கடந்த இரண்டு ஆண்டுகளாக மனிதர்கள் சந்தித்த சோதனைகள் பல. கொரோனாவில் இருந்து ஆரம்பித்து இப்பொழுது குரங்கு அம்மை நோய் வரை பல அச்சுறுத்தல்கள் மனித குலத்தை வாட்டிய வண்ணம் உள்ளன.
இதற்கு இடையில் காலநிலை மாற்றம் என்பது ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக உருவாகி வருகிறது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் வெப்ப அலைத் தாக்கம் அதிகரித்து வருவதால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
ஸ்பெயின், இங்கிலாந்து போன்ற நாடுகளில் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் தாக்குவதால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
கடந்த மாதம் 11-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை ஸ்பெயின் நாட்டில் ஒரே வாரத்தில் வெப்ப அலையால் 829 பேர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஸ்பெயின் நாட்டிலேயே இதுவரை வந்த மிகப்பெரிய வெப்ப அலையாக அது கருதப்படுகிறது.
ஐரோப்பாவின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் வாட்டி வந்த வெப்ப அலையானது கடந்த சில நாட்களுக்கு முன்பு படிப்படியாக குறைய ஆரம்பித்தது. குறிப்பாக ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கலில் தான் வெப்ப அலையால் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த இரு நாடுகளிலும் தற்பொழுது வரை வெப்ப அலையால் நிகழ்ந்த உயிரிழப்புகள் 1600ஐ தாண்டி உள்ளது.
இந்த கடுமையான வெப்ப அலையின் பாதிப்பு காரணமாக கடந்த வாரம் ஸ்பெயின் தீயில் 15,000 ஹெக்டேர் காடுகளை இழந்தது. மேலும் பிரான்சின் ஜிரோண்டில் பகுதியில் நிகழ்ந்த காட்டுத்தீயால் இதுவரை 20,000 ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டு 40,000 மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதுதான் அந்த பகுதிகளில் இதுவரை நடந்த மிகப்பெரிய காட்டுத்தீ என்று கருதப்படுகிறது.
என்னதான் வெப்ப அலையின் தாக்கம் தற்போது குறைந்து வந்தாலும் இதுவரை வாட்டிய வெப்ப அலையால் பல பகுதிகளில் நீர் மட்டத்தின் அளவு குறைந்துள்ளது. ஐரோப்பாவின் பெரும் பகுதிகளில் தற்பொழுது வறட்சி வாட்டி வதைக்கிறது.
குறிப்பாக ஜெர்மனியில் நீர்மட்டம் மிகவும் குறைந்து காணப்படுவதால் அங்கு அணைகள் தற்பொழுது மூடப்பட்டுள்ளன.
ஆகையால் ஜெர்மனி நாடுகளில் உள்ள அணைகளில் இருந்து தண்ணீர் பெற்றுக் கொண்டிருந்த பகுதிகள் தற்போது பெரும் பாதிப்படைந்துள்ளன.
இதையெல்லாம் பார்க்கும் பொழுது என்னடா இது வெறும் 40 டிகிரி செல்சியஸை தாண்டியதற்கு இவ்வளவு பெரிய பாதிப்பா என்று நமக்குத் தோன்றலாம். ஆனால் இந்த ஐரோப்பிய பகுதிகள் மிகவும் குளிர் வாய்ந்த பகுதிகள் என்பதால் 40 டிகிரி செல்சியஸ் என்பது நமக்கு 70 செல்சியஸ் போன்ற தாக்கம் ஆகும்.
நமது ஊரில் குளிரின் அளவு 18 டிகிரிக்கு கீழ் குறைந்தால் பயங்கர நடுக்கம் மற்றும் குளிர் ஏற்படும். ஆனால் தற்போது வெப்ப அலைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் குளிரின் அளவு இயல்பாகவே மைனஸ் டிகிரிகளை தாண்டிச் செல்லும்.
தற்போது தொடர்ந்து வாட்டி வரும் வெப்ப அலையால் ஒரு புது முடிவுக்கு ஐரோப்பிய நாடுகள் வந்துள்ளன. புயலுக்கு நாம் பெயரிடுவது போல வெப்ப அலைக்கு பயிரிடுவது என்று முடிவெடுத்துள்ளனர்.
குறிப்பாக புயல்களுக்கும், சூறாவளிக்கும் பெயரிடுவது போல வெப்பலைக்கும் பெயரிடுவது என்று ஸ்பெயின் நாடு முதன் முதலில் முடிவெடுத்துள்ளது. அந்த நாட்டின் செவிலி நகரத்தில் வீசிய வெப்ப அலைக்கு ‘சோ’ (Zoe) என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வெப்ப அலைகளுக்கு பெயரிட்ட உலகின் முதல் நகரம் என்ற பெயரைப் பெற்றுள்ளது.
காலநிலை நிபுணர்களும், வானொலி நிபுணர்களும் வெப்ப அலையின் தாக்கம் மற்றும் ஈரம் பதம் இரண்டையும் ஆராய்ந்து அடுத்து வெப்பநிலை எப்பொழுது வரலாம் என்று தொடர்ந்து கணித்து அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.
இப்பொழுது வெப்ப அலைக்கு பெயிரிடப்பட்டுள்ளதால் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்ட மிகவும் சுலபமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. மக்களிடம் பொதுவாக வெப்ப அலை வருகிறது. எச்சரிக்கையாக இருங்கள் என்று சொன்னால் அது சில நேரம் தேவையற்ற பீதியை கிளப்புகிறது.
ஆனால் ‘சோ’ வெப்ப அலையை ஒப்பிட்டு அறிக்கையை வெளியிடும் பொது மக்களும் தேவையான அளவுக்கு சுதாரித்துக் கொண்டு எச்சரிக்கையாக இருக்க சுலபமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
– இளவரசன்