நித்யாவை அலங்கரிக்கும் ‘நடிப்பு ராட்சசி’ கிரீடம்!

மிகவும் உயர்ந்த சாதனைகளைப் படைத்த ஒருவர் இன்னொருவரை பாராட்டுவதென்பது அரிது; அதுவும் தம்மை விட இளையவர் ஒருவரை ஆராதிப்பது அதனினும் அரிது.

சமீபத்தில் தமிழ் திரையுலகில் அப்படியொரு பாராட்டைப் பெற்றவர் நித்யா மேனன். பாராட்டியவர், ‘இயக்குனர் இமயம்’ என்று ரசிகர்களால் போற்றப்படும் பாரதிராஜா.

‘நித்யா மேனன் உண்மையிலேயே நடிப்பு ராட்சசி. படம் பார்த்தீங்கன்னா தெரியும். இவங்களுக்கு (பிரகாஷ்ராஜ், நித்யா மேனன், தனுஷ்) முன்னாடி நான் காணாம போயிருவேனோன்னு பயந்தேன்’ என்று ‘திருச்சிற்றம்பலம்’ பட இசை வெளியீட்டு விழாவில் பேசியிருந்தார் பாரதிராஜா.

தனுஷையும் பிரகாஷ்ராஜையும் பாராட்டியதைக் கேட்டவர்களில் பலருக்கு நித்யா மேனனை ஏன் இவ்வளவு பாராட்டுகிறார் என்ற ஆச்சர்யம் அப்போது உண்டானது.

ஆகஸ்ட் 18 அன்று வெளியானது முதல் இன்று வரை பல திரையரங்குகளில் ரசிகர்களின் ஆர்ப்பரிப்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது ‘திருச்சிற்றம்பலம்’.

படம் பார்த்துவிட்டு வெளியே வரும் ஒவ்வொருவருமே ‘நித்யா மேனன் நடிப்பு ராட்சசிதான்’ என்பத மறுக்காமல் ஒப்புக்கொள்கின்றனர்.

முன்னும் பின்னும்..!

தமிழ் திரையுலகில் முகம் காட்டிய நடிகைகள் எண்ணிக்கை பல ஆயிரங்கள் இருக்கும். அவர்களில் தொடர்ந்து தனது நடிப்பாலும் அழகாலும் திரையிருப்பாலும் கவர்ந்தவர்கள் எண்ணிக்கை வெகுசொற்பம்.

அதிலும் சாவித்திரி தொடங்கி ஷோபா, ரேவதி, அர்ச்சனா, ஊர்வசி, சிம்ரன் என்று தொடரும் பட்டியலில் ஆங்காங்கே முன்னும்பின்னும் புள்ளிகள் இட்டு மிகச்சில பெயர்களையே நிரப்பிக் கொள்ளலாம்.

அந்த வரிசையில் தற்போதைய நீட்சியாக இருப்பது நித்யா மேனன் என்று தாராளமாகச் சொல்லலாம்.

சிவந்த நிறம், வட்ட முகம், நெளிந்து சுருண்டு முன்பக்கமாய்ச் சரியும் முடி, பெரிய கண்கள், பருத்த உடல் என்று வெளிநாட்டுப் பத்திரிகையொன்றில் பருமன் குறித்த கட்டுரைக்கான புகைப்பட மாடல் போன்றிருக்கிறார் நித்யா மேனன்.

உடலமைப்பைக் கிண்டலடிப்பது என்ற விஷயத்தைப் பொறுத்தவரை, அதற்கேற்ப ஆயிரம் விஷயங்களை அள்ளித் தரும் வகையிலேயே இன்றும் தோற்றம் தருகிறார்.

ஆனாலும் நடிப்பு என்று வந்துவிட்டால் அவரை குறை சொல்ல வார்த்தைகளைத் தேட வேண்டியதிருக்கும்.

குழந்தை நட்சத்திரமாகத் திரைத் துறைக்குள் நுழைந்து கன்னடம், மலையாளம், தெலுங்கு, தமிழ் என்று படிப்படியாக வெவ்வேறு திரைப்படங்களில் நடித்தவர்.

