உலக அளவில் பெண்களின் முன்னேற்றம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. நமது கடந்த காலங்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் நமது சமூகத்தில் பெண்களின் வளர்ச்சி அபாரமாக உள்ளது.
என்னதான் நம் நாடே ஒரு பெண் தைரியத்தையும் வளர்ச்சியையும் தலையில் தூக்கிவைத்து பாராட்டினாலும், சில பெண்களின் நடைமுறைகளை எதிர்த்து வருவது நம் நாட்டில் மிக சாதாரணமான விஷயம்.
ஜார்க்கண்டின் கும்லா மாவட்டத்தில் உள்ள தஹுடோலி கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண் தற்பொழுது விவசாயம் செய்து கொண்டிருப்பதால் அவருக்கு எதிராக ஒரு ஊரே கிளம்பி உள்ளது.
மஞ்சு ஓரான் என்னும் 22 வயதான இளம் பெண் தஹுடோலி கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 58 வயதான நோய்வாய்ப்பட்டிருக்கும் தாயார், 65 வயதான முதிய தந்தை, மனநலம் குன்றிய இளைய சகோதரர் மற்றும் 33 வயதான மூத்த சகோதரர் ஆகியோருடன் மஞ்சு வசித்து வருகிறார்.
தற்பொழுது மஞ்சு தனது மூத்த சகோதரரான வினோத் பகத்தின் உதவியுடன் தான் விவசாயம் செய்து வருகிறார்.
பல நூற்றாண்டுகள் பழமையான சமூக பாரம்பரியம்
பல நூற்றாண்டுகள் பழமையான ஓரான் சமூகத்தின் பாரம்பரியத்தை மஞ்சு மீறி இருப்பதாக கிராம மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மஞ்சுவுக்கு எதிராக ஆண்கள் மட்டுமல்ல, அந்த கிராமத்தில் பெண்களும் சேர்ந்து கொண்டு ஆட்சேபம் தெரிவித்து வருகிறார்கள்.
இதுகுறித்து அந்த கிராம மக்களில் ஒருவர் கூறுகையில், “எந்த சூழ்நிலையாக இருந்தாலும் ஓரான் சமூகத்தில் பெண்கள் நிலத்தை உழுவது தடை செய்யப்பட்டுள்ளது.
இங்குள்ள வழக்கப்படி பெண்கள் நிலத்தை உழ முடியாது, ஆனால் மஞ்சு டிராக்டர் மூலம் வயலை உழுததால், ஊர் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பெண்கள் செய்யும் வேலையை பெண்கள் செய்ய வேண்டும். ஆண்கள் செய்யும் வேலையை ஆண்கள் செய்ய வேண்டும்.” என்று கூறினார்.
பெண்களின் முன்னேற்றத்தை தடுக்கக் கூடாது
ஒரு பாரம்பரியத்தை சமூகத்தில் நிலைநிறுத்த வேண்டும் என்று நினைப்பது தப்பு அல்ல, ஆனால் அது ஒரு மனிதனின் செயல்பாடுகளையும் அல்லது முன்னேற்றத்தையோ தடுக்குமேயானால் அது நிச்சயமாக சமூகத்திற்கு தேவை கிடையாது.
பெண்கள் தற்போது எல்லா வேலைகளிலும் முன்னேறி சென்று கொண்டிருக்கிறார்கள். ஆண்கள் செய்யக்கூடிய எல்லா வேலைகளிலுமே தாங்களும் பங்களிக்க முடியும் என்ற மன உறுதியுடன் பணியாற்றி வருகிறார்கள்.
குறிப்பாக பழங்குடியின பெண்களின் வளர்ச்சி தற்பொழுது அதிகரித்துக் கொண்டே வருகிறது.
நகரங்களில் வசிக்கும் பெண்களின் வாழ்வாதாரம் கூட மாறிவிட்ட நிலையில் இன்னும் பல பழங்குடியின பெண்களின் வாழ்வாதாரம் நம் நாட்டில் இன்னும் மாறவில்லை என்பது தான் வருத்தமான உண்மை.
