வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.5 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதன் மூலம் ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் 5.4% இருந்து 5.9 % மாக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ், இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து மீட்புத் திறன் கொண்டதாக இருக்கிறது என்றார்.
உலக அளவிலான அரசியல் சூழல், நிதிச் சந்தையில் உள்ள நிச்சயமற்ற தன்மையால் பணவீக்கம் அதிகரித்துள்ளதாகவும், நாட்டின் பணவீணக்கம் தற்போது 7% ஆக உள்ளது என்றும் அவர் கூறினார்.
நடப்பாண்டின் இரண்டாம் பாதியில் அது 6% இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறிய அவர், தனியார் நுகர்வு அதிகரித்து வருவதாகவும், கிராமப்புற தேவையும் படிப்படியாக அதிகரித்து வருகிறது என்றும் தெரிவித்தார்.
முதலீட்டுத் தேவை அதிகரித்துள்ளதாகவும், விவசாயத் துறையும் மீள்தன்மையுடன் உள்ளது என்றும் சக்திதாஸ் கூறினார்.
ரெப்போ வட்டி விகிதம் உயர்வு காரணமாக வங்கி தனிநபர் கடன், வாகன கடன் உள்ளிட்டவற்றின் வட்டி விகிதம் மேலும் உயர வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.