அஜித்தின் கனவும், கடின உழைப்பும்: தொடர் – 9
வளர்ந்து வரும் ஒரு ஹீரோவைத் தேடி எப்போது பல புதியவர்கள் படம் தயாரிக்க முன் வருகிறார்களோ அப்போதே அவரது மார்க்கெட் உச்சத்தை நோக்கி உயர்ந்து கொண்டிருக்கிறது என்பது சினிமா வர்த்தக விதி.
‘ஆசை’ வெளியாவதற்கு முன்னரே அஜித்துக்கு எக்குத்தப்பான வாய்ப்புகள் குவியத் தொடங்கின. அதில் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் புதியவர்கள்.
தயாரிப்பாளர்களிலும், இயக்குநர்களிலும் புதியவர்களுக்கே அதிக வாய்ப்புகளை கொடுப்பது என்று முடிவு செய்திருந்தார் அஜித்.
முதல் படம் எனும்போது அவர்களிடம் 100% சின்சியாரிட்டியும், ஜெயிக்க வேண்டும் என்ற வெறியும் இருக்கும் என்பதே அதற்கு காரணம்.
அப்படி அஜித்தை வைத்து முதல் படத்தை தயாரித்தவர்களில் மிக முக்கியமானவர் ‘சிவசக்தி’ பாண்டியன்.
அடிப்படையில் திரைப்பட விநியோகஸ்தரான ‘சிவசக்தி’ பாண்டியனுக்கு, தயாரிப்பாளர் ஆவது தான் லட்சியம். அவருடைய நண்பர் தயாரிப்பாளர் அன்பாலயா பிரபாகரனின் ஆபீசுக்கு அடிக்கடி சென்று பேசிக் கொண்டிருப்பார்.
அப்போது இயக்குநர் அகத்தியனும் அங்கே வந்து செல்வார்.
“ரிஸ்க் இல்லாம மீடியம் பட்ஜெட்ல ஏதாவது கதை இருந்தா சொல்லுங்க. நான் தயாரிக்குறேன்” என்று அகத்தியனிடம் சொன்னபோது, அவர் ஒரு சப்ஜெக்ட்டை சொல்ல, அது பாண்டியனுக்கு ரொம்பவும் பிடித்துப்போனது.
படத்துக்கு ‘வான்மதி’ என்று பெயரும் வைத்தனர். யாரை ஹீரோவாக போடுவது என்ற பேச்சு வந்தபோது ஒட்டுமொத்த யூனிட்டும் உச்சரித்த பெயர் அஜித்குமார்.
‘ஆசை’ படப்பாடல்கள் செம ஹிட்டாகி பட்டிதொட்டியெல்லாம் அப்போது ஒலித்துக் கொண்டிருந்தன. படம்கூட ரிலீஸ் ஆகவில்லை. நாலே படங்களுக்குள் இளைஞர்கள் மத்தியில் அஜித்துக்கு பெரிய கிரேஸ் உருவாகி இருந்தது.
படம் யூத் ஆடியன்சை ரீச் ஆகவேண்டும் என்றால் அஜித்தை தான் ஹீரோவாக போடவேண்டும் என்று முடிவானது.
“அப்போது அஜித்திடம் சதீஷ் என்பவர் மேனேஜராக இருந்தார். முதலில் அவரிடம் பேசினேன். சார் வெளியூர் ஷூட்டிங்ல இருக்கார் பேசிட்டு சொல்றேன்” என்றார்.
சொன்னதைப் போலவே ரெண்டு நாள்ல கூப்பிட்டார். அஜித் சார் உங்களைப் பத்தி விசாரிச்சிருக்கார், நீங்க நல்ல விநியோகஸ்தர்னு கேள்விப்பட்டாராம்.
தாராளமா படம் பண்லாம்னு சொல்ல சொன்னார் என்றதும், மேனேஜரை வடபழனி முருகன் கோயிலுக்கு வரச்சொல்லி அட்வான்ஸ் கொடுத்தேன்” இப்படித்தான் அஜித்தை என்படத்தில் முதல்முதலா கமிட் பண்ணேன் என்று சிவசக்தி பாண்டியன் சொல்லும்போதே பழைய நினைவுகளில் மூழ்கிப்போனார்.
‘வான்மதி’ படப்பிடிப்பு ஊட்டியிலும், சென்னையிலும் வேகமாக நடந்துகொண்டிருந்தது. ஆனால் நான் என் ஹீரோவை ஒருமுறைகூட நேரில் சந்திக்கவே இல்லை.
அதற்கான வாய்ப்பும் அமையாமலே இருந்தது. ஷூட்டிங் முடிச்சுட்டு வர்ற எங்க கம்பெனி ஆட்கள் அஜித்தைப் பற்றி ரொம்ப உயர்வா பேசுவாங்க.
எந்த பந்தாவும் இல்லாம யதார்த்தமா பழகுறார். ரொம்ப நல்ல பையன் என்று ஆளாளுக்கு அவரைப் பற்றி தினமும் ஏதாவது புகழ்ந்து கொண்டிருப்பார்கள். இதை பார்த்துக் கொண்டிருந்த எனக்கு அஜித்தை சந்திக்கவேண்டும் என்ற ஆர்வம் அதிகமானது.
கோடம்பாக்கத்தில் ஒரு ஜிம்மில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அஜித்தை முதன்முதலாக சந்திக்கப்போகும் ஆவலில் செட்டுக்கு போனபோது,
“சாருக்கு, முதுகு வலி ரெஸ்ட்ல இருக்கார்”னு சொன்னாங்க.
ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போகவேண்டியது தானே என்றதற்கு, அவர் ஊட்டியிலயும் இப்படித் தான். வலி வந்தா கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வந்து கன்டினியூ பண்ணுவார். ஹாஸ்பிட்டல் போகமாட்டார் என்றார்கள்.
அஜித்தின் அறைக்குள் சென்றபோது, லேசாக சாய்ந்தபடி அமர்ந்திருந்தார். “ஏன் தம்பி ஸ்ட்ரெய்ன் பண்றீங்க”னு கேட்டபோது, “சினிமாவுல பெரிசா ஜெயிக்கணும் சார்.
அதுக்கு முன்னால இந்த வலியெல்லாம் ஒண்னுமே இல்ல” என்று சொல்லிவிட்டு சிரித்தார்.
அந்த வயசில் அவருக்குள் இருந்த கமிட்மென்ட்டை பார்த்து அசந்தே போனேன் என்று அஜித்துடன் 20 வருடங்களுக்கு முன் நடந்த அந்த முதல் சந்திப்பு பற்றி விவரிக்கும்போது சிவசக்தி பாண்டியன் முகத்தில் அத்தனை ஆனந்தம்.
‘வான்மதி’ வெளியாகி 110 நாட்கள் ஓடியது. தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் லாபத்தை அள்ளித்தரும் ஹீரோ ஆனார் அஜித்.
அதைத் தொடர்ந்து அஜித்தை வைத்து ‘காதல் கோட்டை’ தயாரித்தார் சிவசக்தி பாண்டியன்.
அதுவும் சூப்பர் ஹிட்.
தயாரிப்பாளர் என்பதை தாண்டி அஜித்தின் மிக நெருங்கிய நண்பரானார் பாண்டியன்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வருடாவருடம் சென்று வரும் அளவுக்கு நெருக்கமாக இருந்த அவர்களது நட்பில் திடீர் விரிசல் விழுந்தது!
(இன்னும் தெறிக்கும்…)
-அருண் சுவாமிநாதன்