உச்சநீதிமன்றம் அறிவுரை
கடந்த 2016-ம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹா் பகுதியில் ஒரு பெண்ணையும், அவரின் மகளையும் சிலா் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்தனா்.
இந்தக் குற்றச் சம்பவம் மாநில அரசுக்கு எதிராக நடைபெற்ற அரசியல் சதி என அப்போதைய உத்தரப்பிரதேச அமைச்சரும், சமாஜ்வாதி கட்சியைச் சோ்ந்தவருமான ஆசம்கான் தெரிவித்தார்.
அவரின் கருத்து சா்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவா் மீது வழக்குப் பதிவு செய்ய, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.ஏ.நசீா் தலைமையிலான அமா்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், மக்கள் பிரதிநிதிகளின் வெறுப்புணா்வு பேச்சுகள் கணிசமாக உயா்ந்துள்ளது என்று தெரிவித்தார்.
அண்மையில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவின் தோற்றம் குறித்து மேற்குவங்க அமைச்சா் அகில்கிரி ஏளனமாக பேசியதையும் அவா் குறிப்பிட்டார்.
இதைத் தொடா்ந்து நீதிபதிகள் அளித்த விளக்கத்தில், “பொறுப்புமிக்க பதவிகளில் இருப்போர் பிறா் பாதிக்கப்படும் வகையில் பேசுகின்றனா்.
இதை கண்காணிக்க ஒருவருமில்லை என்பதால் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பேசிவிட்டு தண்டனையில் இருந்து தப்புகின்றனா்.
மக்கள் பிரதிநிதிகளுக்கான நடத்தை விதிமுறைகளை நீதிமன்றம் வழங்க வேண்டியதில்லை.
அதேவேளையில், மக்கள் பிரதிநிதிகள் அல்லது அரசுப் பணியில் இருப்பவா்கள் சுய கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும்.
சக குடிமக்களை இழிவுபடுத்தும் வகையில் எதையும் கூறக் கூடாது என்பது எழுதப்படாத விதி” என்று அறிவுறுத்தினர்.