கவிஞர் கண்னதாசனும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனும் திரையுலகின் சாகாவரம் பெற்ற சகாப்தங்கள்.
நாணம், நகைச்சுவை, அச்சம், வெறுப்பு, சாந்தம், வியப்பு, கருணை, கோபம், வீரம், காதல், மகிழ்ச்சி, அன்பு, சோகம், பாசம், பரவசம், பிறப்பு, இறப்பு, தாய்மை, தனிமை, நட்பு, போட்டி, எழுச்சி, நாட்டுப்பற்று, நையாண்டி என மனித உணர்வுகள் அனைத்தையும் தனது பாடல்களில் பிரதிபலித்தவர்கள்.
பலவிதமான கதைக் களங்களை மையமாகக் கொண்டு உருவான திரைப்படங்களுக்கு தங்களின் பாடல்கள் மூலம் உயிரூட்டியவர்கள்.
ஒரு பாடல் கேட்பவர்களின் காதுகளில் நுழைந்து இதயத்தில் பதிந்துவிட்டதென்றால் அந்தப் பாடலுக்குத் தெய்வத்தன்மை கிடைத்து விட்டதென்றுதான் சொல்ல வேண்டும். அது என்றும் அழியாதது.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வியும் கண்ணதாசனும் இணைந்து படைத்த ‘ஶ்ரீகிருஷ்ண கானம்’ அப்படி அமரத்துவம் பெற்ற ஒரு தொகுப்பாகும். எங்கோ ஒரு மூலையில் அந்தப்பாடல்கள் ஒலித்துக்கொண்டுதானிருக்கும்.
அந்தப் பாடல் தொகுப்புக்கு இன்னொரு சிறப்பம்சமும் உண்டு. தமிழின் புகழ்பெற்ற பாடகர்கள் எட்டு பேரின் குரல்களில் ஒலித்து எட்டுவிதமான சுவையை வெளிப்படுத்தின.
ஸ்ரீகிருஷ்ண கானம் வெளியான காலகட்டத்தில் அதைக் கேட்டு மயங்காதவர்களே இல்லை. கண்ணதாசன், கிருஷ்ண பக்தியின் உச்சமாகத் திகழும் ஆழ்வார்களின் பாடல்களையும், பாகவதத்தையும் உள்வாங்கி தமிழில் பாடல்களாக்கினார்.
இந்தத் தொகுப்பில் உள்ள ‘புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே’ என்னும் டி.எம்.சௌந்தர்ராஜனின் குரலில் ஒலிக்கும் பாடல் ஒட்டுமொத்தத் தமிழ் மக்களின் இதயத்தையும் கவர்ந்தவை.
அனைத்து ஆலயங்களிலும் ஒலிக்கும் பாடல்களாக இந்தத் தொகுப்பின் பாடல்கள் திகழ்ந்தன.
‘கோகுலத்துப் பசுக்கள் எல்லாம்…’ என்னும் ஜானகியின் குரலில் அமைந்த பாடலில் ஒரு கோபிகையாகவே கண்ணதாசன் மாறிப் பாடல் புனைந்திருப்பார்.
கண்ணதாசனின் இந்த வைர வரிகளுக்கெல்லாம் மிகவும் அற்புதமாக இசையமைத்து ஒரு தெய்விக அனுபவத்தில் நம்மை ஆழ்த்தியிருப்பார் எம்.எஸ்.வி.
இருவரின் கூட்டணியில் திரையிசையில் உருவான பக்திப் பாடல்கள் குறித்து லஷ்மணிடம் கேட்டோம்.
“தமிழ் திரையிசைப் பாடல்களுள் என்றும் நிலைத்து நிற்கும் வல்லமை கொண்டது கர்ணன் படத்தில் வெளியான ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ பாடல். எம்.எஸ்.வி மற்றும் கண்ணதாசன் இணைந்து உருவான சாக வரம் பெற்ற இந்தப் பாடல் தமிழ் உள்ளவரை நிலைத்து நிற்கும் தன்மை கொண்டது.
இதற்குக் குரல் கொடுத்திருக்கும் சீர்காழி கோவிந்தராஜன் இந்தப் பாடலின் ஜீவனைத் தன் குரலில் வெளிப்படுத்தியிருப்பார்.
‘வருவான் வடிவேலன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற முருகன் பாடல் இன்றும், மலேசிய மண்ணில் தினமும் ஒலிக்கும் பாடலாக நிலைத்து நிற்கிறது.
‘பத்துமலை திரு முத்துக் குமரணை பார்த்து களித்திருப்போம், அவன் சத்திய கோவிலை காவடி தூக்கியே தன்னை மறந்திருப்போம், இந்துக் கடவுள் மலேசிய நாட்டினில் செந்தமிழ் பாடி நிற்போம்’ என்னும் அந்தப் பாடலைக் கேட்கும் போதே பக்தியும் தமிழ் உணர்வும் பொங்கிப் பெருகுவதை நம்மால் அனுபவிக்க முடியும்.
எம்.எஸ்.வி, கே.வி .மகாதேவன் அளவுக்குப் பக்திப் படங்களுக்கு அதிகம் இசையமைக்கவில்லையென்றாலும், ஜனரஞ்சகமான படங்களில் இவர்கள் இணைப்பில் வெளிவந்து புகழ்பெற்ற பாடல்கள் ஏராளம் உண்டு.
சிவாஜி, முத்துராமன், நாகேஷ் மூவரும் இணைந்து நடித்த, ‘மூன்று தெய்வங்கள்’ படத்தின் பாடல் கவிஞர் கண்ணதாசனின் வாழ்க்கையையும் சிவாஜிகணேசனின் வாழ்க்கையையும் பிரதிபலிக்கும் விதமாக இருந்தது.
திருப்பதி சென்று திரும்பிவந்தால் – ஓர் திருப்பம் நேருமடா, உந்தன் விருப்பம் கூடுமடா” என்னும் அந்தப்பாடல் கேட்பவர்களை பக்தியில் மூழ்கடிக்கும் பாடலாக உருவானது.
ஆண்டவன் கட்டளை படத்தில் முருகனின் அறுபடை வீடுகளுக்கும் சிவாஜி பயணிக்கும் விதமாக இடம்பெற்ற ‘ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு’ என்னும் பாடல் தத்துவத்திலும் ஆன்மிகத்திலும் செறிவான கருத்துக்களைக் கொண்ட பாடலாக மலர்ந்தது.
பாவமன்னிப்பு படத்தில் இடம்பெற்ற, ”எல்லோரும் கொண்டாடுவோம்’ பாடல் காலங்களை கடந்து நிற்கும் ஒரு பாடலாக அமைந்தது.
இதே போன்று, ‘கண்ணே பாப்பா’ படத்தில் இடம்பெற்ற ‘சத்திய முத்திரை கட்டளை இட்டது’ என்னும் பாடலும் கிறிஸ்துவின் மகிமையைச் சொல்லும் பாடலாக விளங்கியது.
இப்படி கவிஞரும் எம்.எஸ்.வியும் இணைந்து இயற்றிய பாடல்கள் உலகம் உள்ள அளவும் ஒலித்துக்கொண்டே இருக்கும். அவர்களின் புகழைப் பாடிக்கொண்டே இருக்கும்” என்றார்.
– நன்றி: முகநூல் பதிவு