பாலையாவின் உடல் மொழி புது ரகம். அவரின் பார்வை உருட்டல், மிரட்டும். கொஞ்சம் சிரிப்பு சேர்த்த இவரின் வில்லத்தனம், சினிமாவுக்குப் போட்டது புதிய பாதை.
‘பாகப்பிரிவினை’ படத்தில், சிவாஜி, எஸ்.வி.சுப்பையா, எம்.ஆர்.ராதா, நம்பியார் முதலானோருடன் பாலையாவும் நடித்தார்.
ஆனால் சுப்பையாவின் அண்ணனாகவும் சிவாஜியின் பெரியப்பாவாகவும் தன் தேர்ந்த நடிப்பால், அருமையான குணச்சித்திரக் கதாபாத்திரத்தில் நெகிழச் செய்திருப்பார் பாலையா.
அந்த காலகட்டத்தில்தான், இயக்குநர் ஸ்ரீதர் புதிய முயற்சியில் இறங்கினார். ஸ்ரீதர் படமென்றாலே காதல் படம், சோகப் படம், சீரியஸ் படம் என்றே இருந்தது. ‘ஒரு காமெடிப் படம் எடுத்தால் என்ன?’ என்று தோன்றியதன் விளைவு… காதலிக்க நேரமில்லை’.
முத்துராமன், ரவிச்சந்திரன், நாகேஷ் எனப் பலரும் நடித்திருந்தார்கள். ஆனாலும் டைட்டிலில் முதலில் இடம் பெற்றது… டி.எஸ்.பாலையாவின் பெயர்.
படம் முழுக்க முத்துராமன் வர மாட்டார். ரவிச்சந்திரன் வரமாட்டார். நாகேஷ் வரமாட்டார்.
ஆனால், முத்துராமனுடன், நாகேஷுடன், ரவிச்சந்திரனுடன், வி.எஸ்.ராகவனுடன், காஞ்சனா – ராஜஸ்ரீயுடன் என படம் நெடுக வலம் வருவார். நம் வயிறைப் பதம் பார்ப்பார்.
வாக்கிங் ஸ்டிக்கை பிடித்துக் கொண்டு, வேஷ்டியை பிடித்துக் கொண்டு, இந்தப் பக்கம் குதித்து, அந்தப் பக்கம் குதித்து, பாலையா செய்த சேட்டைகள்… சிரித்துச் சிரித்து கண்ணீரே வந்துவிடும் நமக்கு.
‘அசோகர் உங்க மகருங்களா?’, ‘அவர் பாக்கெட்ல நாலஞ்சு கப்பல் ஓடுது, கப்பல் ஓடுது’ என்பாரே… ‘பெத்த தகப்பன் கேக்கறேன், பெத்த தகப்பன் கேக்கறேன்’ என்பன போன்ற பல இடங்கள்… நடிப்பில் உச்சம் தொட்டிருப்பார்.
தியேட்டரில் எத்தனை முறை பார்த்தோம் என்று கணக்கில் வைத்துக்கொள்ளவே இல்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் பாலையாவுக்காகவே படம் பார்த்தவர்கள்தான் ஏராளம்.
அந்த கதை சொல்லும் காமெடியின் போது, படம் பார்க்கிறவர்கள், நாகேஷைப் பார்க்கவே மாட்டார்கள். பாலையாவின் முகத்தையும் எக்ஸ்பிரஷனையுமே பார்த்துச் சிரிப்பார்கள்.
ஊட்டி வரை உறவு’ படத்தில் சிவாஜியின் அப்பாவாக படம் முழுக்க காமெடியில் தனி ராஜாங்கம் நடத்தியிருப்பார்.
ஒரு பக்கம் மனைவியை சமாளித்து, இன்னொரு பக்கம் மகனை சமாளித்து, அடுத்து கே.ஆர்.விஜயாவை சமாளித்து, நடுவே நாகேஷை சமாளித்து என காமெடிக் கபடி ஆடியிருப்பார் பாலையா.
கர்வம், ஆணவம், செருக்கு, இறுமாப்பு, அலட்டல் ஆகியவற்றையெல்லாம் ஒருங்கே கொண்டு வந்த ‘திருவிளையாடல்’ ஹேமநாத பாகவதர், பாலையா எடுத்த புது ஸ்டைல் அவதாரம்.
பாலசந்தரின் ‘பாமா விஜயம்’ படத்தில் மூன்று மகன்களையும் மருமகள்களையும் கவனிக்கிற, கவனித்துப் பொருமுகிற, கிண்டலடிக்கிற கேரக்டரை ரொம்ப அசால்ட்டாகச் செய்திருப்பார். ‘வரவு எட்டணா’வை பாடலில் இவரின் உடல் மொழி அசாத்தியமானது.
தில்லானா மோகனாம்பாள்’ சிவாஜியையும் நாகஸ்வரத்தையும் பத்மினியையும் தில்லானாவையும் மறக்கவே முடியாது.
அப்படித்தான் பாலையாவையும் மேளத்தையும் எப்படி மறக்கமுடியும்?
‘திருவாரூர் வரை போயிட்டு வரேன்’ என்பார் சிவாஜி. ‘தம்பி நானும் வரேன் தம்பி’ என்றார் பாலையா.
‘அங்கே எனக்கு பீடாக்கடைக்காரனைத் தெரியும்ணே’ என்பார் சிவாஜி.
சட்டென்று இவர் ‘எனக்கு சோடாக்கடைக்காரனைத் தெரியும்’ என்பார்.
ஆஸ்பத்திரியில் ஒரு நர்ஸ் போவார். அவர் பின்னே சென்று வாசம் பிடிப்பார். இன்னொரு இடத்தில் ‘என்ன… ஆட்டம் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு’ என்பார்.
‘ஒண்ணுமில்ல தம்பி, பித்த உடம்பா, கப்புன்னு தூக்கிருச்சு’ என்பார்.
எல்லாவற்றுக்கும் மேலாக, ‘நலந்தானா’ பாட்டில் சிவாஜி வாசித்துக் கொண்டே இருக்கும் போது, அந்த வாசிப்பில் நெகிழ்ந்து வியந்து, சிவாஜியை அப்படி லேசாகத்தொடுவார். நாம் மனம் விகசித்துப் போய்விடுவோம்.
பாலையா என்றுமே ஒரு மகத்தான கலைஞர்.
– நன்றி: முகநூல் பதிவு