கொஞ்சுதமிழ்க் காவிரியாள்!

– கவிஞர் மகுடேசுவரன்

இன்றைய காவிரி வெள்ளத்தைக் கண்டு கண்ணதாசன் பாடியிருந்தால் எப்படிப் பாடியிருப்பார்? எழுதிக் காட்டட்டுமா என்று கேட்டிருந்தேன். அன்பர்கள் பலரும் தம் ஆர்வத்தைத் தெரிவித்திருந்தனர்.

அவர்களுக்காக இதோ என்று ஒரு மரபுக் கவிதையை எழுதி தன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் மகுடேசுவரன்.

காலமகள் ஆறுகளைக் காயவைத்துப் பார்த்தாள்;
காவிரியும் அவள் விருப்பில் தப்பவில்லை காய்ந்தாள்:
கோலநிலை குலைந்தவளாய்க் கொண்டநிலை கலைந்தவளாய்க்
குறுகிவிட்ட சிற்றோடை போலுமன்றோ தவழ்ந்தாள்!

நதியென்றால் நினைவில்வரும் நறும்புனலின் தோற்றம்;
நலங்கெட்ட பின்வருமோ பழையபடி ஏற்றம்?
விதியொருநாள் மாறாதோ? விரைந்து மழை தூறாதோ?
வெள்ளக்காடாகும்படி இறை நிமிர்ந்து பாராதோ?

குடகுமலைத் தலைமீது கொள்ளை மழை கொட்டிவிட
கொஞ்சுதமிழ்க் காவிரியாள் நீர்மிகுந்து நிறைந்தாள்;
பெருகுவெள்ளம் நுரைசுழல பெருமையெல்லாம் சிலிர்த்து எழ
பீடுநடை போட்டபடி கொங்கடைந்து சோழநிலம் நுழைந்தாள்!

வயல்நிறைத்து வரப்புயர்த்தி வழிபட்டார் குலமுயர்த்தி
வண்டுலவும் சோலைகளை வழியெங்கும் மலர்த்தி
அலைக்கைகள் அசைத்தபடி அரவணைக்கக் காத்திருக்கும்
அன்புக்கடல் மன்னவனின் அகங்கலக்க விரைந்தாள்

You might also like