்கி சாப்பிட்டால் பலன் கிடைக்கும்.

இதே போல் மாதவிடாய்க்கோளாறு, ஆண்மைக்குறை என பல பிரச்சினைகளைப் போக்க தும்பை பயன்படுத்தப்படுகிறது.

கட்டுரையாளர்; எம்.மரிய பெல்சின், இயற்கை வழி மருத்துவர், மூத்த பத்திரிகையாளர்.

நன்றி: அறம் இணைய இதழ்

You might also like