எஸ்.வி.ரமணனை மறக்க முடியுமா?

பால்யத்தில் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய விஷயங்களை எளிதில் மறக்க முடியாது. அப்படி என் மனதில் பற்றிக்கொண்ட ஒன்று, 1996 தேர்தலுக்கு முன்பாக டிசம்பர் 11 மற்றும் 12-ம் தேதிகளில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ரஜினிகாந்தின் பேட்டி.

அப்போது ஆட்சியில் இருந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக, அப்பேட்டியில் பேசினார் ரஜினி. அந்த பேட்டியைக் கண்டவர் எஸ்.வி.ரமணன். அப்படித்தான் அவரை எனக்குத் தெரியும்.

மெதுமெதுவாக எஸ்.வி.ரமணன் குறித்து தேடுதலைத் தொடங்கியபோதுதான், ‘தமிழ் திரையுலகின் தந்தை’ என்று போற்றப்படுகிற கே.சுப்பிரமணியத்தின் பிள்ளைகளில் ஒருவர் என்பது தெரிய வந்தது.

நாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம், ஆவணப்படத் தயாரிப்பாளர் கிருஷ்ணசாமி, அபஸ்வரம் ராம்ஜி என்று இவரது உடன்பிறப்புகளும் தமிழ்நாடு முழுக்கத் தெரிந்த ஆளுமைகள்தான்.

தனித்துவமான வழி!

கே.சுப்பிரமணியத்தின் புதல்வராக இருந்தபோதும், ‘வாரிசு’ என்ற வகையில் இவர் திரையுலகத்தில் நுழைய ஆசைப்படவில்லை.

ஆர்மோனியம், பியானோ உள்ளிட்ட இசைக்கருவிகளை இசைக்கும் வல்லமை கொண்டவர் ரமணன். இசையமைப்பாளர் சலீல் சவுத்திரி இசையமைத்த ‘செம்மீன்’ (மலையாளம்), ‘ஜல்தீப்’ (இந்தி) ஆகிய படங்களில் அவருக்கு உதவியாளராகப் பணியாற்றியிருக்கிறார்.

’எதிர்பாராதது’, ‘கச்ச தேவயானி’, ’பாண்டித்தேவன்’ ஆகிய படங்களில் சி.என்.பாண்டுரங்கனுக்கு உதவியாக இருந்திருக்கிறார்.

ரமணன் முதன்முதலாக இசையமைப்பாளராக அறிமுகமான திரைப்படம் ‘யாருக்காக அழுதான்’. இப்படம் 1966-ம் ஆண்டு வெளியானது.

நாகேஷ், மேஜர் சுந்தர்ராஜன், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடித்த இப்படத்தை இயக்கியவர் எழுத்தாளர் ஜெயகாந்தன்.

இதற்குப் பிறகு, தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக வாய்ப்பு தேடும் முயற்சியில் இறங்கவில்லை ரமணன். அதற்குப் பதிலாக வானொலி நிகழ்ச்சிகள், விளம்பரப் படங்கள் என்று வேறு வழியில் இறங்கினார்.

பேஷ்.. பேஷ்..!

80ஸ் கிட்ஸ்களுக்கு ‘பேஷ் .. பேஷ் .. ரொம்ப நன்னாயிருக்கு’ என்று ‘நரசுஸ் காபி’ விளம்பரத்தில் வரும் நடிகர் உசிலைமணியின் குரலை மறக்க முடியாது. அந்த குரல் மட்டுமல்ல, அந்த விளம்பரப் படத்தை கொடுத்தவரும் ரமணன் தான்.

அதே போல, ‘விஜய் உரம்’ என்ற உர விளம்பரத்திற்காக ஒரு குச்சுப்புடி கலைஞரை புகழ் வெளிச்சத்திற்கு கொண்டுவந்தார்.

அவர்தான், கே.விஸ்வநாத் இயக்கிய ‘சங்கராபரணம்’ மூலமாக புகழ் பெற்ற நடிகை மஞ்சு பார்கவி.

எழுபதுகளில் விஜிபி தவணை திட்டத்திற்காக இவர் உருவாக்கிய ஒரு விளம்பரப் பாடலுக்காக இளையராஜா, கங்கை அமரன், மலேசியா வாசுதேவன் மூவரும் இணைந்து பணியாற்றியிருக்கின்றனர்.

தனது ‘ஜெயஸ்ரீ பிக்சர்ஸ்’ சார்பாக இது போன்று பல விளம்பரப் படங்களைத் தந்திருக்கிறார் ரமணன்.

