வாண வேடிக்கைகளுடன் நிறைவடைந்த காமன்வெல்த்!

22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கின. 72 நாடுகள் பங்கேற்ற இந்த பிரம்மாண்ட விளையாட்டு திருவிழாவில் 5,000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

இந்த போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலியா 178 பதக்கங்களுடன் (67 தங்கம், 57 வெள்ளி, 54 வெண்கலம்) முதலிடத்தில் போட்டியை நடத்திய இங்கிலாந்து 176 பதக்கங்களுடன் (57 தங்கம், 66 வெள்ளி, 53 வெண்கலம்) இரண்டாவது இடத்தையும் பிடித்தன.

கனடா 92 பதக்கங்களுடன்(26 தங்கம்,32 வெள்ளி, 34 வெண்கலம்) மூன்றாவது இடத்தில் இருந்தது. இந்தியா 61 பதக்கங்களை (22 தங்கம், 16 வெள்ளி மற்றும் 23 வெண்கலம்) வென்று நான்காவது இடத்தை கைப்பற்றியது.

இந்நிலையில் காமன்வெல்த் போட்டி நிறைவு விழா பர்மிங்காமில் உள்ள அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

இதில், பர்மிங்காம் காமன்வெல்த் போட்டிகள் நிறைவடைந்ததை இளவரசர் எட்வர்ட் முறைப்படி அறிவித்தார்.

அடுத்த காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா நகரில் 2026-ம் ஆண்டு நடைபெறுகிறது.

இதனை அடுத்து காமன்வெல்த் விளையாட்டுக் கொடி விக்டோரியா ஆளுநரிடம் வழங்கப்பட்டது. பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும் வகையில் பல்வேறு இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சிகளும் இதில் இடம் பெற்றிருந்தன.

நிறைவு விழா அணிவகுப்பில் டேபிள் டென்னிஸ் வீரர் அச்சந்தா ஷரத் கமல் மற்றும் குத்துச்சண்டை வீராங்கனை நிகாத் ஜரீன் ஆகியோர் இந்திய தேசிய கொடியை ஏந்திச் சென்றனர்.

You might also like