இளைஞரின் கைகளில் துணியைச் சுற்றித் தீப்பற்ற வைத்தார்கள்!

– தொல். திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரான தொல்.திருமாவளவனை ‘புதிய பார்வை’ இதழுக்காக மணா கண்ட நீண்ட நேர்காணலில் இருந்து ஒரு பகுதி.

பிறந்த நாள் வாழ்த்துகளுடன் அவரைப் பற்றிய சிறப்புப் பதிவு உங்கள் பார்வைக்கு:

கேள்வி : தனிப்பட்ட முறையில் தீண்டாமைக் கொடுமையை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா?

திருமா: என் சொந்த ஊரில் பள்ளியில் படித்த காலத்தில் மதிய உணவு சாப்பிட்டுவிட்டுத் தட்டைக் கழுவுவதற்காக ஊருக்குப் பொதுவான குடிநீர்த் தொட்டியைத் தேடிச் செல்வோம்.

அங்கு தண்ணீர் இல்லாதபோது பக்கத்து வீடுகளுக்குப் போவோம். அங்கு சிலர் எங்களைப் பற்றி விசாரித்துவிட்டு யாரென்று தெரிந்ததும் சற்று தூரத்தில் நின்று எங்களுக்குத் தண்ணீரை ஊற்றியது நினைவில் இருக்கிறது.

என் தந்தை எட்டாம் வகுப்புவரை படித்தவர். அந்தக் காலகட்டத்தில் அவருக்கு அரசு வேலைவாய்ப்பு கிடைக்காததால் ஊரில் ஒரு ஆண்டையின் வீட்டில் பண்ணை வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது சில நேரங்களில் பள்ளியில் கொடுக்கும் மதிய உணவு பிடிக்காமல் அவர் வேலை செய்கிற இடத்திற்குப் போவேன்.

மாடு குளிப்பாட்டும் கொட்டகையில் அவர் இருப்பார். ஒரு சமயம் போனதும் அவருக்குக் கொடுக்கப்பட்ட சாப்பாட்டைச் சாப்பிடச் சொன்னார். “சாப்பாடு எங்கே இருக்கிறது?” என்று கேட்டபோது, ஓரிடத்தைக் கைகாட்டினார்.

தேடிப்பார்த்தேன். தெரியவில்லை. பிறகு அவரே வந்து தேடிக் கொடுத்த போது எனக்கு அதிர்ச்சி.

காரணம், தானியத்தை அளக்கக்கூடிய மரக்காலில் தான் அவருக்கான கம்பஞ்சோற்று உருண்டை இருந்தது. புளிப்புடன் இருந்த அந்தச் சோறு எனக்குப் பள்ளியில் வழங்கப்பட்ட உணவைவிட, மோசமாக இருந்தது.

இருந்தாலும் நான் அதைச் சாப்பிட்டேன். சாப்பிட்டுத் தண்ணீர் குடிக்கப் போனால் அதே மாதிரி தானியத்தை அளக்கிற மாகாணிப் படியில் தான் தண்ணீர் இருந்தது.

அதெல்லாம் அந்த வயதிலேயே மனதில் ஒரு வலியை உண்டு பண்ணியது.
அந்த வலியுடன் அப்பாவிடம், “ஏன் நம்மை இப்படி நடத்துறாங்க?” என்று கேட்டேன்.

“இப்படித்தான் இங்கே நடைமுறையில் இருக்கு…” என்று அப்பா பதில் சொன்னாலும் மனது நிறைவடையவில்லை.

கேள்வி : சாதியத்தின் தாக்குதலை அப்போது தான் உணர்ந்தீர்களா?

திருமா; சாதியப் பாகுபாட்டினால் வரும் கொடுமையை அனுபவிக்கிற போது தான் உணர முடியும். பள்ளி இடைவேளையில் சாமி சிலைகளை வைக்கும் சாவடியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, இங்கெல்லாம் நீ விளையாடக்கூடாது என்று விலகிப் போகச் சொல்லியிருக்கிறார்கள்.

