தென்றலைத் தீண்டியதில்லை; தீயைத் தாண்டியிருக்கிறேன்!

– கலைஞர் மு.கருணாநிதியின் திரை வரிகள்:

*

1947 – எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த ‘ராஜகுமாரி’ படத்தில் :

கதாநாயகி : நான் எட்டாத பழம்.

நாயகன் : வெட்டும் கத்தி நான்.

நாயகி : வைரக்கத்தியாகவே இருக்கலாம். அதற்காக யாரும் வயிற்றில் குத்திக் கொள்ள மாட்டார்கள்.

நாயகன் : சிலரைச் சில காலம் ஏமாற்றலாம், ஆனால் பலரைப் பல காலம் ஏமாற்ற முடியாதம்மா.

*

1948 – அபிமன்யூ படத்தில் :

“அங்கே தான் இருக்கிறது. ஆச்சாரியாரின் சூழ்ச்சி”

*

1950- எம்.ஜி.ஆர் நடித்த மந்திரி குமாரி படத்தில் :

பார்த்திபனாக நடித்த எஸ்.ஏ.நடராஜன் :  திறமையின் பெயரால் சூதாட்டம் கூட கலையாகி விடுகிறது. அந்தப் பட்டியலில் நான் களவாடுவதையும் கலையாகக் கருதுகிறேன்.”

”புலி ஆட்டைக் கொல்லாமல் இருந்தால், கொக்கு மானைக் கொத்தாமல் இருந்தால், தவளையைப் பாம்பு விழுங்காமல் இருந்தால், நானும் கொள்ளை அடிக்காமல் இருந்திருக்கலாம்.”

“சிங்கங்கள் உலவும் நாட்டிலே சிறு நரிகள் உலவுவது போல் நமது நாட்டைச் சுற்றித் திரிகிறது ஒரு சோதாக் கும்பல். எண்ணிக்கையிலே குறைந்திருக்கும் அந்த இதயமற்ற கூட்டம் வஞ்சத்தால் வாழ்கிறது.

அநாதைகளின் ரத்தத்தை அள்ளிக்குடிக்கிறது. உழைப்பாளிகளின் ரத்தத்தை உறிஞ்சி எடுக்கிறது.

நாடோடி ஆட்சி நடக்கிறது என்று கேள்வி கேட்கும் அளவுக்கு. அவர்கள் சிலர். நாம் பலர். அவர்கள் சூழ்ச்சிக்காரர்கள். நாம் சூரர்கள்.

சிங்கத் தமிழர்களே சீறி எழுங்கள்”.

*

1952- பராசக்தி படத்தில் :

குண சேகரன்: “கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். கோவில் கூடாது என்பதற்காக அல்ல; கோவில் கொடியவர்களின் கூடாரமாக ஆகிவிடக்கூடாது என்பதால்.

பூசாரியைத் தாக்கினேன். பூசாரி பக்தன் என்பதற்காக அல்ல. பக்தி பகல் வேஷம் ஆகி விட்டதைக் கண்டிப்பதற்காக.

இந்தக் குற்றவாளியின் வாழ்க்கைப் பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நடந்து பார்த்தால், அவன் கடந்து வந்துள்ள காட்டாறுகள் எவ்வளவு என்று கணக்குப் பார்க்க முடியும்.

பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில். படம் எடுக்கும் பாம்புகள் நெளிந்திருக்கின்றன.

தென்றலைத் தீண்டியதில்லை நான்; ஆனால் தீயைத் தாண்டியிருக்கிறேன்.

பிறக்க ஒரு நாடு. பிழைக்க ஒரு நாடு. தமிழர்களின் தலையெழுத்துக்கு நான் என்ன விதிவிலக்கா?

வெளிநாட்டிலிருந்து பிறந்த நாட்டுக்கு வந்த பெண்ணுக்கு வாழ்வதற்குத் தக்க பாதுகாப்பு இல்லை.

என் தங்கை விட்டுக் கொடுத்திருந்தால், கோடீஸ்வரன் பள்ளியறையிலே ஒரு நாள், மானத்தை விலை கூறியிருந்தால் மாளிகைவாசியின் மடியிலே ஒரு நாள். இப்படி ஓட்டியிருக்கலாம் நாட்களை.

இதைத் தானா விரும்புகிறது இந்த நீதிமன்றம்?

பகட்டு என் தங்கையை மிரட்டியது. பயந்து ஓடினாள்.

பணம் என் தங்கையைத் துரத்தியது. மீண்டும் ஓடினாள்.