‘உஸ்தாத் ஹோட்டல்’ மலையாளத்தில் அவருக்குப் பெரியளவில் ரசிகர்களை உருவாக்கியது; அதற்கு முன் கமர்ஷியலாகவும் கலைப்படைப்பாகவும் சில படங்களில் நடித்திருந்தாலும், அப்படத்தின் வெற்றி அவரை அனைவருக்கும் அடையாளம் காட்டியது.

தெலுங்கில் ‘அலா மொதலந்தி’ எனும் முதல் படத்திலேயே ’நல்லா நடிக்கிறாரே’ என்ற பெயரைப் பெற்றார். தொடர்ந்து அவர் நடித்த படங்களுள் நிதினுடன் ஜோடி சேர்ந்த ‘இஷ்க்’, மாபெரும் கவனத்தை ஈட்டியது.

நாயகனைக் காதலிக்கும், வில்லனான தன் சகோதரனிடம் பாசமழை பொழியும் வழக்கமான நாயகி பாத்திரம்தான். ஆனால், நித்யாவின் நடிப்புதான் பட வெற்றிக்கான காரணங்களில் முதன்மையாக இருந்தது.

தமிழில் ‘180’, ‘வெப்பம்’ மூலமாக முகம் காட்டியிருந்தாலும் ‘மாலினி 22 பாளையங்கோட்டை’, ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’யில் நன்றாக நடித்திருந்தாலும் ‘காஞ்சனா 2’, ‘ஓ காதல் கண்மணி’ படங்களின் வெற்றியே நித்யாவைக் கொண்டாட வைத்தன.

அதன்பிறகான ஆறு ஆண்டுகளில் அவர் குறித்த பேச்சுகள் அமுங்குவதும் பொங்கிப் பிரவாகமெடுப்பதும் சம அளவில் நிகழ்ந்து வருகின்றன.

நித்யா ஊடகங்களை அணுகும் விதமும் கேமிராவுக்கு முன்னால் அவர் வெளிப்படுத்தும் நடிப்பும் மட்டுமே இதற்கான காரணங்களாக இருக்கின்றன.

நித்யாவின் புத்திசாலித்தனம்!

தன்னைத் தேடிவந்த தயாரிப்பாளரைச் சந்திக்கவில்லை என்ற காரணத்தைக் காட்டி, ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்னர் மலையாளத் திரையுலகில் சிலர் நித்யாவுக்கு எதிராக குரல் கொடுத்தனர்.

அதன்பிறகு அங்குள்ள முன்னணி நடிகர்களின் படங்களில் நடிப்பது குறைந்துபோனது. பெங்களூரிலேயே பிறந்து வளர்ந்தபோதும், கன்னடப் படங்களின் வழியே அறிமுகமானபோதும், அவையனைத்தும் வெற்றியைக் குவித்தபோதும் தொடர்ந்து தெலுங்கு படங்களுக்கே முக்கியத்துவம் தந்தார்.

தமிழிலும் கூட, மிகவும் யோசித்தே தனக்கான வாய்ப்புகளைத் தேர்வு செய்கிறார்.

2016 முதல் தற்போது வரை சூர்யாவுடன் ‘24’, விக்ரமுடன் ‘இருமுகன்’, விஜய் உடன் ‘மெர்சல்’, இயக்குனர் மிஷ்கின் – உதயநிதி கூட்டணியில் உருவான ‘சைக்கோ’, அடுத்து தனுஷ் உடன் ‘திருச்சிற்றம்பலம்’ என்று சரியாக 5 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார்.

இந்த ஆண்டில் தெலுங்கில் வெளியான ‘பீம்லா நாயக்’கில் பவன் கல்யாண், மலையாளத்தில் 19(1)ஏவில் விஜய் சேதுபதி என்று இரண்டு முக்கியமான நாயகர்களுடன் தனது இருப்பைப் பகிருந்திருக்கிறார்.

