நூல் அறிமுகம்:
தமிழகத்தில் சமகால இலக்கிய உலகில் படைப்பாளர்களாக முகிழ்த்துவரும் பெண் கவிஞர்கள், எழுத்தாளர்ளின் நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது ஹெர் ஸ்டோரிஸ் பதிப்பகம்.
அந்த வரிசையில் தீபா நாகராணியின் ‘மரிக்கொழுந்து கற்பகம் அழகம்மாள் மற்றும் சில மதுரைப் பெண்கள்’ என்ற முதல் சிறுகதைத் தொகுப்பு அழகுற வெளிவந்துள்ளது.
மதுரையைச் சேர்ந்தவரான தீபா நாகராணி, பல வெகுஜன இதழ்களில் சிறுகதைகள் எழுதியுள்ளார். ஜன்னல், கல்கி, பெமினா, அந்திமழை, அவள் விகடன், செம்மலர், ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் இதுவரை 20 சிறுகதைகள் வெளிவந்துள்ளன.
பழங்குடிப் பெண்களிடையே விழிப்புணர்வூட்டும் முகாம்களில் பங்கேற்கும் நூலாசிரியர், பள்ளி கல்லூரிகளில் உரையாற்றுவதிலும் ஆர்வம் கொண்டவர்.
இவரது சிறுகதை நூலுக்கு “பெண் வாழ்வின் வெவ்வேறு பக்கங்கள்” என்ற தலைப்பில் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் எழுதிய முன்னுரையில் இருந்து சில பகுதிகள்…
தீபா நாகராணியின் இக்கதைத்தொகுதியில் 13 கதைகள் உள்ளன. வேறு வேறு வயதுப் பெண்களின் வாழ்வியல் பிரச்னைகளைக் கையாளும் கதைகளாக இவை வந்திருக்கின்றன.
இவரது முதல் தொகுப்பு இது என்று சொல்லமுடியாதபடிக்குச் சரளமாகக் கதையை நகர்த்திச்செல்லும் லாவகம் அவருக்கு வாய்த்திருக்கிறது.
செம்பருத்திபூ கதையில் ஒரே வீட்டில் வாழ்க்கைப்பட்ட இரு பெண்களுக்கிடையிலான அபூர்வமான சினேகத்தைச் சித்திரமாக வடித்துள்ளார்.
மூத்த மருமகளான அழகம்மாவின் மரணத்தில் துவங்கும் கதை முன்-பின்னாக நகர்ந்து அழகம்மாளுக்கும் இரண்டாவது மருமகளாக வரும் ராஜத்துக்கும் இடையில் பூக்கும் நெருக்கத்தைச் சொல்கிறது.
ஆண்கள் வியாபாரம் செய்யும் குடும்பப் பின்னணியில் அழகம்மாள் முன்கை எடுத்துப் பிள்ளைகளை உயர்கல்விக்கு அனுப்பிச் சாதிக்கிறார்.
தனக்கு மறுக்கப்பட்ட கல்வி தன் பிள்ளைகளுக்குக் கிடைத்தாக வேண்டும் என்று போராடி கம்பீரமாக ஜெயிக்கிற கதாபாத்திரமாக அவர் படைக்கப்பட்டிருப்பது கதையின் சிறப்பு.
அந்த அழகம்மாள் என்னும் ஆலமரத்தின் கீழ் வளரும் சிறு செடியாகத் தன்னை உணரும் ராஜத்தின்வழி கதை சொல்லப்பட்டிருப்பது பொருத்தம்.
வயதான பெண்மணி பற்றிய இன்னொரு கதை ‘ஈரம்’.
அம்மாவுக்கு சிரிப்பு வந்து கொஞ்சம் குலுங்கிச் சிரித்துவிட்டால் போச்சு, சிறுநீர் வெளிப்பட்டு நைட்டியின் பின்புறம் ஈரமாகிவிடும். இதைக் கல்லூரிப் படிப்பில் இருக்கும் மகள் லதா உள்ளிட்ட பிள்ளைகள் கேலி செய்வது வழக்கமாகி இருந்தது.
அதில் துவங்கி அம்மா செய்கிற எல்லாவற்றையும் அப்பாவும் குழந்தைகளும் கேலி செய்வது அன்றாடச் செயலாகிவிடுகிறது.
பின்னொரு நாளில் லதாவுக்கும் கல்யாண்மாகி அவளும் நடுவயதுக்கு வரும்போது அவளுக்கு இருமல் வருகிறது. ஒரு சந்தேகத்தில் பின்புற தடவிப்பார்க்கிறாள். ஈரமாய் இருந்தது என்று கதை முடிகிறது.
கதையில் மகளுக்குக் குற்ற உணர்வு லேசாக வருவதாகச் சொல்லியிருப்பது நல்லது. இல்லையெனில் இக்கதை முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்கிற பழமொழிக்கு விளக்கமாக முடிந்திருக்கும்.
‘பிராப்தம்’ என்கிற கதை ஏற்கனவே பலராலும் சொல்லப்பட்ட ஒரு கதையை மீண்டும் சொல்லிப் பார்த்திருக்கிறார். பிராப்தம் எனத் தலைப்பிட்டதன் மூலம் இன்னும் பழைய நிலைக்குக் கதை போய்விடுகிறது.
