– ஐ.சி.சி., அறிவிப்பு
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் கிரிக்கெட் வீரர், வீராங்கனைக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
கடந்த அக்டோபர் மாதம் சிறப்பாக செயல்பட்ட ‘டாப்-3’ வீரர், வீராங்கனைகளுக்கான பரிந்துரை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது.
சிறந்த வீரருக்கான விருதுக்கு இந்தியாவின் விராத் கோஹ்லி, தென் ஆப்ரிக்காவின் டேவிட் மில்லர், ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராஜா பரிந்துரைக்கப்பட்டனர்.
இதில் கோஹ்லி, சிறந்த வீரராக அறிவிக்கப்பட்டார். கடந்த மாதம் விளையாடிய 4 ‘டி-20 போட்டியில், 205 ரன்கள் குவித்தார். இதில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 82 ரன்களும், நெதர்லாந்துக்கு எதிராக 62 ரன்களும் எடுத்து வெற்றி தேடித் தந்தார். இதன்மூலம் கோஹ்லி, முதன்முறையாக இவ்விருதுக்கு தேர்வானார்.
இதுகுறித்து பேசிய கோஹ்லி, ”முதன்முறையாக ஐ.சி.சி., சிறந்த வீரராக தேர்வானதில் மகிழ்ச்சி. இவ்விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட மற்ற வீரர்களுக்கும், போட்டியில் எனக்கு ஒத்துழைப்பு தந்த சகவீரர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
சிறந்த வீராங்கனைக்கான விருதுக்கு இந்தியாவின் ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா, பாகிஸ்தான் ‘ஆல்-ரவுண்டர்’ நிடா தர் பரிந்துரைக்கப்பட்டனர். இதில் நிடா தர், சிறந்த வீராங்கனையாக அறிவிக்கப்பட்டார்.