பக்தி என் தங்கையைப் பயமுறுத்தியது. ஓடினாள். ஓடினாள்.

வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள். அந்த ஓட்டத்தைத் தடுத்திருக்க வேண்டும். வாட்டத்தைப் போக்கியிருக்க வேண்டும், இன்று சட்டத்தை நீட்டுவோர். செய்தார்களா? வாழவிட்டார்களா என் தங்கையை?

கல்யாணி தற்கொலை செய்ய முயன்றது ஒரு குற்றம். குழந்தையைக் கொன்றது ஒரு குற்றம். நான் பூசாரியைத் தாக்கியது ஒரு குற்றம்.

இத்தனை குற்றங்களுக்கு யார் காரணம்?

கல்யாணியைக் கஞ்சிக்கில்லாமல் அழைய விட்டது யார் குற்றம்?

விதியின் குற்றமா? விதியிட் பெயரைச் சொல்லி வயிறு வளர்க்கும் வீணர்களின் குற்றமா?

பணம் பறிக்கும் கொள்ளையர் கூட்டத்தை வளரவிட்டது யார் குற்றம்? பஞ்சத்தின் குற்றமா? அல்லது பஞ்சத்தை மஞ்சத்திற்கு வரவழைக்கும் வஞ்சகர்களின் குற்றமா?

கடவுள் பெயரால் காம லீலைகள் நடத்தும் போலிப் பூசாரிகளை நாட்டிலே நடமாட விட்டது யார் குற்றம்?

கடவுளின் குற்றமா? அல்லது கடவுளின் பெயரைச் சொல்லிக் காலட்சேபம் நடத்தும் கயவர்களின் குற்றமா?

இக்குற்றங்கள் களையப்படும் வரை குணசேகரன்களும், கல்யாணிகளும் குறையப் போவதில்லை.

இது தான் எங்கள் வாழ்க்கை ஏட்டில்- எந்தப் பக்கம் புரட்டினாலும், காணப்படும் பாடம். பகுத்தறிவு. பயனுள்ள அரசியல் தத்துவம்.

கல்யாணி : என் குழந்தை என்ன திருஞான சம்பந்தரா, பார்வதி வந்து பால் கொடுக்க!

*

1953 – திரும்பிப் பார் – படத்தில் :

“காடு வெட்டிக் கழினி திருத்திக் காலையிலே மாடு பூட்டிக் கலப்பை எடுத்துச் சென்று மனமொடிந்த பாட்டாளியும், சித்தம் நோக நித்தம் நித்தம் பாடுபடும் தொழிலாளியும், புத்தம் புது வாழ்வு  வாழ வேண்டும் என்பதே என் நோக்கம்.

ஏழைகள் பசி என்றால் என் இதயம் வெடித்துவிடும் போலிருக்கிறது. அவர்கள் கண்ணீர் விட்டால் என் ரத்தம் எல்லாம் கொதிக்கிறது.”

“ஒரு நாட்டில் முதுகெலும்பு பாட்டாளி வர்க்கம் . ஒரு தேசதிதன் உயிரே தொழிலாளி வர்க்கம், அது துவண்டுவிடக்கூடாது. இது பாட்டாளியின் குரல்.”

*

1954  –  ’மனோகரா’ படத்தில் :

“சாதுக்கள் வேடத்திலே தான் பல சாம்ராஜ்யங்கள் சரிந்திருக்கின்றன”

“பரசுராமன் அவதாரம். மனோகரன் மனிதன்”.

“பொன்னும், மணியும் மின்னும் வைரமும் பூட்டி மகிழ்ந்து கண்ணே முத்தே தமிழ்ப்பண்ணே என்றெல்லாம் குலவிக் கொஞ்சி தந்தத்தால் ஆன கட்டிலிலே, சந்தனத் தொட்டிலிலே வீரனே! என் விழி நிறைந்தவனே! என்று யாரைச் சீராட்டிப் பாராட்டினீர்களோ, அவனை, அந்த மனோகரனைச் சங்கிலியால் பிணைத்து, சபை நடுவே நிறுத்தி, சந்தோஷம் கொண்டாட வேண்டும் என்னும் உங்களது தணியாத ஆசைக்குப் பெயர் கட்டளையா தந்தையே!