ஒரு சமயம் கடைக்காரரின் கையைத் தொட்டுக் காசைக் கொடுத்தேன். அதற்குக் கடுமையாக ஏசினார்கள்.

இன்னொரு சம்பவம். சாதி இந்துவிடம் வீட்டில் வேலை செய்து கொண்டிருக்கும் ஒரு இளைஞர், அவர் வேலை செய்யும் வயலில் அங்கிருந்த மோட்டார் ஒரு நாள் காணாமல் போனது.

அதற்கு அவர் தான் காரணம் என்று சொல்லி அந்த இளைஞரை ஊர் நடுவில் கட்டி வைத்து, கடுமையாக அடித்து, அவருடைய கை விரல்களில் துணியைச் சுற்றி அதில் தீப்பற்ற வைத்தார்கள். அந்தக் கொடுமையைப் பார்த்தபோது வேதனையாக இருந்தது.

இப்படியெல்லாம் கொடுமை நடக்கும் ஊரில் யாரும் தட்டிக் கேட்க மறுக்கிறார்களே என்கிற உணர்வும் இருந்தது.

பிறகு நான் சென்னைக்குப் படிக்க வந்த பிறகு அதன் கொடுமையை உணரவில்லை.

படித்து முடித்து அரசு வேலை கிடைத்து மதுரைக்குப் போனபோது, அந்தப் பகுதியில் உள்ள சாதிக் கொடுமையின் தீவிரத்தை என்னால் உணர முடிந்தது. அதையொட்டித்தான் சாதியக் கொடுமைகளை எதிர்த்துப் போராட வேண்டிய சூழ்நிலை எல்லாம் உருவானது.

கேள்வி : அப்போது தமிழ்நாட்டில் உள்ள எந்த இயக்கத்தினுடைய செயல்பாடு உங்களுடைய உணர்வுக்கு நெருக்கமாக இருந்தது?

திருமா : நான் சென்னையில் படிக்கிறபோது திராவிட இயக்கங்களின், குறிப்பாக திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிகழ்ச்சிகளுக்குச் செல்வது வழக்கம்.

திராவிடர் கழகத்தினர் பெரியார் திடலில் நடத்தும் சொற்பொழிவுகளிலும் பார்வையாளராகப் பங்கேற்று இருக்கிறேன்.

பெரியார் பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் இணைந்து செயல்பட்டிருக்கிறேன். அவ்வப்போது அம்பேத்கர் இயக்கங்கள் நடத்திய பேரணியிலும் பங்கேற்று இருக்கிறேன். பெரியார், அண்ணாவின் நூல்களைப் படிக்கும் வாய்ப்புகளைப் பெற்றேன்.

இந்த உணர்வோடுதான் சென்னைப் பல்கலைக்கழகத்தில் நான் படிக்கிற போது கவியரசு கண்ணதாசன் இலக்கியப் பேரவையின் செயலாளர் பொறுப்பில் இருந்தேன். அப்போது ஈழ விடுதலையை ஆதரித்துப் பெரியார் திடலில் என்னுடைய தலைமையில் மாணவர் மாநாடு நடத்தினேன்.

‘விடுதலைப் புலிகள்’ என்ற பெயரில் ஒரு கையெழுத்துப் பத்திரிகையையும் அந்தச் சமயத்தில் நடத்தினேன். அதில் ஈழப் பிரச்சனைகளைப் பற்றிக் கவிதைகளை, கட்டுரைகளை எழுதுவோம்.

இரண்டு பிரதிகளை மட்டும் இரவெல்லாம் கண்விழித்து எழுதி, சென்னை சி.ஐ.டி காலனி நூலகத்திலும், சைதாப்பேட்டை தாடண்டர் நகர் நூலகத்திலும் நூலகரின் ஒப்புதலோடு பார்வைக்கு வைத்திருந்தேன்.

ஈழத்தமிழரின் அரசியலில் ஈடுபாடு இருந்ததால் அதையொட்டி தமிழ்த் தேசிய உணர்வும் இயல்பாகவே வளர்ந்தது. இந்த உணர்வுதான் சாதி ஒழிப்பையும், தமிழ்த் தேசியத்தையும் இணைத்துச் செயல்படுவதற்கு அடிப்படையாக அமைந்தது.

