– அண்ணா
1967 தேர்தல் முடிவு வெளிவந்த வண்ணம் இருக்கிறது.
நுங்கம்பாக்கத்தில் உள்ள அண்ணாவின் வீட்டிலோ பெரும் குதூகலம். விருதுநகரில் காமராஜரை தி.மு.க. வேட்பாளர் சீனிவாசன் தோற்கடித்து விட்டார் என்ற தகவல் வரும்போது கட்சிக்காரர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள்.
அண்ணா கடும் கோபத்துடன் வெளியே வருகிறார். “உங்கள் ஆர்ப்பாட்டத்தை நிறுத்துங்கள். தோற்கக் கூடாத நேரத்தில் தோற்றிருக்கிறார் காமராஜர். இன்னொரு தமிழன் அவர் இருந்த இடத்திற்கு வருவதற்கு இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆகும்.
காமராஜரின் தோல்வி கொண்டாட்டத்திற்கு உரியது அல்ல. அது நம்முடைய தோல்வி” என்று சொல்லிவிட்டு, அறைக்குள் செல்கிறார்.
காமராஜரை வெற்றி கண்ட விருதுநகர் சீனிவாசன் அண்ணாவிடம் வாழ்த்துப் பெற வருகிறார். மொழிப்போரில் முன்னின்ற மாணவர் தலைவர் அவர்.
அண்ணா அவரிடம் சொல்கிறார்.
“வாழ்த்துகள் சீனிவாசா! தவறாக எண்ணாதே! உன்னுடைய வெற்றி தரும் மகிழ்ச்சியை விட, காமராஜரின் தோல்வி என்னை அதிகம் அழுத்துகிறது”
– ‘மாபெரும் தமிழ்க் கனவு’ இந்து தமிழ்த் திசை பதிப்பகம் வெளியிட்டிருக்கிற அண்ணாவைப் பற்றிய 800 பக்கங்கள் அடங்கிய நூலில் இருந்து ஒரு பகுதி.