“இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியுடன் நான் ஓய்வு பெறப் போகிறேன்” – என அர்ஜென்டினா நாட்டின் கால்பந்து வீரரான லயோனல் மெஸ்ஸி வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பால் ஒட்டுமொத்த கால்பந்து ரசிகர்களும் ஸ்தம்பித்து நிற்கிறார்கள்.
கிரிக்கெட் கடவுளாக எப்படி நாம் சச்சினை கொண்டாடினோமோ, அதேபோல் சர்வதேச அளவில் கால்பந்து ரசிகர்கள் மெஸ்ஸியைக் கொண்டாடி வருவதே இதற்கு காரணம்.
அவர் இல்லாத கால்பந்து விளையாட்டை நினைத்துக்கூட பார்க்க முடியாமல் தவிக்கிறார்கள் ரசிகர்கள்.
35 வயதான லயோனல் மெஸ்ஸிக்கு புகழ்சேர்க்கும் விஷயங்கள் பல இருக்கின்றன.
சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்களை அடித்த தென் அமெரிக்க வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ள மெஸ்ஸி, கிளப் கால்பந்து உள்பட தான் பங்கேற்ற போட்டிகளில் இதுவரை 759 கோல்களை அடித்துள்ளார்.
அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் வரிசையில் இப்போதைக்கு இவர்தான் உலகின் நம்பர் 1. ஆண்டொன்றுக்கு 130 மில்லியன் அமெரிக்க டாலர்களைச் சம்பாதிக்கிறார்.
சிறந்த கால்பந்து வீரருக்கான பிஃபா விருதை 7 முறை வென்றுள்ளார்.
இப்படி பல சாதனைகளைப் படைத்த லயோனல் மெஸ்ஸி, மிக நீண்ட போராட்டத்துக்குப் பிறகுதான் இந்த நிலையை அடைந்துள்ளார்.
மரடோனாவைப் போலவே உருவத்தில் குள்ளமாக இருக்கும் மெஸ்ஸியை ஒரு காலத்தில் தங்கள் அணியில் சேர்த்துக் கொள்ளவே பலரும் தயங்கியிருக்கிறார்கள்.
அர்ஜென்டினாவில் ரோசாரியோ நகரில் பிறந்த லயோனல் மெஸ்ஸி, சிறு வயது முதலே கிளப்புகளுக்கு ஆடும் அளவுக்கு தனது கால்பந்து திறமையை உயர்த்தியுள்ளார்.
ஆனால் இந்தச் சூழ்நிலையில் ஹார்மோன் டிபிஷியன்ஸி எனப்படும் வளர்ச்சிக் குறைபாடு நோய் மெஸ்ஸியை பாதித்தது.
இதனால் அவர் உயரமாக வளர்வது தடைபட்டது. அவர் வளரவேண்டுமானால் தினமும் ஒரு ஊசியைப் போடவேண்டும் என்று டாக்டர்கள் கூறினர். ஆனால் ஊசியை வாங்க மெஸ்ஸியின் அப்பாவிடம் காசு இல்லை.
“என் மகனை உங்கள் அணியில் சேர்த்துக்கொண்டு, அவன் சிகிச்சைக்கு பணம் கொடுத்து உதவுங்கள்” என்று பல கிளப்களின் மேனேஜர்களிடம் கெஞ்சினார் மெஸ்ஸியின் அப்பா.
ஆனால் அவரை அணியில் சேர்த்து பணம் கொடுத்து உதவ அர்ஜென்டினாவில் இருந்த பல கிளப்களும் மறுத்தன.
இந்த நிலையில்தான் பார்சிலோனா கால்பந்து கிளப்பின் இயக்குநரான கார்லோஸ் ரெக்சாக், மெஸ்ஸிக்கு உதவ முன்வந்தார். ஆனால் அப்படிச் செய்ய வேண்டுமானால் மெஸ்ஸி ஸ்பெயினுக்கு வந்து தங்கள் கிளப்புக்காக ஆடவேண்டும் என்று நிபந்தனை விதித்தார்.
இது தொடர்பாக உடனே ஒப்பந்தம் போட இரு தரப்பும் முடிவெடுத்தது. இதில் வேடிக்கை என்னவென்றால் ஒப்பந்தம் போட்டுக்கொள்ள அப்போது சரியான காகிதம் கிடைக்கவில்லை.
இதனால் அப்போது கையில் கிடைத்த ஒரு பேப்பர் நாப்கினில் இதற்கான ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டனர்.
உலகின் முன்னணி கால்பந்து வீரனாக உயர்ந்த நிலையிலும், அன்று தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பேப்பர் நாப்கினை இன்னும் பிரேம் போட்டு வீட்டில் பத்திரமாக வைத்துள்ளார் லயோனல் மெஸ்ஸி.
சர்வதேச கால்பந்து போட்டிகளிலும், கிளப் கால்பந்திலும் பல சாதனைகளைப் படைத்தாலும் லயோனல் மெஸ்ஸிக்கு ஒரு விஷயத்தில் மட்டும் வெற்றி கிடைக்கவில்லை. அது உலகக் கோப்பை.
இதுவரை 4 முறை அர்ஜென்டினா அணிக்காக உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் ஆடியுள்ள மெஸ்ஸியால் ஒரு முறைகூட அர்ஜென்டினா அணிக்காக அந்த உலகக் கோப்பையை வாங்கிக் கொடுக்க முடியவில்லை.
இந்தச் சூழலில் கத்தாரில் நடக்கவுள்ள உலகக் கோப்பை கால்பந்து தொடரில் தனது அணிக்கு எப்படியாவது அந்த கோப்பையை வாங்கிக்கொடுக்க வேண்டும் என்று துடிக்கிறார் மெஸ்ஸி.
அர்ஜென்டினா அணியும் தற்போதைய சூழலில் அவரது மனநிலைக்கு ஏற்ப சிறப்பாக ஆடி வருகிறது.
கடந்த 2021-ம் ஆண்டில் தங்கள் ஜென்ம வைரியான பிரேசில் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா, அதன்பிறகு நடந்த 35 போட்டிகளில் ஒன்றில்கூட தோற்கவில்லை. அந்த அணியின் இத்தகைய வேகம் எல்லோரையும் பிரமிக்க வைத்துள்ளது.
இந்த சூழலில், உலகக் கோப்பை கால்பந்து தொடருடன் தான் ஓய்வு பெறப் போவதாக மெஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பு, அந்த அணியின் வீரர்களுக்கு கூடுதல் வெறியை ஏற்றக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மெஸ்ஸிக்காக உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற வைராக்கியம் அந்த அணியின் வீரர்களுக்கு ஏற்படலாம்.
அது அந்த அணி உலகக் கோப்பையை வெல்ல ஒரு காரணமாக நிலவலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கிரிக்கெட் கடவுளான சச்சினுக்கு, தனது கடைசி உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாஅய்ப்பு கிடைத்தது.
அதுபோல் கால்பந்து கடவுளான மெஸ்ஸிக்கும் தன் கடைசி உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பு கிடைக்கிறதா என்று பார்ப்போம்.
சுதிர் P.M.
நன்றி: வாவ் தமிழா இணையதளம்