கேள்வி : ‘தலித் பேந்தர்’ (DPI) அமைப்புடன் எப்போது தொடர்பு ஏற்பட்டது?

திருமா : 1988 ஏப்ரல் மாதத்தில் மதுரைக்குப் போய் வேலைக்குச் சேர்ந்த பிறகுதான் ‘தலித் பேந்தர்’ இயக்கம் எனக்கு அறிமுகமானது. அப்போது அது ‘பாரதிய தலித் பேந்தர் இயக்கம்’ என்கிற பெயரில் இயங்கிக் கொண்டிருந்தது. அதன் தலைவரான வழக்கறிஞர் மலைச்சாமி என்னை வந்து சந்தித்தார்.

அதன்பிறகு அவர் ஏற்பாடு செய்த கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன். திடீரென்று 1989 செப்டம்பர் மாதத்தில் அவர் காலமானார். அவருக்காக ஒரு இரங்கல் கூட்டத்தை நடத்தினேன்.

அந்தச் சமயத்தில் “நீங்களே ஏன் இந்த இயக்கத்திற்குத் தலைமைப் பொறுப்பேற்கக் கூடாது?” என்று கேட்டார்கள்.

முதலில் தயங்கினாலும் பிறகு 1990 ஜனவரியில் அந்த இயக்கத்தின் தலைமைப் பொறுப்பேற்க ஒப்புக்கொண்டேன். அதுவரை பாரதிய தலித் பேந்தர் இயக்கமாக இருந்ததை முற்றிலும் மாற்றி அமைத்தேன்.

அதுவரை அதற்குத் தேசிய அளவில் இருந்த மராத்தியத் தலைமையை நான் ஏற்கவில்லை. ‘விடுதலைச் சிறுத்தைகள்’ என்று பெயர்சூட்டி, தனிச் செயல் திட்டங்கள் மற்றும் கொள்கைகளை வரையறுத்தேன்.

கேள்வி : ஈழச் சாயல் படிந்த ஒரு பெயராகத் தான் ‘விடுதலைச் சிறுத்தைகள்’ என்கிற பெயரை அந்த இயக்கத்திற்கு சூட்டினார்களா?

திருமா : 1983-லிருந்தே ஈழத்தின் மீது ஈடுபாடு இருந்ததால் விடுதலைப் புலிகளைப் பற்றி எனக்கு ஒரு மதிப்பீடு இருந்தது. ஈழ மக்களுக்காக உயிரையே இழக்கக்கூடிய அளவுக்குப் போராடுகிறார்கள் என்பதை அவர்கள் மீது நன்மதிப்பை ஏற்படுத்தி இருந்தது.

அதன் பாதிப்பு எனக்கிருந்ததால்’ தலித் பேந்தர்’ என்கிற பெயரை ‘ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள்’ என்று மொழிமாற்றம் செய்திருந்த பெயரை மாற்றி ‘விடுதலைச் சிறுத்தைகள்’ என்று சூட்டினேன்.

சாதி ஒழிப்பு, தமிழ்த் தேசியம், வர்க்கப் போராட்டம், பெண் விடுதலை, வல்லரசு எதிர்ப்பு என்று ஐந்து வகையான கொள்கைகளை வரையறுத்துக் கொண்டு செயல்பட ஆரம்பித்தோம்.

கேள்வி : விடுதலைச் சிறுத்தைகள் என்கிற பெயரை வைத்ததற்காகவே சந்தேகத்தின் பேரில் நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியிருந்ததா?

திருமா : ரொம்பவும் கடுமையாகவே இருந்தது. அதே சமயம் இயக்கத்தின் பெயர் இளைஞர்கள் மத்தியில் ஒருவித ஈர்ப்பையும் ஏற்படுத்தியது. கிராமங்களில் உள்ள மக்கள் மத்தியில் எங்களுடைய பெயரை வைத்து ஏதோ ஒரு தீவிரவாத இயக்கம் என்கிற எண்ணமும் ஏற்பட்டது.