இதை உடைக்கும் வகையில் தான் தற்பொழுது ஒரு பழங்குடியின பெண்மணி இந்தியாவிற்கு ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார்.
இந்திய பழங்குடியின பெண்மணியான திரௌபதி முர்மு இந்தியாவின் ஜனாதிபதியாக பதவியேற்ற போது இந்தியாவை அதைப் பற்றி பேசி பெருமை கொண்டது, ஆனால் தற்பொழுது ஒரு பழங்குடியின இளம் பெண் விவசாயம் செய்வதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் இன்னொரு கோணமும் உள்ளது.
அந்தப் பகுதியில் வசித்து வந்த கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்த பிரவீன் மின்ஜ் என்பவர், தஹுடோலி கிராமத்தின் ஓரான் சமுதாயத்தைச் சேர்ந்த இரண்டு குடும்பங்களை மதம் மாற்றியதன் காரணமாக கடந்த ஜூலை இரண்டாம் தேதி கிராம சபை கூட்டப்பட்டு, அவரும் மதமாற்றம் செய்த அந்த இரு குடும்பத்தாரும் ஊரை விட்டு தள்ளி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் பிரவின் மின்ஜிடமிருந்து விவசாய நிலத்தை மஞ்சு குத்தகை எடுத்துள்ளார் என்று கிராம மக்கள் பெரிய குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
இதுகுறித்து பதில் அளித்த மஞ்சு, “பிரவீன் மின்ஜ் கிராமத்தை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டது உண்மைதான். அவருடைய நிலங்களில் விவசாயம் செய்ய கூடாது என்று கிராம மக்கள் முடிவு செய்தனர்.
அவர் கிராமத்திலிருந்து தள்ளி வைக்கப்பட்ட பிறகும் கிராமத்தின் மளிகைக் கடை அவருக்குப் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. அப்படி இருக்கையில் நான் ஏன் அவரின் நிலத்தில் விவசாயம் செய்யக்கூடாது என்ற கேள்வியை கிராம மக்களிடம் நான் எழுப்பினேன்.” என்று தெரிவித்தார்.
கொரோனா பொது முடக்கத்தின் போது விவசாயம் கற்ற மஞ்சு
கடந்த 2019ஆம் ஆண்டில் கல்லூரியில் இருந்து தேர்ச்சி பெற்ற மஞ்சு அதன் பிறகு வந்த கொரோனா பொது முடக்கத்தின் காரணமாக வீட்டிலேயே தங்கும் நிலை ஏற்பட்டது. அப்பொழுது தான் தனது மூத்த சகோதரருடன் சேர்ந்து கொண்டு விவசாயம் கற்கத் தொடங்கினார்.
விவசாயத்தை ஒரு நல்ல தொழிலாக செய்ய வேண்டும் என்பது அவருடைய கனவு. கடந்த இரண்டு வருடமாக கடுமையாக உழைத்த மஞ்சு வியாபாரத்தால் ஈட்டிய லாபம் மற்றும் நண்பர்களின் சிறு உதவிகளோடு ஒரு பழைய டிராக்டரை வாங்கி அதன் மூலம் தற்பொழுது விவசாயம் செய்து வருகிறார்.
மஞ்சு போன்ற பல இளம் பெண்கள் இந்தியாவில் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் முதலில் மஞ்சு வளர்ச்சி அடைய வேண்டும்.
ஒவ்வொரு விதைகளும் எதிர்காலத்தின் ஆணி வேர்கள், ஆகையால் மஞ்சு வசிக்கும் பகுதியின் வட்டாட்சியர், கோட்டாட்சியர் அல்லது அரசு அலுவலர் யாராவது இந்த விவகாரத்தில் தலையிட்டு இதற்கு ஒரு சமூக தீர்வை காண வேண்டும்.
மஞ்சு போன்ற ஒரு துடிப்பான விவசாயி தற்பொழுது நாட்டுக்கு தேவை.
– இளவரசன்