மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசைக் கண்டித்து கொல்கத்தாவில் உள்ள சட்டப்பேரவையை முற்றுகையிடும் போராட்டத்தை பாஜக அறிவித்திருந்தது.
இதற்காக ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கொல்கத்தாவை நோக்கி வந்தனர்.
பிற இடங்களில் இருந்து முற்றுகை போராட்டத்திற்காக ரயில்கள், பேருந்துகள் மூலமாக கொல்கத்தா நோக்கி பாஜகவினர் புறப்பட்டனர்.
இதனால், கொல்கத்தாவில் உள்ள ரயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு காவல்துறையினர் சோதனை செய்து பாஜக தொண்டர்களை கைது செய்து வருகின்றனர்.
சட்டப்பேரவைக்கு செல்லும் சாலைகளில் பேரணியாக வந்த பாஜகவினரை தடுத்து நிறுத்துவதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. அதனை மீறி பாஜகவினர் முன்னேறினர்.
கூட்டத்தினரை கலைப்பதற்காக காவல்துறையினர் தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.
அப்போது ஏற்பட்ட வன்முறையில் காவல்துறை வாகனத்திற்கு தீ வைக்கப்பட்டது. வன்முறையின்போது காவல்காரர்கள் சிலர் காயமடைந்துள்ளனர். காவலர் ஒருவரை பாஜகவினர் விரட்டி விரட்டி தாக்கிய காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.