மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை பொதுப் பட்டியலுக்கு மாற்றி நிறைவேற்றப்பட்ட அரசியல் சாசன திருத்தத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ‘அறம் செய்ய விரும்பு’ அறக்கட்டளை சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், சுந்தர், செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதாடினார். அப்போது, “எந்த நோக்கத்துக்காக, அரசியல் சாசன திருத்தம் மேற்கொள்ளப்பட்டது என்பதை தெரிவிக்கவில்லை. கல்வி, மாநில அரசு சம்பந்தப்பட்டது. அதை பொதுப் பட்டியலில் சேர்த்தது கூட்டாட்சி கொள்கைக்கு எதிரானது.
கல்வி சம்பந்தமாக மாநில அரசு இயற்றும் சட்டங்களை மத்திய அரசு செல்லாததாக ஆக்க முடியும் என்பதால் இந்தத் திருத்தம் கூட்டாட்சிக்கு எதிரானது.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலான என்.சி.இ.ஆர்.டி., பாடத்திட்ட அடிப்படையில் மாநில பாடத்திட்டத்தை வகுக்க அறிவுறுத்தப்பட்டதும் கூட்டாட்சி கொள்கைக்கு விரோதமானது.
பொதுப் பட்டியலில் கல்வி இருப்பது அதன் நலனுக்கு எதிரானது என்பதால் அரசியல் சாசன திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்” என வாதங்களை முன் வைத்தார்.
தமிழக அரசு தரப்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “குழந்தையின் கல்வி குறித்து, பெற்றோர் தான் அக்கறை கொள்வர். தன் குழந்தையை எந்த மொழியில் படிக்க வைக்கலாம் என்பதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
குழந்தைகள் தாய் மொழியில் கல்வி கற்க வேண்டும். அவர்களுக்குத் தெரியாத மொழியில் கல்வியை திணிப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது.
உயர் கல்வியின் தரம் குறித்து தீர்மானிக்க மட்டுமே மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. மத்திய அரசின் தலைமை செயலகம் அமைந்துள்ள டில்லியில் இருந்து குழந்தைகள் குறிப்பிட்ட மொழியில் தான் கல்வி கற்க வேண்டும்என முடிவெடுக்க முடியாது. மருத்துவப் படிப்பு ஹிந்தியில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அனுமதித்தால் ஒரு நாள் தமிழக மாணவர்களும் ஹிந்தியில் மருத்துவம் படிக்க வேண்டி வரும்.
இந்தியாவில் மாநிலத்துக்கு மாநிலம் வெவ்வேறு கலாச்சாரம் உள்ளது. எந்த பாடத்திட்டத்தில் குழந்தைகள் படிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு உள்ளது.
ஒவ்வொரு மாநிலத்துக்கும் தன்னாட்சி அந்தஸ்து உள்ளது என்பதால் மாநிலத்தின் கல்வி குறித்து முடிவெடுக்க அந்தந்த மாநில அரசுகளுக்கே தகுதி உள்ளது” எனக் கூறினார்.
இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் டிசம்பர் 9-க்கு தள்ளி வைத்தனர்.