40 மாடிகளைக் கொண்ட இரட்டைக் கட்டிடத்தை தகர்க்கும் பணி தீவிரம்!

டெல்லியைத் தலைமையிடமாக கொண்ட சூப்பர்டெக் நிறுவனம், உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் 40 மாடிகளைக் கொண்ட 2 பெரிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களைக் கட்டியது. இதில் 633 குடியிருப்புகளுக்கு அந்த நிறுவனம் முன்பணம் பெற்றுள்ளது.

இந்நிலையில், வீட்டுக்கு முன்பணம் செலுத்தும்போது காட்டிய வரைபடத்துக்கும், கட்டிடம் கட்டப்பட்டதற்கும் வித்தியாசம் உள்ளதாக குடியிருப்போர் நலச்சங்கம், அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த கட்டிடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதால் இடிக்க வேண்டும் என கடந்த 2014-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிர்த்து கட்டுமான நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றமும், கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் பேரில் அந்தக் கட்டிடம் நாளை 3 ஆயிரத்து 700 கிலோ வெடி மருந்துகளை பயன்படுத்தி 9 நொடிகளில் தகர்க்கப்பட உள்ளது. இதையொட்டி அங்கு முன்ெனச்சரிக்கை ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாளை மதியம் 2.30 மணிக்கு கட்டிடம் தகர்க்கப்பட உள்ள நிலையில் நொய்டா விரைவுச்சாலை பகுதியில் 2.15 மணி முதல் 2.45 மணி வரை வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

பாதுகாப்பிற்காக அங்கு 400-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

You might also like