தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் சிறந்த சாதனைகளைப் படைக்கும் வீரர்-வீராங்கனைகளுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் மத்திய அரசால் மிக உயரிய விருதான கேல் ரத்னா விருது வழங்கப்படுகிறது.
இதேபோல் அர்ஜுனா விருது, துரோணாச்சாரியா விருது, தயான்சந்த் விருது ஆகிய விருதுகளும் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான விளையாட்டு விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு அளிக்கப்படுகிறது.
இதேபோல், அர்ஜூனா விருதுக்கு 25 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா, துப்பாக்கிச் சுடும் வீராங்கனை இளவேனில் வாலறிவன், பேட்மிண்டன் வீரர் லக்ஷயாசென், எச்.எஸ்.பிரனோய் உள்பட 25 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், வாழ்நாள் சாதனையாளர் விருது, புரஸ்கார் விருது உள்ளிட்டவையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய விருது வழங்கும் விழா இம்மாதம் 30-ம் தேதி நடைபெறும் என விளையாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.