ஆன்மிக உளவியல் தொடர் – 3
எல்லோருக்கும் வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. அது தனிப்பட்ட நபர்களின் சமூக, பொருளாதார, உறவுகள் சார்ந்து இருக்கலாம். அல்லது வேறு எந்தக் காரணங்களுக்காக வேண்டுமானாலும் இருக்கலாம்.
இது போன்ற பிரச்சினைகள், சூழ்நிலைகள் பற்றி ஆன்மிகக் கருத்து ஒன்று இருக்கிறது.
“எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், அது நம்மிடத்தில் எதற்காக வந்ததோ, அதைக் கற்றுக் கொடுக்காமல் போவதில்லை” என்கிறார் ஒரு தத்துவ அறிஞர்.
யாராக இருந்தாலும், எந்தப் பிரச்சினையில் சிக்கியிருந்தாலும், அதுவே தொடர்ந்து இருக்கும் பட்சத்தில், அந்தப் பிரச்சினை நமக்குச் சொல்ல விரும்புவதை நாம் இன்னும் கறறுக்கொள்ளவில்லை என்று கூறலாம்.
ஒவ்வொரு நபருமே ஏதாவது பிரச்சினையில் இருக்கின்றனர். ஆனால் ஒருவர் தொடர்ந்து ஒரே மாதிரியான பிரச்சினையில் இருக்கிறார் என்றால் அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.
முதலாவது அந்த குறிப்பிட்ட பிரச்சினைக்கு காரணமான விஷயத்தைப் போக்கவோ, நீக்கவோ அவர் முயற்சிக்கவில்லை அல்லது அந்த முயற்சிகளால் பலன் இல்லை.
இரண்டாவது காரணம், தான் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சினையின் ஒரு பகுதியே நாம்தான் என்பதை அவர் அறியாது இருக்கிறார்.
இதை ஆன்மிகம் வழியாகப் புரிந்துகொள்ள முயற்சிக்கலாம்.
பலருக்கும் ஆன்மிகம் என்பது அவருக்கு வெளியே இருக்கும் நட்சத்திர மண்டலம், கோவில்கள், சடங்குகள், குறிப்பிட்ட சக்தியை நினைத்து தியானம் என்றெல்லாம் நினைக்கிறார்கள்.
மனதைத் துய்மையாக்குதல், வேண்டாத எண்ணங்களை அதற்கான வழிமுறைகளைப் பின்பற்றி நீக்குதல் என்றெல்லாம் நினைத்துக்கொள்கிறார்கள்.
ஆனால் உண்மையான ஆன்மிகம் நம்மைப் பற்றிய விழிப்புணர்வுதான். நாம் யார், நமது சிந்தனை ஓட்டம் எப்படிப்பட்டது, நாம் எதை, யாரை, எவ்வளவு முக்கியமாக நினைக்கிறோம், நம்மைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம், அதற்கான காரணம் என்ன என்று சிந்தித்துக்கொண்டே போனால் தெளிவு பிறக்கும்.
மனம் லேசாகும். வேண்டாதவை தானே விலகும். வேண்டியவை பற்றி நமக்கு விழிப்புணர்வு ஏற்படும்.
மனம் அமைதியானால், அதுதான் இறை நிலை. மனம் அமைதியாக இருந்தால் பல விஷயங்களைப் பற்றித் தெளிவாகச் சிந்திக்கலாம். பலவற்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.
கடல் எந்த அளவுக்கு ஆழமாக இருகிறதோ அந்த அளவுக்கு பாரத்தைத் தாங்குகிறது. ஏனெனில் அங்கே தேவையற்ற அசைவுகள் இல்லை. கரையை ஒட்டியுள்ள கடலை, காற்றும், மனிதர்களும், ஏன் சிறு பறவைகளும்கூடச் சலசலக்க வைக்கும்.
ஆனால், ஆழக்கடலில் அமைதியும் அதனால் பலமும் அதிகம். அப்படித்தான் மனமும். எந்த அளவுக்கு அமைதியாக இருக்க முடிகிறதோ அந்த அளவுக்குப் புரிதல் அதிகமாகும்.
புரியாத நிலை என்றால் மனதில் குழப்ப நிலைதான். அதுவே இயல்பான பிறகு புரிதலை நோக்கி மனம் பயணிக்காது.
இடியாப்பம் பல சுற்றுகளைக் கொண்டிருக்கிறது. எது எங்கிருந்து துவங்குகிறது எனத் தெரியாத வகையில் இருக்கும். ஆனாலும், பொதுவாக அது வட்ட வடிவில் இருக்கும்.
