ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்தை ஆதரிக்கிறேன்!

உலக பாலியல் தின விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் பேச்சு

உலக பாலியல் தினத்தையொட்டி சென்னை வடபழனியில் உள்ள டாக்டர் காமராஜ் மருத்துவமனையில் பாலியல் விழிப்புணர்வு பிரச்சார மனிதசங்கிலி, கையெழுத்து இயக்கம், பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு ஆகியவை நடைபெற்றது.

உலக பாலியல் சங்க பாலியல் உரிமை குழு உறுப்பினர் டாக்டர் டி.காமராஜ், துணைச் செயலாளர் டாக்டர் கே.எஸ்.ஜெயராணி காமராஜ் ஆகியோர் பேசும்போது,

“குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை அதிகரித்துவருவது வேதனை அளிக்கிறது. பாலியல் தொடர்பான விழிப்புணர்வு அனைவருக்குமே மிக அவசியமான ஒன்றாகும்.

குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெற்றோர்களுக்கும் தேவைப்படுகிறது. இதுதொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை 28 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறோம்.

பாலியல் விஷயங்களையும், பாலியல் உணர்வுகளையும் மூடி மூடிவைப்பதால் அநாகரிகமாக வெளிப்பட்டு பாலியல் வன்முறையாக உருவெடுக்கிறது.

இந்த சமூகக் கொடுமையிலிருந்து மீள முறையான பாலியல் கல்வி தேவைப்படுகிறது.

கொரோனா தாக்குதலால் உலக நாடுகள் அனைத்திலும் பாலியல் தொடர்பான பிரச்சனைகள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆகவே, நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது மிக மிக அவசியமாகும்” என்று குறிப்பிட்டார்கள்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இயக்குநர் வெற்றிமாறன் பேசும்போது, “பாலியல் குறித்த விழிப்புணர்வு ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டியது மிக மிக அவசியானது.

அதனை வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் உலக பாலியல் தினம் கொண்டாடப்படுவதும், அதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதும் பாராட்டுக்குரியது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் நான் பெருமை அடைகிறேன்.

இன்று காலையில் செய்தித்தாள்களில் வந்த செய்திகளில் இரு பெண்கள் திருமணம் செய்துகொண்ட செய்தி முக்கியத்துவம் பெற்றது.

அதுவும் இரு வீட்டாரின் பெற்றோர் முன்னிலையில் இந்த திருமணம் நடந்தள்ளது. இந்த திருமணத்தை நான் ஆதரிக்கிறேன்.

பாலியல் சிறுபான்மையினர் மற்றும் திருநங்கைகள் கௌரவமாக நடத்தப்பட வேண்டும். அவர்களது உரிமைகளை அவர்கள் பெறுவதற்கு நாம் உறுதுணையாக இருக்கவேண்டும்” என்றார்.

இயக்குநர் பாண்டியராஜன், “பாலியல் சம்பந்தமான ஒரு குறும்படத்தை நான் தயாரித்தேன். இதற்காக நான் கடுமையான எதிர்ப்புகளை எல்லாம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

கடுமையான முயற்சிக்குப் பிறகு அந்த குறும்படம் அபார வெற்றி அடைந்தது. உலகம் முழுவதிலும் ஏறக்குறைய 2.80 கோடி பேர் யூடியூபில் இப்படத்தை பார்த்துள்ளனர்.

இந்த செய்தியை இந்த இடத்தில் கூறுவதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.

நாம் பேச பயந்து, பயந்து இருந்த காலங்களையெல்லாம் தாண்டி,

இப்போது துணிச்சலாக பொதுவெளியில் பேசக்கூடிய நிலைக்கு வந்துள்ளோம். அதற்கு இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்தான் காரணம்” என்றார்.

பா. மகிழ்மதி

You might also like