சாலைப் பள்ளங்களால் விபத்து: ஆண்டுக்கு 2300 பேர் பலி!

ஊர் சுற்றிக் குறிப்புகள்: 

கேட்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது.

இந்தியா முழுக்க சாலையில் தோண்டப்படும் பள்ளங்களால் ஆண்டு ஒன்றுக்கு உயிரிழக்கிறவர்களின் எண்ணிக்கை மட்டும் 2300.

தொலைக்காட்சிகளில் இந்தச் செய்தி ஓடிக் கொண்டிருக்கிறது.

இதற்குச் சென்னையும் விதிவிலக்கல்ல.

சென்னை முழுக்க மெட்ரோ ரயில் அல்லது மழை நீர் வடிகால் திட்டம் என்று பல காரணங்களால் எங்கு பார்த்தாலும் பள்ளங்கள் தோண்டப்பட்டு வாகன நெரிசல் அதிகமாகி இருக்கிறது.

கால் டாக்ஸி டிரைவர்கள் சென்னையின் சில பகுதிகள் என்றாலே வர மறுக்கிறார்கள்.

சுமார் எட்டு மாதங்களுக்கு மேலாக சாலையில் பள்ளம் தோண்டும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இன்னும் பல பகுதிகளில் வேலைகள் முடியவில்லை. சாலையின் கால் பகுதியை மறைத்திருக்கின்றன இந்தப் பள்ளங்கள்.

இந்தப் பள்ளங்களில் எத்தனை பேர் வாகனங்களுடன் விழுந்திருக்கிறார்கள் என்று ஒவ்வொரு பகுதியிலும் கேட்டுப்பார்த்தாலே தெரியும் உண்மை நிலவரம்.

தோண்டப்பட்ட பள்ளங்களில் இரும்புக் கம்பிகள் நீட்டிக் கொண்டிருக்க, அதில் தவறி விழுகிறவர்களின் உடம்பில் ஊருவுகின்றன பள்ளங்களில் இருக்கும் இரும்புக் கம்பிகள்.

இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்து சென்னையின் சில பகுதிகளில் ஆம்புலன்ஸ்களில் விழுந்தவர்களைத் தூக்கிக் கொண்டு போவதைப் பார்க்க நேர்ந்திருக்கிறது.

அவர்களில் எத்தனை பேர் தேறி அபாயக்கட்டத்திலிருந்து விடுபட்டிருப்பார்கள்? – தெரியவில்லை.

ஆனால் தற்போது சென்னை போன்ற பெரு நகரங்களில் அவ்வப்போது மழை பெய்கிறது. அப்போது மின்சாரமும் ‘கட்’ ஆகி இருள் சூழ்கிறது.

இப்படிப்பட்ட நிலையில் பள்ளங்களில் இரு சக்கர வாகனங்களில் விழுகிறவர்களைத் தடுக்க சென்னை மாநகராட்சியோ, சம்பந்தப்பட்ட வேலையைக் கால தாமதத்தோடு செய்யும் காண்ட்ராக்டர்களோ, அரசு அதிகாரிகளோ என்ன செய்யப் போகிறார்கள்?

இழப்புகளுக்கு யார் பொறுப்பேற்கப் போகிறார்கள்?

மீண்டும் இந்தியா முழுக்கப் பள்ளங்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஒருமுறை வாசித்துப் பாருங்கள்!

– அகில் அரவிந்தன்

You might also like