அதை மட்டும் வைத்து, தெளிவாக உருவாக்கப்பட்டிருக்கும் வடிவம் என்று கூற முடியுமா? அது போலத்தான் குழப்பமான மனநிலை இருக்கிறது என்பது கூட தெரியாமல், அதை ஆராயாமல் இயல்பாய் எடுத்துக்கொண்டால், ‘இடியாப்பம் வட்ட வடிவம் மட்டும்தானே?’ என்று சொல்வது போலத்தான்.
சாக்ரடீஸ் சொல்வது, “உன்னையே நீ அறிவாய்.” இது ஆன்மிகம் தொடர்பான ஒரு கருத்து என்றாலும் உளவியலும் இதைத்தான் சொல்கிறது.
நமது நிலை பற்றி நிதானமாக ஆராய்ந்தால், நமது துன்பத்துக்குக் காரணம் தெரிய வரும். பல சமயங்களில், இதைச் சுலபமாகக் கண்டுபிடித்துவிடலாம். ஆனால் நிலை மாற வேண்டுமானால், நாமும் மாற வேண்டும்.
நமது முயற்சி மாற வேண்டும். நமது செயல்பாடுகள் மாற வேண்டும். சிறிய மாற்றங்கள் பெரிய பாதைக்கு வழி வகுக்கும்.
கண்டுபிடித்தவுடன், எடுத்தேன், கவிழ்த்தேன் எனச் செயல்படாமல் பல சிறிய மாற்றங்களைக் கொண்டுவாருங்கள்.
மிகப் பிரபலமான நாவலாசிரியை அயன் ராண்ட் தனது நாவலில் ஒன்றைக் குறிப்பிட்டிருப்பார்:
“மிகப் பெரிய விஷயம் எதுவும், மனதில் ‘தோன்றிய உடனே’ செய்ததால் நிகழவில்லை. அந்த கணம் வருவதற்கு முன்பாக, பல சிறு விஷயங்கள் தொடர்ந்து ஒரு இலக்கை நோக்கிப் பயணித்ததால் வந்தது” என்கிறார்.
இது மிகப் பெரிய உண்மை.
நமது வெற்றியும் தோல்வியும் நம்மை பாதிக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஒருமுறை தோற்றது, இனி இப்படித்தானோ என நினைத்தால், பிரச்சினையின் கதவைத் திறக்கிறோம்.
அதேபோல, வெற்றி பெற்றவுடன், இனி கவலை இல்லை என நினைத்தால், வரக்கூடிய அடுத்த வாய்ப்பினைப் புரிந்துகொள்ளாமல் விட்டுவிடுகிறோம்.
அப்படியானால், வழிதான் என்ன?
ஜித்து கிருஷ்ணமூர்த்தி சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது. “நான்கு விஷயங்கள் முக்கியமானவை. எதையும் எதிர்கொள்ளுங்கள், ஏற்றுக் கொள்ளுங்கள், அதைச் சரி செய்யுங்கள், அதை விட்டு விலகிச் செல்லுங்கள்.”
இதில் முதல் மூன்றும் நமக்கு எளிதாகப் புரியும். ‘அதை விட்டு விலகிச் செல்லுங்கள்’ என்ற வாக்கியம் குழப்பலாம். ஒரு இலக்கை அடைந்ததும், ஏன் விலகிச் செல்ல வேண்டும் என்ற கேள்வி எழலாம்.
அதற்கான பதில் சூட்சுமமானது. வெற்றி தோல்வி என்று எதுவாக இருந்தாலும் அது ஒரு நிலைதான். அதிலேயே உழன்றுகொண்டிருந்தால், அதற்கு அடுத்து என்னவாக இருக்கும் என்பதை நம்மால் யூகிக்கக்கூட முடியாது.
வாழ்க்கை என்பது ஒரு பயணம் என்பதை அனைவருமே ஒப்புக்கொள்வார்கள். அதன் முக்கியமான அர்த்தத்தையும் சேர்ந்தே புரிந்துகொண்டிருக்கிறார்களா என்று சொல்ல முடியாது.
எதுவும் ஒரே இடத்தில், மாறாமல் இருந்தால் அதைப் பயணம் என சொல்ல முடியாது.
அதே போலத்தான், ஒரே உணர்வு, அது மகிழ்ச்சியாக, கோபமாக, ஆதங்கமாக என எது வேண்டுமானாலும் இருக்கலாம். அதுவே நம்மை வழி நடத்தக் கூடாது நாம் அதற்கு ஒத்துப் போகக் கூடாது.
இதைத்தான் ஜேகே சுருக்கமாக, ‘அதை விட்டு விலகிச் செல்லுங்கள்’ என்கிறார்.
அப்படித்தான் நாம் இருக்கிறோமா என்பதைப் புரிந்துகொள்வதுதான், நமது வாழ்க்கையைப் புரிந்துகொண்டிருக்கிறோமா எனத் தெரிந்துகொள்வதற்கான வழி என்பதை நினைவில்கொண்டு செயல்படுவது நல்லது.
– தனஞ்செயன்