மக்களவையில் நேற்று பேசிய திமுக எம்.பி.கனிமொழி, இந்தியாவில் உள்ள ஒரு சில தொழிலதிபர்கள் வாழ்வதற்கும், கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவும் ஒன்றிய அரசு உதவி செய்து வருவதாகவும், ஆனால், அதே நேரத்தில் அடித்தட்டு மக்களுக்கு உதவிகள் செய்ய தயக்கம் காட்டுவதாகவும் கூறினார்.
விலைவாசி உயர்வு குறித்து சிறுமி ஒருவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளதை சுட்டிக்காட்டிய கனிமொழி, கொரோனா காலத்தில் பலர் வேலை இழந்துள்ளதைப் பற்றியும் பேசினார்.
மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என வலியுறுத்திய அவர், பாஜக அரசு ஆட்சிக்கு வருவதற்காக அளித்த, கருப்புப் பணம் மீட்பு குறித்தும் விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய கனிமொழி, “பாஜக கொண்டுவந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் 50,000 சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், இதனால் ஆயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பை இழந்துள்ளதாகவும்” கூறினார்.