அதற்கேற்றபடி சிலர் அந்தச் சந்தேகத்தைப் பயன்படுத்தி எதிர்ப் பிரச்சாரம் செய்தார்கள்.

காவல்துறையும் இதே விதத்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் எங்களுக்கு உதவி செய்வதாக விஷமப் பிரச்சாரத்தைச் செய்தது. அதையும் மீறி இந்த இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதில் நாங்கள் உறுதியோடு இருந்தோம்.

கேள்வி : “இந்த அமைப்பைத் துவக்குவதற்கு முன்பு தி.மு.க.வில் உறுப்பினராக இருந்தீர்களா?’’

திருமா : நான் சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது ஈழப் பிரச்சனையில் தீவிரம் காட்டியதை ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன்.

அனைத்துக் கல்லூரி மாணவர் அமைப்பில் இருந்த போது தி.மு.க. மாணவரணியுடன் எனக்குக் கூடுதலான அறிமுகம் இருந்தது.

அது தவிர அதில் உறுப்பினராக இருந்ததில்லை. பேராசிரியர் கலந்து கொண்ட கூட்டத்தில் நானும் ஒரு பேச்சாளனாகப் பங்கெடுத்திருக்கிறேன்.

இந்த அனுபவங்களை வைத்து தி.மு.க.வின் பேச்சாளர்கள் பட்டியலில் என்னை இணைக்கச் சொல்லிக் விண்ணப்பித்தேன்.

அதற்குப் பிறகு ஒரே ஒருமுறை மட்டும் எனக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அது ஒரு போராட்டம் நடத்துவதற்கான கலந்துரையாடல்.

அதில் கலந்துகொண்டு கட்சியின் மந்த நிலை பற்றியும், வெகுஜன மக்களிடம் கட்சிப் பற்றியிருக்கும் கருத்துக்களைப் பற்றியும் இயல்பாகப் பேசியதும் சலசலப்பாகி விட்டது.

பேசிக் கொண்டிருக்கும்போதே கலைஞர் கூப்பிட்டு “போராட்டத்தைப் பற்றி மட்டும் பேசுங்க” என்று சொன்னார். நான் பேசி விட்டு நகர்ந்ததும் “வெகுஜனம் என்றெல்லாம் பேசினால் சாதாரண மக்களுக்குப் புரியாது” என்று கலைஞர் சொன்னார்.

அந்த அளவுக்கு மட்டும்தான் தி.மு.க.வுடன் எனக்கு தொடர்பு இருந்தது.
இந்த அறிமுகத்தில் தான் நண்பர்களின் வற்புறுத்தலினால் 1989-இல் நடந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டேன். அதற்கு முன்பு வைகோவை அழைத்துச் சென்று இரண்டு கூட்டங்கள் நடத்தினேன்.

தேவநேயப் பாவாணர் நூலகத்தில் என்னுடைய தலைமையில் நடந்த ஒரு கருத்தரங்கிற்கு கலைஞரே தேர்ந்தெடுத்துக் கொடுத்த ‘குற்றவாளிக் கூண்டில் இந்திய அரசு’ என்கிற தலைப்பில் பேசினார் வைகோ.

அவர் தேர்தல் பணிச் செயலாளராக இருந்ததால் விண்ணப்பித்தேன். அப்போது நேர்காணலுக்கு அழைத்தார்கள். போனேன். வழக்கறிஞருக்காகப் படித்துக் கொண்டிருப்பதைச் சொன்னேன். “படிப்பை முடித்துவிட்டு வாருங்கள்” என்று சொல்லி அனுப்பி விட்டார்கள்.

அதை வைத்துத்தான் தி.மு.க.வில் நான் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்ததாகப் பேசப்பட்டது.

(நேர்காணலின் அடுத்த பகுதி – தொடரும்)

– 2004-ல் ‘புதியபார்வை இதழில் மணா எடுத்த நேர்காணலின் ஒரு பகுதி.

You might also like