எஸ்.வி.ரங்காராவின் திரை வாழ்வின் வெள்ளி விழாவில் எம்.ஜி.ஆர் பேசிய பேச்சு.
சகோதரர் திரு.ரங்காராவ் அவர்களை பொறுத்தவரையில், போலியை உண்மையாக்கி உண்மையை போலி என்று கருதும்படி செய்யும் சிறந்த நடிப்பாற்றல் கொண்டவர் ஆவார்.
கால் நூற்றாண்டு காலம், தொடக்கத்திலிருந்து இன்று வரை திரு. ரங்காராவ் ஒரு வேடத்தை ஏற்கிறார் என்று சொல்லப்பட்டவுடனேயே, அவரது அந்த பாத்திரம் மக்களுடைய கவனத்தை கவரத்தக்க குறிப்பிடத்தகுந்த குணசித்திர வேறுபாடுகளை வெளிப்படுத்த வேண்டிய ஒரு பாத்திரம் என்று எல்லோரும் முடிவெடுக்கும்படியாக அமைந்து விடுவதுண்டு.
ரங்காராவினால் அப்படி நடிக்க முடியும் என்ற நம்பிக்கை உண்டாவதுதான் அதற்குக் காரணம்.
எனவே கலையைத் தொழிலாக மட்டும் கொண்டு பொழுதுபோக்காக வியாபாரமாக ஏதோ கூத்தடித்து விட்டுப் போவது என்று இல்லாமல் இந்தக் கலைத் கூத்து,
பல துன்பங்களுக்கிடையே உழன்று கொண்டிருக்கும் கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களில் மகிழ்ச்சிக் கூத்தாக அமைய உயிர் துடிப்பாக இருக்கிறது என்பதை உணர்ந்து தொண்டாற்றும் நல்ல கலையுள்ளம் கொண்டவர் திரு. ரங்காராவ் அவர்கள்.
“போற்றினும் போற்றுவர்; பொருள் கொடாவிடின்
தூற்றினும் தூற்றுவர்”
என்ற அளவுக்கு பலரை சந்தித்தும், அனுபவப்பட்டும், விரக்தியடையாமல் கலைப்பற்றோடு, கலையைத் தொழிலாகக் கொண்டவர்களின் பாசத்தோடு வாழ்ந்து வரும் நமது அன்புச் சகோதரர் திரு.எஸ்.வி.ரங்காராவ் அவர்கள் வைர விழா கொண்டாடுகின்ற வகையில் கலையுலகில் தொடர்ந்து தொண்டாற்றும் வாய்ப்பும், வசதியும், சூழ்நிலையும் அமையப்பெற்றுத் திகழ வேண்டுமென எனது அன்னையை இறைஞ்சி, என் இதயத்தின் நல்லெண்ணங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
- நன்றி: தி. சந்தான கிருஷ்ணன் எழுதிய ‘குணச்சித்திர நடிகர் எஸ்.வி. ரங்காராவ்’ என்ற நூலிலிருந்து.