திருமணத் தடை நீக்கும் பள்ளியூர் ஆதிவீர மாகாளியம்மன்!

அருள்தரும் ஆன்மீகத் தலம்

தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் டு திருக்கருகாவூர் சாலையில் இருக்கிறது பள்ளியூர் கிராமம். இங்குதான் புகழ்பெற்ற ஆதிவீர மாகாளியம்மன் கோயில் பக்திப் பரவசத்துடன் காட்சியளிக்கிறது.

இக்கோயில் பள்ளியூர் பெளர்ணமி கோயில் என்றும் மக்களால் பக்தியுடன் அழைக்கப்பட்டு வருகிறது.

ஆதிவீர மாகாளியம்மன் கோயிலை நிர்வகித்துவரும் வெண்ணிலா, கோயிலின் ஸ்தல வரலாறு மற்றும் பெருமைகளைப் பற்றி விரிவாகப் பேசினார்.

“சில ஆண்டுகளுக்கு முன்பு ஓர் அம்மன் சிலையை ஊரில் அப்படியே விட்டுவிட்டுப் போய்விட்டார்கள். யாராலும் கண்டுகொள்ளப்படாத அந்த சிலை வழிபாடு நடத்தப்படாமல் இருந்தது.

பின்னர், அதை புனரமைத்து சிறு கோயில் ஒன்றை கட்டவேண்டும் என திட்டமிட்டேன். மாகாளியம்மனின் திருவருளால் நாங்கள் நினைத்தது நடந்தது.

ஊர் மக்கள் ஒத்துழைப்புடன் அழகிய சிற்பங்களுடன் கோயிலைக் கட்டி குடமுழுக்கு செய்தோம்.

நாங்கள் அருள் வாக்கு, குறி சொல்வதெல்லாம் கிடையாது. இங்குள்ள பஞ்சபூதங்கள் அனைத்தும் அள்ளிக்கொடுப்பதால் மக்களுக்கு அருள் கிடைக்கிறது.

100 ஆண்டுகள் பழமையான அரசு, வேம்பு மரங்கள் உள்ளன. அதில் மிகப் பழைமையான விநாயகரை பிரதிஷ்டை செய்துள்ளோம்.

கோயிலின் எதிரே திருக்குளம் இருக்கிறது. மரங்கள் சூழ்ந்த இயற்கையான சூழல்.

பல ஊர்களில் இருந்தும் திருமணத் தடைகள், குழந்தை பாக்கியம் உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களுடன் பக்தர்கள் வருகிறார்கள். பெளர்ணமி தொடர் வழிபாட்டின் மூலம் அவர்களது கவலைகள் தீர்கின்றன.

கோயில் வளாகத்தில் எந்த இடத்தில் அமர்ந்து வேண்டிக்கொண்டாலும் அவர்கள் விரும்பியது கிடைக்கும். தரிசிக்கும் பக்தர்களுக்கு அப்படியொரு ஆத்ம சந்தோசத்தை மாகாளியம்மன் தருகிறாள்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்களை மரப்பாச்சி பொம்மைகளை வாங்கி வரச் சொல்வோம். கோயிலுக்கு ஒன்றைக் கொடுத்துவிட்டு, இன்னொன்றை அவர்களிடம் வழங்குவோம்.

நம்முடைய எண்ணங்களுக்கு உயிராற்றல் உண்டு என்பதால், நாம் நினைப்பது நடக்க அதிக வாய்ப்பிருக்கிறது.

உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். இங்கிருந்து சென்று வெளிநாடுகளில் சென்று பணிபுரிபவர்களும் தவறாமல் வருகிறார்கள்.

கடந்த இருபது ஆண்டுகளாக கோயில் வளாகத்தை பக்தர்களுக்குத் தேவையான வசதிகளுடன் உருவாக்கியுள்ளோம்” என்று உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்டார்.

         

       

பா. மகிழ்மதி

You might also like