எதையும் சாதிக்க நினைப்பவர்களுக்கு சிறந்த ஆயுதம் நிதானம் என்பதை நிஜ வாழ்க்கையில் நன்கு அனுபவித்து அறிந்திருந்தவர் கவியரசர் கண்ணதாசன்.
எதிர்பாராத நேரத்தில் எடக்கு மடக்கான கேள்வியை யாராவது கேட்டு விட்டால், கோபம்தான் வரும் நமக்கு.
ஆனால் கவியரசர் கண்ணதாசனிடம், அவர் கொஞ்சமும் எதிர்பார்த்திராத நேரத்தில், இப்படி ஒரு எடக்கு மடக்கான கேள்வியை ஒருவர் கேட்டு விட்டாராம்.
“காந்தி, நேரு போன்ற தலைவர்கள் எல்லாம், நாடு சுதந்திரம் அடைவதற்காக பாடுபட்டவர்கள், அதனால் அவர்கள் சுயசரிதை எழுதினார்கள். அது சரிதான். ஆனால் நீங்கள் எதற்காக சுயசரிதை எழுதுகிறீர்கள் ?”
கண்ணதாசன் மௌனமாக இருந்தார்.
கேள்வி கேட்டவருக்கு ஒரே ஆனந்தம். கண்ணதாசனையே மடக்கி விட்டோமே என்று!
சற்று நேர அமைதிக்குப் பின் கண்ணதாசன் சொன்ன பதில்:
“காந்தி, நேரு போன்றவர்கள் ஒருவர் எப்படி வாழவேண்டும் என்பதற்காக எழுதினார்கள்.
ஆனால் நான் ஒருவர் எப்படி வாழக்கூடாது என்பதற்காக எழுதுகிறேன். இதிலென்ன தவறு இருக்கிறது?”
இப்போது மௌனமாகிப் போனார் கேள்வி கேட்டவர்.
“காற்றுக்கு இலைகள் அசைகின்றன, மலர்கள் அசைகின்றன.
ஆனால் மலைகள் அசைவதில்லை.”
(இதுவும் கவியரசர் கண்ணதாசன் சொன்னதுதான்.)
– நன்றி: முகநூல் பதிவு