நாகேஷைப் பற்றி நச்சென்று நாலு வரிகள் சொல்ல முடியுமா? என கிரேசி மோகனிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவரது பதில்…
“நகைச்சுவையாக நாம் பேசும் எல்லா வரிகளுமே நாகேஷ் பேசிய வரிகள்தான். நகைச்சுவைக்கு காமெடி, ஹாஸ்யம், ஜோக், துணுக்கு, ஹ்யூமர், விட் என்று பல பேர்கள் இருந்தாலும் எங்க வீட்டுல வெச்ச பேர் ‘நாகேஷ்’.
“சார்… சீஸர்னு பேர் வெச்சு ஒரு நாய் வளர்த்தேன், செத்துடுச்சு சார்” என்று ஒருவர் ஏதோ ஒரு படத்தில் இன்னொருவரிடம் சொல்லும்போது, புயலாக உள்ளே நுழையும் நாகேஷ் ‘‘ஏன்யா… நாய்க்கு பேரு வெச்சியே, சோறு வெச்சியோ?’’ என்று கேட்டுவிட்டு, பதில் எதிர்பாராமல் வீட்டுக்குள் நுழைவார்.
இவரது டயலாக் டெலிவரி எப்போதுமே சுகப்பிரவசம்தான்.
ஆய கலைகள் அறுபத்து நாலுக்குச் சொந்தக்காரியான சரஸ்வதிதேவியின் ‘மோனோலிஸா’ சிரிப்புக்கே காரணம்… நாகேஷ் அடித்த ஜோக்காகத்தான் இருக்கும்.
நான் வேடிக்கை பார்த்து வியந்த நாகேஷுக்கு வசனம் எழுதும் பாக்கியம் ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் தொடங்கி, ‘மைக்கேல் மதன காமராஜன்’ வழியாக ‘பஞ்ச தந்திரம்’, ‘வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்’ வரை தொடர்ந்தது.
‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் டம்மி புலி இல்லாமல் நிஜ புலியை ஜிம்மி போலவே பாவித்து, அதனுடன் சேர்ந்து நடித்தார். நாங்கள் எல்லாம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம்.
குறிப்பாக ஸ்டண்ட் மாஸ்டர் அமரர் விக்ரம் தர்மா தடுத்தபோது ‘‘பேச்சாளன் மேடையில சாகணும். ஃபுட்பால் பிளேயர் கோல் போஸ்ட்ல சாகணும். நடிகன் ஷூட்டிங் ஸ்பாட்ல சாகணும். அதான் வீர மரணம்’’ என்றார்.
‘மகளிர் மட்டும்’ படத்தில் பிணமாக நடிக்கும் போது, என்னிடம் தொடர்ந்து ‘கிரேசி எனக்கு ஒரு வசனம் கூட கிடையாதா?’ என்று தொண தொணவென்று கேட்டுக் கொண்டே இருந்தார். கடைசியில் அவருடைய நகைச்சுவை ‘குறும்பு’ புரிந்து படக்குழுவே வாய்விட்டுச் சிரித்தது.
- நன்றி: தி இந்து இதழ்