வசந்த சேனை-வட்டமிடும் கழுது. வாய் பிளந்து நிற்கும் ஓநாய். நம்மை வளைத்துவிட்ட மலைப்பாம்பு. அதோடு அவள் வடக்கத்திக்காரி

புருசோத்தமரே! புரட்டுக்காரியின் உருட்டும் விழியில் உலகத்தைக் காண்பவரே! மானம் ஒன்றே நல்வாழ்வெனக் கொண்டு வாழ்ந்த மறவேந்தப் பரம்பரையில் மாசாக வந்தவரே!

மயிலுக்கும் , குயிலுக்கும் வித்தியாசம் தெரியாத மதிவாணரே!

குளிர் நிலவைக் கொள்ளிக்கட்டை எனக்கூறிய குருடரே!

என் தாய் அன்பின் பிறப்பிடம். அற நெறியின் இருப்பிடம். குரணை வடிவம். கற்பின் திருவுருவம். மாசற்ற மாணிக்கம். மாற்றுக் குறையாத தங்கம்.

அவர்களை அவதூறு கூறிய அங்கங்களைப் பிளந்தெறிவேன்.

இந்தத் துரோகப் பேச்சுக்கு உம்மைத் தூண்டி விட்ட துர்த்தந்தையின் உடலைத் துண்டாடுவேன்.

துணிவிருந்தால், தோளிலே வலுவிருந்தால், எடுத்துக் கொள்ளும் உமது வாளை!

தடுத்துக் கொள்ளும் உமது சாவை! தைரியமில்லா விட்டால், தளுக்குக் காரியின் குலுக்குச் சிரிப்பிலே நீர் கோழையாகி விட்டிருந்தால், ஓடி  விடும் இதை விட்டு.

இதை விட்டுப் புறமுதுகு காட்டி ஓடும்.

புறநானூற்றின் பெருமையை மூட வந்த புழுதிக் காற்றிலே புறமுதுகு ஆகட்டி ஓடும்.”

வசந்த சேனையின் மகன் வசந்தன் : ”அண்ணா நீ வாழ வேண்டும்; அண்ணா நீ தான் இந்த நாட்டை ஆள வேண்டும்.”

*

1950 – எம்.ஜி.ஆர் நடித்த ‘மருத நாட்டு இளவரசி’ படத்தில் :

“மருத நாட்டுக் கோட்டையிலே குறிஞ்சி நாட்டுக் கொடி பறக்கிறது. அதோடு மருத நாட்டு மானமும் சேர்ந்து பறக்கிறது”.

“மிருக சாதியில் புலி மானைக் கொல்கிறது. மனித சாதியில் மான் புலியைக் கொல்கிறது”

*

1952- கலைவாணர் தயாரித்த ‘ மணமகள்’ படத்தில் :

“கை காட்டி மரம் கை காட்டுவதோடு நின்று விட வேண்டும். அது தானே வழி நடக்கக் கூடாது.”

“பணம் ஆட்கொல்லி. ஆசையைத் தூண்டும் ஆலகால விஷம் அல்லவா?”

“பிரம்மனின் முற்றம் படைக்கத் தெரியாதவன். தேன் கூட்டையும் படைத்துக் கீழே ஒரு முடவனையும் படைத்துவிட்டான். பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறேன். பாழும் பிரம்மன் வஞ்சகன்”

*

1953 -எம்.ஜி.ஆர் நடித்த “நாம்” படத்தில் :

“என்ன ஆச்சர்யக்குறி போடுகிறாய்?”

“ஆச்சர்யக்குறி தான் ஜமீன்தார் அவர்களே! கொஞ்சம் வளைந்தால் கேள்விக்குறியாக மாறிவிடும். ஞாபகம் இருக்கட்டும். கேள்விக்குறிக்கும், அரிவாளுக்கும் வித்தியாசம் இல்லை”

*

1954 -மலைக்கள்ளன் படத்தில் :

“திகைக்காதே தேனினும் இனியவளே! உன்னைத் தேடித் தேடி அலைந்தேன்.

நீ ஓடி ஓடிப் போனாய். நான் பாடிப் பாடி அழைத்தேன். வாடிக்கிடந்த என் நெஞ்சை இன்று ஆடிக்களிக்க வந்தாய்”

‘கற்புக் கனலைக் காப்பாற்ற வந்த கடவுள். உத்தமியை சிஷ்ட பரிபாலனம் செய்ய ஆண்டவன் எடுத்த அவதாரம். திக்கற்ற ஒரு பெண்ணின் வேதனையைப் போக்க வந்த  தெய்வத்தின் அவதாரம் என்று எண்ணி விடாதே. நான் மலைக்கள்ளன்”

– மணா

You might also like