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நித்யா தனியாவர்த்தனம் செய்த அனைத்து படங்களிலும் இதே கதைதான். பிரபல நாயகர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அப்படங்களில் இருப்பார்கள்.

அல்லது, அப்படங்களில் நித்யாவின் பாத்திரம் மட்டுமே மற்றனைத்தையும் மறக்கும் அளவுக்கு சிறப்பானதாக உருவாக்கப்பட்டிருக்கும்; அவர் சில நிமிடங்கள் மட்டுமே கவுரவமாக தலை காட்டிய படங்களும் கூட இதற்கு விதிவிலக்கில்லை. தமிழில் ‘காஞ்சனா’, ‘மெர்சல்’ இரண்டுமே இதற்கான உதாரணங்கள்.

வெறுமனே கதைகளை மட்டுமல்ல, டைட்டிலில் தன்னுடன் சேர்ந்துகொள்ளும் பிற பெயர்களையும் வைத்தே அவர் ஒரு படத்தில் தான் இடம்பெற வேண்டுமா இல்லையா என்பதை முடிவு செய்கிறார். திருச்சிற்றம்பலம் கூட அந்த வகையறாதான்.

2019இல் ‘மிஷன் மங்கள்’ மூலமாக இந்தியில் அறிமுகமானார் நித்யா. அக்‌ஷய்குமார், வித்யா பாலன், ஷர்மான் ஜோஷி, சோனாக்‌ஷி என்று இந்தி திரையுலக பிரபலங்கள் மட்டுமல்லாமல் ஹெச்.ஜி.தத்தாத்ரேயா, விக்ரம் கோஹலே, தலிப் தாஹில் என்று முதிர்ந்த கலைஞர்களோடும் முதன்முறையாக நடித்தார். அதிலும் நித்யாவின் நடிப்பு தனித்து பாராட்டுகளைப் பெற்றது.

இதுவரை நித்யா நடித்த படங்களைப் பார்த்தாலே, அவரது தேர்வு எவற்றைப் பொறுத்து அமைகிறது என்பது நன்கு புரியும்.

அசுரத்தனமான நடிப்பு!

தனுஷ் நடிக்கும் கமர்ஷியல் படங்களில் நகைச்சுவைக்கும் பஞ்ச் வசனங்களுக்கும் ஆக்‌ஷனுக்கும் எவ்வளவு முக்கியத்துவம் இருக்குமென்று தெரியும். ஆனால், முந்தைய படங்களின் சாயலில் திருச்சிற்றம்பலத்தில் தனுஷ் தோன்றவில்லை.

ஒரு வண்ணமயமான ஜனரஞ்சக சித்திரம் என்றபோதும் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், நித்யா மேனன் உடன் தனுஷ் தோன்றிய விதமே அதனை ஒரு ‘பீல்குட் படமாக’ கொண்டாட வைத்திருக்கிறது.

நித்யாவும் தனுஷும் பாரதிராஜாவை ‘அவன் இவன்’ என்று விளிப்பதைக் காணச் சங்கடமாக இருந்தாலும், அதனை மீறி படம் முழுக்க அப்பாத்திரங்களை இயல்பாக பார்வையாளர்கள் உணரக் காரணம் சம்பந்தப்பட்டவர்களின் அபார உழைப்புதான்.

அதனாலேயே, பாரதிராஜா அப்படியொரு வார்த்தையை உதிர்த்திருக்கிறார்.

இவ்வளவு ஏன் ‘காஞ்சனா2’வில் நித்யா முதலில் தோன்றும்போது கூட கொஞ்சம் செயற்கையாகவே பட்டது. ஆனால், அடுத்தடுத்த காட்சிகளில் அந்த எண்ணத்தை அடியோடு புரட்டிப்போட்டிருந்தார்.

இந்த படம் வெளியானபோதே ‘ஓகே கண்மணி’யில் துல்கருடன் ‘லிவ் இன்’னில் இருக்கும் பாத்திரத்தை ஏற்றிருந்தார். இரண்டையும் ரசித்தார்கள் ரசிகர்கள். இரண்டிலும் இயல்பு மிளிர்வதாகப் பாராட்டினார்கள். அதுதான் நித்யா.

