நீட் தேர்வு வழக்கு 12 வாரங்களுக்கு ஒத்திவைப்பு!

– உச்சநீதிமன்றம் உத்தரவு

நீட் தேர்வை கட்டாயமாக்கி கடந்த 2017, 2018-ம் ஆண்டில் இந்திய மருத்துவ கவுன்சிலின் சட்டத்திருத்தத்துக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, சி.டி.ரவிக்குமார் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டும் எனக்கோரி தமிழக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை கடிதம் கொடுக்கப்பட்டது.

அதில், ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட ஆய்வு குழு கொடுத்த அறிக்கையின் அடிப்பையில் தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு கோருவதற்காக,“மருத்துவப் படிப்புகளுக்கான தமிழ்நாடு மாணவர் சேர்க்கை 2021” என்ற மசோதா தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

அந்த மசோதா குடியரசுத் தலைவர் முன்பு பரிசீலனையில் உள்ளதால், இந்த வழக்கை 12 வாரம் ஒத்திவைக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

தமிழக அரசு வக்கீல் ஜோசப் அரிஸ்டாட்டில் நீதிபதிகள் முன்பு ஆஜராகி வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என கோரினார்.

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி அஜய் ரஸ்தோஹி தலைமையிலான அமர்வு, நீட் வழக்கை 12 வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

முன்னதாக, நீட் தேர்வை கட்டாயமாக்கி கடந்த 2017, 2018-ம் ஆண்டில் இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் இந்திய பல் மருத்துவ கவுன்சிலின் சட்டத் திருத்தத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கடந்த 2020-ல் ரிட் மனு தாக்கல் செய்திருந்தது.

அதில், மருத்துவப் படிப்புக்கு சேர நீட் தேர்வைக் கட்டாயமாக்கி சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளதால், மாணவர்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர் என்று கூறப்பட்டிருந்தது. 

You might also like