தொடர் சாதனைகளைப் படைத்து வரும் ரோஹித் சர்மா!

மும்பை இந்தியன்ஸ் அணியின் செல்லப் பிள்ளையான ரோஹித் சர்மா, கிரிக்கெட் ரசிகர்களால் ஹிட்மேன் என்று அழைக்கப்படுபவர். தற்பொழுது இந்திய அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

இவர் இதுவரை கேப்டனாக விளையாடிய கிரிக்கெட் தொடர்களில் இந்திய அணி தோற்றதே இல்லை என்பது வரலாறு. அதுமட்டுமில்லாமல் தனது பெயருக்கு பின்னால் சில சர்வதேச கிரிக்கெட் சாதனைகளை சேர்த்தவர்.

ஐபிஎல் தொடர்களில் மட்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்று கொடுத்தவர் ரோகித் சர்மா.

முதன் முதலில் கடந்த ஜூன் 23-ம் தேதி 2007-ம் ஆண்டில் அயர்லாந்துக்கு எதிராக இந்திய அணி சார்பாக சர்வதேச கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்தார்.

சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் ஒரே போட்டியில் அதிக ரன் அடித்த வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா தன் வசம் வைத்துள்ளார்.

இவர் ஒரே போட்டியில் 264 ரன்கள் குவித்து இந்த சாதனையை படைத்தார். சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் மூன்று இரட்டை சதத்தை அடித்த ஒரே வீரர் என்ற பெருமையும் ரோஹித் சர்மாவையே சேரும்.

டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்

கடந்த ஜூலை மாதத்தில் தான் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார். நியூசிலாந்து மட்டையாளர் மார்டின் குப்தில்தான் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரராக இருந்தார்.

தற்போது நியூசிலாந்து ஸ்காட்லாந்துக்கு இடையேயான டி20 தொடரில் குப்தில் அணியில் சேர்க்கப்படாததால் ரோஹித் சர்மா இந்த சாதனையை தட்டிச் சென்றார்.

ரோஹித் இப்போது டி20 போட்டிகளில் 3420 ரன்களை கடந்து முதலிடத்தில் உள்ளார். ரோஹித் சர்மாவின் எண்ணிக்கையில் 4 சதங்கள் அடங்கும்.

குப்தில் 3399 ரன்களுடன் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார். ஒரு காலத்தில் முதலிடத்தில் இருந்த விராட் கோலி தற்போது 3308 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

அவர் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் ஓய்வெடுத்துள்ளார். வரும் ஆகஸ்ட் கடைசி வாரத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள ஆசிய கோப்பை 2022-ல் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டி20 போட்டிகளில் அதிக சிக்சர்கள்

நேற்று வெஸ்ட் இண்டீஸ் இந்தியா இடையே நான்காவது டி20 போட்டியில் விளையாடிய ரோஹித் சர்மா இன்னொரு சாதனையையும் படைத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் காயம் காரணமாக வெறும் 11 ரன்கள் குவித்திருந்த போது ரிட்டயர்ட் ஹர்ட் அறிவித்து வெளியேறினார்,

அண்மையில் நடைபெற்ற போட்டியில் வெறும் 16 பந்துகளில் அதிரடியாக 33 ரன்கள் குவித்தார். இதில் மூன்று சிக்சர்களும் அடங்கும். இதன் மூலம் டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த பட்டியலில், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான ஷாஹித் அப்ரிதியை பின்னுக்கு தள்ளி ரோஹித் சர்மா இரண்டாம் இடத்தை பிடித்தார்.

அப்ரிதி 1996-2018 வரை தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 27 டெஸ்ட் போட்டிகளில் 52 சிக்சர்கள், 398 ஒருநாள் போட்டிகளில் 351 சிக்சர்கள் மற்றும் 99 டி20 போட்டிகளில் 73 சிக்சர்கள் உட்பட 476 சிக்சர்களை அடித்து இரண்டாம் இடத்தில் இருந்தார்.

தற்போது ரோஹித் சர்மா 477 சிக்சர்களை அடித்துள்ளார். அதில் 64 சிக்சர்கள் 45 டெஸ்ட் போட்டிகளிலும், 250 சிக்சர்கள் ஒருநாள் போட்டிகளிலும் மற்றும் 131 டி20 போட்டிகளில் 163 சிக்சர்களும் அடித்து சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

தற்பொழுது சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் பட்டியலில் 553 சிக்சர்களை அடித்த மேற்கிந்திய அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் முதலிடத்தில் உள்ளார்.

இவர் 103 டெஸ்ட் போட்டிகளில் 98 சிக்சர்களையும், 301 ஒருநாள் போட்டிகளில் 331 சிக்சர்களையும், 79 டி20 போட்டிகளில் 124 சிக்சர்களையும் அடித்துள்ளார்.

விரைவில் முதலிடம் பிடிப்பார்

தற்போது சர்வதேச அளவில் கிறிஸ் கெய்ல் விளையாடாத நிலையில், அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை விரைவில் ரோஹித் சர்மா எட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் ரோஹித் சர்மாவின் பார்வை மிகச் சிறப்பாகவே உள்ளது. குறிப்பாக கடந்த 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற சர்வதேச உலகக் கோப்பை தொடரில் 4 சதங்களை அடித்தார்.

ஒருபுறம் விராட் கோலி தான் அடுத்த சச்சின் டெண்டுல்கர், அவர் நிறைய சாதனைகளை படைக்க இருக்கிறார் என்று கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில், மற்றொருபுறம் ரோஹித் சர்மா தொடர்ந்து சாதனைகளை படைத்துக் கொண்டே வருகிறார்.

என்னதான் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் என்பதால் சென்னை ரசிகர்களாகிய நமக்கு அவர் மீது சற்று வெறுப்பு இருந்தாலும் கூட, அவர் இந்தியாவின் சிறந்த கேப்டனாக செயல்பட்டு வருகிறார் என்பதில் கடுகளவு கூட சந்தேகம் இல்லை.

– இளவரசன்

You might also like