– தேங்காய் சீனிவாசன் பேட்டியிலிருந்து ஒரு பகுதி.
தேங்காய் சீனிவாசன் சொந்தமாக படம் எடுக்க ஆசைப்பட்டு எம்.ஜி.ஆரிடம் ஆலோசித்தார்.
‘‘சொந்தப் படம் எடுப்பது சாதாரண விஷயம் அல்ல. உனக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது. வேண்டாம்’’ என்று எம்.ஜி.ஆர். தடுத்தார்.
ஆனால், அதையும் மீறி படத் தயாரிப்பில் தேங்காய் சீனிவாசன் ஈடுபட்டார். அவர் கையில் இருந்த பணம் படப்பிடிப்பு செலவுகளுக்காக கரைந்துவிட்டது.
பணமும் புரட்ட முடியவில்லை. மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல், ராமாவரம் தோட்டம் சென்று எம்.ஜி.ஆரை சந்தித்து நிலைமையைச் சொன்னார்.
‘‘நான்தான் ஆரம்பத்திலேயே சொன்னேனே, கேட்டியா? பட்டால்தான் புத்தி வரும். போ… போ…’’ என்று எம்.ஜி.ஆர். கோபமாகப் பேசி அவரை அனுப்பிவிட்டார்.
இருந்த கடைசி நம்பிக்கையும் தகர்ந்துபோன நிலையில், ஏமாற்றமும் சோகமுமாய் நெடுநேரம் கழித்து இரவில் வீடு திரும்பினார்.
அங்கே தேங்காய் சீனிவாசனுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. தனது உதவியாளர்கள் மூலம் பெரும் தொகையை அவர் வீட்டுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்து அனுப்பியிருந்தார்.
விஷயம் அறிந்து, எம்.ஜி.ஆரிடம் மன்னிப்பு கோரியதுடன், உதவிக்காக கண்களில் நீர்மல்க நன்றியும் தெரிவித்தார் தேங்காய் சீனிவாசன்!
‘நினைத்ததை முடிப்பவன்’ படத்தில், கிராமத்தில் இருந்து வரும் எம்.ஜி.ஆர்., தன்னைப் போலவே உருவ ஒற்றுமை உள்ள மற்றவரைப் போல நடிக்க வேண்டிய நிலை.
அடுக்கு மாடி ஒன்றில் இருந்து கீழே பார்க்கும் எம்.ஜி.ஆர்., அங்கு சுக்கு காப்பி விற்றுக் கொண்டிருக்கும் தேங்காய் சீனிவாசனை மேலே அழைப்பார்.
படத்தில் இருவருக்கும் ஏற்கெனவே அறிமுகம்.
தனக்கு ஆரம்பத்தில் காசே வாங்காமல் சுக்கு காப்பி கொடுத்த தேங்காய் சீனிவாசனுக்கு 500 ரூபாய்க்கு காசோலை கொடுக்குமாறு நடிகை லதாவிடம் சொல்வார் எம்.ஜி.ஆர்.! அப்போது அது பெரிய தொகை.
பணம் கிடைத்த மகிழ்ச்சியில் வியாபாரம் செய்யும் சுக்கு காபி வைத்திருக்கும் தூக்கை மறந்துவிட்டு செல்லும் தேங்காய் சீனிவாசனிடம், ‘‘பணம் வந்ததும் பழசை மறந்துட்ட பாத்தியா?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்பார்.
தனது தவறை ஒப்புக்கொள்ளும் தேங்காய் சீனிவாசன், எம்.ஜி.ஆரிடம், ‘‘நீ கில்லாடி துரை. அடுக்குமாடிக்கு வந்தாலும் பழசை மறக்காம ஸ்டெடியா இருக்கே. இப்படியே இரு துரை’’ என்று வாழ்த்துவார்.
நிஜ வாழ்க்கையிலும் இறுதி வரை அப்படியேதான் இருந்தார் எம்.ஜி.ஆர்.!
– நன்றி: தி இந்து இதழ்