தலை சாய்த்தல் / சாய்தல் / தலை ஆட்டுதல் என்கிற கதை ஒரு வித்தியாசமான சூழலில் துவங்குகிறது. இரண்டு பெண் குழந்தைகளுக்குப் பிறகு மலருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. பிறக்கும்போதே கல் அடைப்பு காரணமாக குழந்தைக்குச் சிறுநீர் பிரிவதில் சிக்கல் இருக்கிறது.
அதனால் பெரிய தனியார் மருத்துவமனைக்கு மாற்றிச் செல்கிறார்கள். முன்பணமே அம்பதாயிரம் கட்டுகிறார்கள்.
மாமியாரும் வெளிநாட்டிலிருக்கும் கணவனும் அப்படியெல்லாம் செலவு செய்து இந்தக் குழந்தையைக் காப்பாற்றிக் காலமெல்லாம் வைத்தியம் பார்க்கமுடியாது. வயசா போயிடுச்சு. இன்னொன்னு பெத்துக்கலாம் என்று கொடூரமாகப் பேசுகின்றனர்.
ஆனால், அவளோ பெற்ற குழந்தையை எத்தனை செலவானாலும் காப்பாற்றியே ஆக வேண்டும் என நிற்கிறாள்.
அவளுடைய மரணத்தோடு கதையை ஏன் முடித்தார் என்பது பிடிபடவில்லை. மற்றபடி கதை வெகு யதார்த்தமாக நகர்கிறது. நம்பகத்தன்மை சற்றுக்குறைகிறது-ஆண் குழந்தை செத்தால் சாகட்டும் எனக்கணவன் சொல்லும்போது.
துணிவே அழகு கதையும் பலமுறை சொல்லப்பட்ட ஒரு கதைதான். பஸ்ஸில் உரசிக்கொண்டு நிற்கும் ஆணைச் சட்டையைப் பிடித்து அடிக்கும் துணிச்சலான பெண் பற்றிய கதை.
நாச்சியார் என்கிற கதை புதிதாகத் திறக்கப்பட்ட துணிக்கடையில் ஒருவாரம் தள்ளுபடி விலை என்பதால் அந்தக் கடைக்குப் போய் சேலை எடுக்க வேண்டும் என ஆசைப்படும் கற்பகம், அவளுடைய மாமனார் வருகையால் கடைக்குப் போக முடியவில்லை.
கணவன் வந்து இரவில் அவளைத் தேற்றும்போது அவளே சமாதானம் ஆகிவிடுவதாகக் கதை முடிகிறது. ஒரு சிறுகதைக்கான சின்ன மன உணர்வைக் கையிலெடுத்துக் கச்சிதமாகக் கதையை முடித்திருப்பது பாராட்டத்தக்கது.
பேருந்து நிறுத்தத்தில் அன்றாடம் சந்திக்கும் ஒரு இளைஞனை மரிக்கொழுந்து ஒருதலையாக விரும்புகிறாள். அவனோ ஒருநாள் அவளை சிஸ்டர் என்று சொல்லி விடுகிறான்.
இதனால் காயமடைந்த மரிக்கொழுந்து ஒருநாள் அவனைப்பின் தொடர்ந்து சென்று அவனை நிறுத்தி “உன்னை பிரதர் என்று அழைக்க எண்ணம் கொண்ட பெண்ணை மட்டும் சிஸ்டர்னு சொல்லு” என்று அறிவுறுத்தி விட்டுத் திருபுகிறாள்.
நம்பகத்தன்மை குறைவாயிருப்பினும் எழுத்தாளரின் விழைவினால் எழுந்த புனைவு என ஏற்கலாம்.
கல்லூரிக் காலத்தில் தனக்கும் ஒரு ஆண் இருக்கிறான் என்று ‘சொல்லிக் கொள்வதற்காக’ ஒரு ஆணைத்தேடும் பெண் பற்றிய ஒரு கதையும் காதல் என நம்பிக் குடும்பத்தை எதிர்த்துக் கல்யனமும் செய்து கொண்டு ஏமாறும் ஒரு கதையும் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
பெண்களின் வாழ்வியலிலிருந்தே எல்லாக் கதைகளும் எழுந்துள்ளது பாராட்டுக்குரியது. மிக இலகுவாகக் கதை சொல்ல வருகிறது இவருக்கு.
வாசகருக்கு நெருக்கமாக நின்று நேரடியான மொழியில் நேர்கோட்டில் கதை சொல்கிறார்.
குளத்தின் மேல்பரப்பில் நீச்சலடித்துத் திரும்பிய உணர்வே 13 கதைகளையும் ஒருசேர வாசித்து முடித்ததும் ஏற்படுகிறது” என்று விரிவாக எழுதியுள்ளார்.
மரிக்கொழுந்து கற்பகம் அழகம்மாள் மற்றும் சில பெண்கள் (சிறுகதைகள்):
தீபா நாகராணி
வெளியீடு: ஹெர் ஸ்டோரிஸ்,
15, மகாலெட்சுமி அடுக்ககம், ,
1. ராக்கியப்பா தெரு, சென்னை- 4 /
விலை ரூ. 120/-
தொடர்பு எண் – 75500 98666