வெறுமனே விளம்பரப் படத் தயாரிப்பாளர், இசைத் துணுக்குகள் தந்தவர் என்பது மட்டுமல்லாமல் திரைப்படத் தயாரிப்பு, இயக்கம், இசையமைப்பில் ஈடுபட்ட அனுபவமும் இவருக்கு உண்டு.

சென்னை தூர்தர்ஷனுக்கு நிகழ்த்து கலைகள், கோயில்கள், கட்டடங்கள் தொடர்பாக ஆவணப்படங்கள் பலவற்றையும் தந்திருக்கிறார்.

சென்னை தூர்தர்ஷனில் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் பதில் அளித்த வீடியோக்களை இன்றும் யூடியூபில் காணலாம்.

இவை தவிர்த்து அகில இந்திய வானொலி நிலையம், சென்னை தொலைக்காட்சிக்காக பல்வேறு நிகழ்ச்சிகளையும் தயாரித்து வழங்கியிருக்கிறார்.

இவற்றில் பல பொதுமக்களின் குரல்களாக, குறைகள் தீர்த்தவையாக அமைந்தவை.

உருவங்கள் மாறலாம்!

1983-ம் ஆண்டு ஜனவரி 14 அன்று எஸ்.வி.ரமணன் தயாரிப்பில், இயக்கத்தில், இசையமைப்பில் ‘உருவங்கள் மாறலாம்’ என்ற திரைப்படம் வெளியானது.

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் நூறாவது படமான இப்படம் 100 நாட்கள் கடந்து வெற்றிப்படமாகவும் அமைந்தது.

’ஓ மை காட்’ எனும் ஆங்கிலப் படத்தை தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், மனோரமா, தங்கவேலு, தேங்காய் சீனிவாசன் போன்ற ஜாம்பவான்களோடு அன்றைய நட்சத்திரங்களாக இருந்த ரஜினிகாந்த், கமல்ஹாசன், எஸ்.வி.சேகர், சுஹாசினி, சில்க் ஸ்மிதா போன்றவர்களும் நடித்திருந்தனர்.

இப்படத்தில் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஒரு பாடல் பாடியிருந்தார்.

கடவுள் வெவ்வேறு வேடங்களில் வந்து பக்தனுக்கு அறிவுரைகள் வழங்கும் தன்மை கொண்ட இக்கதையில் சிவாஜி கடவுள் வேடத்தில் வந்து போயிருப்பார்.

இக்காட்சிகள் அனைத்தும் ஒரே நாளில் படம்பிடிக்கப்பட்டவை.

அதே போல, கமல் நடனமாடிய ‘காமனுக்கு காமன்’ எனும் பாடலுக்கு அவரே நடன வடிவமைப்பைக் கையாண்டிருக்கிறார்.

மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால், இப்படத்தில்தான் முதன்முறையாக ‘ராகவேந்திரர்’ வேடத்தில் ரஜினி நடித்தார். அதன் தொடர்ச்சியாகவே, தனது நூறாவது படமாக ‘ஸ்ரீ ராகவேந்திரரை’ அவர் அறிவித்தார்.

நெகிழ்வான தாத்தா!

எஸ்.வி.ரமணனுக்கு லஷ்மி, சரஸ்வதி என இரண்டு மகள்கள். லஷ்மி – ரவி ராகவேந்தர் தம்பதியின் மகன் அனிருத், இன்று பிரபல இசையமைப்பாளராகத் திகழ்கிறார்.

போலவே, சரஸ்வதியின் மகன் ஹிரிஷிகேஷ் ‘வேலையில்லா பட்டதாரி’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர்கள் இருவருமே தொட வேண்டிய உயரம் இன்னும் இருக்கிறது என்று சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பத்திரிகையில் பேட்டி தந்திருந்தார் ரமணன்.

அதில், பாசமிகு பேரன்கள் மீதான ஒரு தாத்தாவின் நெகிழ்ச்சி வெளிப்பட்டிருந்தது.

ஒரு படைப்பாளியாகவும் மனிதராகவும் பல நூறு அனுபவங்களை எதிர்கொண்ட எஸ்.வி.ரமணன், செப்டம்பர் 26, 2022 அன்று காலமானார்.

காலத்தை வென்ற தனது படைப்புகளால் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தவர் ரமணன். அவரை மறக்க முடியுமா?

ரமணன் விட்டுச் சென்ற நினைவுகள் இனி இப்பூமியில் பரவிப் பாவியிருக்கும்!

– உதய் பாடகலிங்கம்

You might also like