சிறிய வேடம் என்றாலும் சிவாஜியின் ‘திரை வீச்சு’ (ஸ்கிரீன் பிரெசன்ஸ்) கம்பீரமானது. அதனால்தான், இன்றும் கம்பீரமான பாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் சிவாஜியுடன் ஒப்பிடப்பட்டே மதிப்பிடப்படுகிறார்கள்.
சிவாஜியின் நடிப்பு நிச்சயம் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதல்ல. மற்றவர்கள் இயல்பாக வசனம் பேசும் காட்சிகளில், அதீத உணர்வுடனும் அழுத்தமான உச்சரிப்புடனும் திரையில் தனிக் கவனம் பெறும் அவர் மீது காத்திரமான விமர்சனங்கள் பல உண்டு.
அவற்றையெல்லாம் மீறி, அற்புதமான தன் நடிப்புத் திறனால், பல படங்களின் வெற்றியை உறுதி செய்தார் சிவாஜி.
தன்னை விட அதிக வயதுள்ள நாயகர்கள் இளைஞர்கள் வேடத்தில் நடித்துக் கொண்டிருந்த கால கட்டத்தில், ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ படத்தில் 13 குழந்தைகளுக்குத் தந்தையாக நடிக்கும் துணிச்சலை வேறு எவரிடமும் எதிர்பார்க்க முடியாது.
‘திருவருட்செல்வர்’ தொடங்கி எத்தனையோ வயோதிகப் பாத்திரங்களில் நடிக்கத் தயங்கியதில்லை.
உண்மையில், நடுத்தர மற்றும் சற்றே வயதான வேடங்களில் நடித்தபோது சிவாஜியிடம் கம்பீரமும் மிடுக்கும் கூடியிருந்ததைப் பார்க்க முடியும்.
‘தெய்வமகன்’ படத்தின் புகழ்பெற்ற அந்த கோரமுக மகன் பாத்திரத்தைவிடத் தந்தை பாத்திரத்தில் வரும் சிவாஜிதான் சிறப்பாக நடித்திருப்பார்.
மகனைப் புறக்கணிக்க நேர்ந்ததால் எழும் குற்றவுணர்ச்சியும், சமூகத்தின் முன் அவனைத் தன் மகனாக அறிவிக்கத் தயங்கும் போலி கவுரமும் தன்னை அலைக்கழிப்பதை நுட்பமாக வெளிப்படுத்தியிருப்பார்.
ஒரு காட்சியில், கேமராவுக்கு முதுகைக் காட்டியபடி சிவாஜி விசும்பிக் கொண்டிருப்பார். அப்போது எதிரில் மேஜர் சுந்தர்ராஜன் அசைவற்று அவரையே பார்த்துக்கொண்டு நிற்பார்.
அதை ஒரு விமர்சனத்தில் இப்படி எழுதியிருந்தார்களாம்:
”சிவாஜியின் முதுகுகூட நடித்துக் கொண்டிருந்தது. மேஜர் சுந்தர்ராஜன் தேமேயென்று நின்றுகொண்டிருந்தார்” என்று.
பின்னாட்களில் அதைக் குறிப்பிட்டு மேஜர் சுந்தர்ராஜன் சொன்னார், “சிவாஜி நடித்துக் கொண்டிருக்கும்போது அதைப் பார்த்துக் கொண்டு நிற்காமல் வேறென்ன செய்ய முடியும்!”
திரைக்கு வெளியிலும் தன் கம்பீரத்தைக் கடைப்பிடித்தார் சிவாஜி.
– நன்றி: முகநூல் பதிவு