தாய்- தலையங்கம்
பெரியார் வாழ்ந்த 94 ஆண்டுகளில் அரசியல், சமூக வாழ்வில் எவ்வளவோ நெருக்கடிகள்; மாற்றங்கள்.
அனைத்தையும் தனது செயல்பாடுகளில் பிரதிபலித்தவர் பெரியார்.
காந்தி தன்னுடைய இளமைக்கால வாழ்க்கையை ஒளிவு மறைவின்றி முன்வைத்த மாதிரியே, பெரியாரும் தன்னுடைய தொடக்க கால வாழ்க்கையை மறைக்கவில்லை. அவை விமர்சனங்களையும், சர்ச்சைகளையும் உருவாக்கும் என்றாலும் கூட.
வசதியான வளர்ப்பு அவருடைய பார்வையை மேட்டுக்குடி சார்ந்ததாக மாற்றிவிடவில்லை. அதனாலேயே அவரால் மனித பேதங்களைப் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை.
வைக்கம் இழிவு, தீண்டாமை ஒழிப்பு, பெண்ணடிமை, குலக்கல்வித் திட்டம் என்று ஒவ்வொரு சமூக அவலமான நிகழ்வுகளுக்கு எதிராகவும், விளைவுகளைப் பொருட்படுத்தாத மனநிலையுடன் ஓங்கி ஒலித்தது அவருடைய குரல்.
அவர் வாழ்ந்த காலத்தில் சுமார் 8,600 நாட்களைத் தனது கொள்கைப் பிரச்சாரப் பயணத்திற்கே செலவிட்டிருக்கிறார்.
இரண்டு முறை அதிகார மையப் பொறுப்புக்கான வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தபோதும் அவர் சிறிதும் சலனப்படவில்லை.
“இந்த ஆட்சியே பெரியாருக்குக் காணிக்கையாக்கப்பட்டது தான்” என்று அறிஞர் அண்ணா முதல்வராகி அறிவித்தபோதும், அந்தப் பிணைப்பைத் தனக்குச் சாதகமான சலுகைகள் ஆக்கிக் கொள்ளவில்லை.
உடல்நலிவடைந்த நிலையிலும், தனிமனித உழைப்பின் அதிகபட்ச உயரத்திற்குப் போய் உழைத்த அவரைச் சூழலும் பாதித்தது. அவரும் சூழலில் வெகுவான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
ஆட்சியில் அமராமலேயே அவருடைய ஆளுமை அவர் வாழ்ந்த இறுதிநாள் வரை நீடித்திருந்தது. பொது வாழ்க்கைக்கு வந்து நீர்த்துப் போகாத அவருடைய பாதிப்பு தமிழகத்தில் உள்ள பல இயக்கங்களில் வண்டல் மண்ணைப் போலப் படிந்திருக்கிறது.
இருந்தும் மதவாதத்தின் வீச்சு அதிகரித்திருக்கிற நிலையில், பல அதிகார நிலைகளில் அது ஊடுவியிருக்கிற நிலையில், ‘ராம் லீலா’வைக் கண்டித்த, தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டை இறப்பதற்கு முன்பு வரை கூட நடத்திய, தான் நம்பியவற்றிற்காக உண்மையாக வாழ்ந்த அந்த உயிரோட்டமான பெரியாரின் ஆளுமை இப்போதும் தேவைப்படுகிறது.
தகிக்கும் சூழல் காத்திருக்கிறது தற்போதைய சூழலை எதிர்கொள்ளும் இன்னொரு !பெரியாருக்காக’!