உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியானார் யு.யு.லலித்!

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் பொன்னாவரம் கிராமத்தைச் சேர்ந்த என்.வி. ரமணா கடந்த ஆண்டு ஏப்ரல் 24-ந்தேதி உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். நேற்றுடன் அவர் ஓய்வு பெற்றார்.

இதையொட்டி உச்சநீதிமன்ற வளாகத்தில் அவருக்கு பிரிவுபசார விழா நடந்தது. என்.வி.ரமணா ஓய்வையொட்டி உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித்தை நியமித்து ஏற்கனவே உத்தரவிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக யு.யு. லலித் இன்று காலை பதவியேற்றுக் கொண்டார்.

அவருக்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவர் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பதவியில் 74 நாட்கள் மட்டுமே இருப்பார்.

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியான யு.யு.லலித் 1957-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி மராட்டிய மாநிலம் சோலாபூரில் பிறந்தார். இவரது தந்தை யு.ஆர். லலித் மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாகவும், உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராகவும் இருந்தவர்.

யு.யு.லலித் மும்பை அரசு சட்டக்கல்லூரியில் சட்டம் படித்து 1983-ம் ஆண்டு ஜூன் மாதம் வழக்கறிஞராக பதிவு செய்தார். குற்றவியல் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற அவர் 1983 முதல் 1985 வரை மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார்.

அதை தொடர்ந்து 1986 முதல் 1992 வரை அப்போதைய அட்டர்னி ஜெனரல் சோலி சொரப்ஜியன் வழக்கறிஞர்கள் குழுவில் பணியாற்றினார். பல முக்கியமான வழக்குகளில் ஆஜராகி இருக்கிறார். அவர் 2 முறை உச்சநீதிமன்றத்தின் சட்ட சேவைகள் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றினார்.

2014-ம் ஆண்டு ஆகஸ்டு 13-ந்தேதி சட்டப் புலமை காரணமாக அவர் நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

இதன் மூலம் கீழ் நீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றாமல் உச்சநீதிமன்றத்தின் நேரடியாக நீதிபதியாக நியமிக்கப்பட்ட 6-வது நீதிபதி என்ற பெருமையையும் யு.யு.லலித் பெற்றுள்ளார்.

You might also like