மேலோட்டமாகப் பார்த்தால் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் தனுஷின் தோழியாகவும் காதலியாகவும் மனைவியாகவும் நித்யா வருகிறார்.

இது போன்ற கதைகளில் ஒரே காட்சியை மீண்டும் ஒருமுறை இடம்பெறச் செய்யும்போது அதில் மேலும் சில ஷாட்களை இணைத்து அவரது பாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதே வழக்கம். ஆனால், இதில் நித்யா அந்த சிரமத்தை எல்லாம் கொடுக்கவில்லை.

‘டூ இன் ஒன்’ போல தனது முக பாவனைகளில் சிநேகத்தையும் நேசத்தையும் ஒருசேர தந்திருக்கிறார். இரண்டாம் முறை படம் பார்க்கும்போது மட்டுமே அது நம் கண்ணில் படும்.

அதற்கேற்ப ‘என்னைத் தாண்டி உன்னை புரிஞ்சுக்க இன்னொருத்தி வரப் போறாளா’ என்பது போன்ற சில வசனங்களும் படத்தில் இருக்கின்றன. இது சாதாரண விஷயமில்லை.

திருச்சிற்றம்பலம் பார்த்தபிறகு நித்யாவின் பழைய பேட்டியொன்றைக் கண்டேன்.

அதில், தான் நடிக்கும் பல படங்களில் தனக்கான காட்சியையும் வசனங்களையும் படப்பிடிப்பு நடக்கும் நாளன்று காலையில் தருவதாக குறிப்பிட்டிருந்தார்.

அதன் வழியே, முழுக்க வசனங்களை மனப்பாடம் செய்வதிலோ, ஏற்கனவே அக்காட்சிக்காகத் தயார்படுத்திக்கொள்வதிலோ அவர் கவனம் செலுத்தவில்லை என்பதை அறியலாம்.

அவரே கூட, கேமிராவுக்கு முன் தான் நினைப்பதை மட்டுமே பாவனைகளில் வெளிப்படுத்துவதாக கூறியிருக்கிறார். அதாகப்பட்டது, கேமிராவுக்கு முன்னால் மட்டுமே ஒரு பாத்திரமாக உருமாறுவதுதான் நித்யாவின் வழக்கமாக இருந்து வருகிறது.

நாள்கணக்கில் மாதக்கணக்கில் வருடக்கணக்கில் நடிப்புக்காக தயாராகும் ‘மெத்தேட் ஆக்டிங்’ முறைக்கு நேரெதிரானது இது. கொஞ்சம் பழமையான நடிப்புக் கலைஞர்கள் பின்பற்றியது.

ஆனால், ஒரு பாத்திரத்திற்குள் தன்னை நுழைத்துக்கொண்டு அதிலிருந்து வெளிவர முடியாமல் தவிக்கும் மனநலச் சிக்கல்களில் இருந்து ஒரு கலைஞரை எளிதாகக் காப்பாற்றக் கூடியது.

ஒரு நடிகையாக மட்டுமல்ல, ஒரு மனுஷியாகவும் தனது வாழ்க்கை எப்படி அமைய வேண்டுமென்ற தீர்மானத்தைத் தெளிவாக கொண்டிருப்பவர் நித்யா என்பதை இதன் மூலமாக அறியலாம்.

ஆதலால், நாம் தரும் ‘நடிப்பு ராட்சசி’ எனும் கிரீடம் அவரது படுக்கையறை மேஜை வரை மட்டுமே பயணிக்கும்.

அடுத்த படத்தில் நடிக்க ‘கமிட்’ ஆகும்போது மட்டுமே, அவர் அதனை கையில் எடுத்துக் கொள்வார். அதுதான் தன் பலம் என்று அவருக்கும் தெரியும். அதுதான் நித்யா!

-உதய் பாடகலிங்கம்

You might also like