மன அழுத்தத்தைப் போக்கும் மாமருந்து ‘வடிவேலு’!

– வைகைப்புயலின் பிறந்தநாளுக்கு கடல்போல் குவியும் வாழ்த்து

தமிழர்கள் உள்ளத்தில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள மாபெரும் நகைச்சுவை கலைஞன் வடிவேலு. எந்த மனநிலையில் இருந்தாலும் வடிவேலுவின் காமெடியை பார்த்துவிட்டால் போது உடனே சிரித்து விடுவார்கள்.

மிகுந்த மன உளைச்சலால் தவிக்கும் அனைவருக்கும் தனது காமெடி காட்சிகளால் மருந்து போட்டவர் வடிவேலு என்றால் அது மிகையாகாது.

சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் ஏராளமான மேடை நாடகங்களில் நடித்தார் வடிவேலு. ஏறிய மேடைகளில் எல்லாம் தன்னை ஒரு நகைச்சுவை நடிகராகவே காட்டிக் கொண்டார்.

வடிவேலுவின் சினிமா பசிக்கு முதலில் தீனி போட்டவர் டி.ராஜேந்தர். 1985-ம் ஆண்டு வெளியான என் தங்கை கல்யாணி திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார் வடிவேலு. அப்படத்தில் ஒன்றரை நிமிடம் மட்டுமே தோன்றினார்.

இன்று மீம்ஸ் உலகின் ராஜாவாக வலம் வரும் வடிவேலுவுக்கு முதல் முத்திரை படமாக அமைந்தது ராஜ்கிரணின் என் ராசாவின் மனசிலே. இதில் கவுண்டமனி உடன் சேர்ந்து அவர் நடித்த காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிக்கப்பட்டு வருகின்றன.

நகைச்சுவை என்றதும் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் முந்திக்கொண்டு நிற்கும் வடிவேலு, இந்த உயரத்தை எட்டியதற்கான காரணிகள் பல உள்ளன.

ஒல்லியான கிராமத்து இளைஞனாக வடிவேலு படங்களில் தோன்றினாலும், அவரது டைமிங் வசனங்கள் பிரதான இடத்தைப் பிடித்து காமெடியை மெருகேற்றும்.

அவரது நகைச்சுவைக்கு இன்றும் தனித்து நிற்பதற்கு காரணம் அவரது உடல்மொழி. அவரின் உடல்மொழியும், எக்ஸ்பிரஷன்களும் தான் இன்று மீம் கிரியேட்டர்களுக்கு தீனி போட்டு வருகிறது.

இடையே ரெட் காட்டு போடப்பட்டதால் 10 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடிக்க முடியாமல் ஒதுங்கி இருந்தார் வடிவேலு.

இருப்பினும் இந்த 10 ஆண்டுகளில் அவரை தினசரி பார்த்திராத ஆள் இருந்திருக்க முடியாது என சொல்லும் அளவிற்கு மீம்ஸ்களில் திரும்பிய பக்கமெல்லாம் இவரது முகம் தான் இருக்கும்.

10 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் தற்போது தமிழ் சினிமாவில் மீண்டும் பிசியாகிவிட்டார் வடிவேலு.

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், சந்திரமுகி 2, மாமன்னன் உள்பட கைவசம் டஜன் கணக்கிலான படங்களை வைத்துக்கொண்டு மீண்டும் காமெடி கிங்காக அரியணை ஏறி இருக்கும் வடிவேலு இன்று தனது 62-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

அவருக்கு சமூக வலைதளங்களில் கடல்போல் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. 

– நன்றி: ஏசியாநெட் இதழ்

You might also like