முதல்வராக இருந்த எம்ஜிஆரின் சிறந்த புகைப்படம்!

எம்.ஜி.ஆர். சிரித்துக்கொண்டே தன் வலதுகையை வாய்க்கு அருகில் வைத்திருப்பது போல உள்ள புகைப்படம் தான் அவருடைய நம்பர் ஒன் புகைப்படமாகும்.  இன்றும் எல்லா இடங்களிலும் இந்தப் புகைப்படத்தைத்தான் காணலாம்.

இந்தப் புகைப்படத்தை புகைப்பட நிபுணர் சுபா சுந்தரம் அவர்கள் ஒரு தனியார் விழாவில் எடுத்தார். இதனுடனே கையை வாயில் வைக்காமல் சிரித்துக் கொண்டிருக்கும் மற்றொரு படத்தையும் எடுத்தார்.

எம்.ஜி.ஆர். அவர்களிடம் இவ்விரு படங்களைக்காட்டி ஒப்புதல் கோரியபொழுது வாய்க்கருகில் கைவைத்திருப்பது போன்ற படம் அவர் பல்குத்துவது போன்று உள்ளது என்று எண்ணி வேண்டாம் என்று சொல்லி விட்டார்.

மற்றொரு படத்திற்கு ஒப்புதலளித்து அந்தப் படத்தைத்தான் பெரும்பாலும் பயன்படுத்தி வந்தார்கள். டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா 2017 தபால்தலையில் இடம் பெற்றுள்ளது அந்தப்படம் தான்.

நான் 1985 ஆம் ஆண்டு செய்தித்துறை இயக்குநராகப் பணிபுரிந்தபொழுது வேண்டாமென்று ஒப்புதலளிக்காத அந்தப்படம் என்னை மிகவும் கவர்ந்தது.

அதை ஒரு அரசு விளம்பரத்தில் பயன்படுத்தலாமென்ற எண்ணத்துடன் முதலமைச்சரிடம் காண்பிக்க எடுத்துச்சென்றேன். எல்லோரும் ‘தலைவருக்கு இந்தப்படம் பிடிக்காது. மாற்றிவிடுங்கள்” என்று சொன்னார்கள்.

”சரி நான் என் விருப்பப்படி தயாரித்ததைக் காண்பிக்கின்றேன். வேண்டாம் என்று சொன்னால் மாற்றிக் கொள்கிறேன்” என்று கூறிச்சென்றேன்.

முதலமைச்சரிடம் விளம்பரத்தைக் காண்பித்தேன். அவர் அதைப்பார்த்துக் கொண்டிருந்தபொழுது அவர் ஏற்கனவே ஒப்புதல் கொடுத்த படத்தை பக்கத்தில் வைத்துக் காட்டினேன்.

அவர் வேண்டாமென்று சொன்ன அந்த புகைப்படம் தான் இயற்கையாகவும், மிகவும் எடுப்பாகவும் இருந்தது.

அவர் யோசித்துக் கொண்டிருக்கையில், ஐயா தங்களுடைய தனித்தன்மையுடைய அடையாளங்களான, கறுப்புக் கண்ணாடி, தொப்பி, வலதுகரத்தில் கைக்கடிகாரம், கையில் கைக்குட்டை மற்றும் உயரமான சட்டைக்காலர் ஐந்தும் இந்தப்படத்தில் தான் முழுமையாகத் தெரிகின்றன.

இவைகளுடன் தங்களுடைய இயற்கையான சிரித்த முகத்தை இந்தப்புகைப்படம் தான் உண்மையாகக் காட்டுகிறது” என்றேன்.

சிறிது நேரம் அதையே பார்த்துக் கொண்டிருந்த முதலமைச்சர் அந்தப் படத்திற்கு ஒப்புதல் கொடுத்தார்.

அந்தப்படம் தான் அவர் மறைந்து 30 ஆண்டுகள் கடந்த பின்னரும் பட்டி தொட்டிகளிலெல்லாம் நாடுமுழுவதும் சுவரொட்டிகளாகவும், பேனர்களாகவும் அலங்கரித்து வருகிறது.

பொழுதெல்லாம் அந்த சந்திப்பை நினைத்து நான் மகிழ்ச்சியடைந்து கொண்டேயிருக்கிறேன்.

***

நன்றி:  இரா.கற்பூர சுந்தரபாண்டியன், இ.ஆ.ப. (பணி நிறைவு) எழுதிய ‘நான் கண்ட  எம்.ஜி.ஆர்’ என்ற நூலிலிருந்து.

You might also like