ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
உச்சநீதிமன்றத்துக்கு கடந்த ஆண்டு நவம்பா் 9-ம் தேதி கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது.
அதில், “ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு போதைப் பொருள்கள் கடத்துவது அதிகரித்துள்ளது. எனவே, சா்வதேச மற்றும் உள்நாட்டிலுள்ள போதைப்பொருள் கும்பல் தொடா்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அமைக்க உத்தரவிட வேண்டும்” என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த கடிதம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்து விசாரணை நடத்த அப்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா உத்தரவிட்டார்.
அதனடிப்படையில், நாட்டில் போதைப் பொருள் கடத்தல் கும்பலைக் கட்டுப்படுத்துதல் என்ற தலைப்பில் வழக்காக பதிந்து விசாரணை நடத்தி வரும் உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவுமாறு கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டியை கேட்டுக்கொண்டது.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி பெலா திரிவேதி ஆகியோர் அடங்கிய அமா்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, “இந்த விஷயம் தொடா்பாக ஒன்றிய அரசு உரிய ஆலோசனை மேற்கொண்டு, உரிய உத்தரவைப் பிறப்பிக்கும் வகையில் உகந்த தீா்வை உருவாக்கி சமா்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 5 வாரங்களுக்குப் பிறகு ஒத்திவைத்தனா்.