கடந்த 2019 உலகக் கோப்பைக்கு பிறகு விராட் கோலியின் ஃபார்ம் மிக மோசமாக உள்ளது. அதுவரை கொடி கட்டி பறந்த விராட் கோலியின் ஆட்டம் சரியத் தொடங்கியது. விராட் கோலியின் ஆட்டத்தை குறித்து பல கிரிக்கெட் வர்ணனையாளர்களும், நிபுணர்களும், முன்னாள் வீரர்களும் விமர்சிக்கும் அளவுக்கு மோசமாக விளையாடி வருகிறார்.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதிலும் அந்த ஓய்வு முடிவை இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் அவரே கேட்டதால் அந்த சர்ச்சை பெரிதாக வெடித்தது.
விராட் கோலியின் ஆரம்பகால ஆட்டத்தை பார்த்த பொழுது அவர் நிச்சயமாக சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை முறியடிப்பார் என்று அனைவருமே நம்பினர்.
அவர் 2019 ஆம் ஆண்டிற்கு பிறகும் நல்ல ஃபார்முடன் விளையாடி இருந்தால் சில சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை முறியடித்து இருப்பார். அவருடைய கெட்ட நேரம் தற்பொழுது மோசமான ஃபார்மில் சிக்கி தவித்து வருகிறார்.
சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு தனிப்பட்ட வீரரின் மிகப்பெரிய சாதனை என்னவென்று கேட்டால் ஒருபுறம் டான் பிராட்மேன் வைத்திருந்த டெஸ்ட் கிரிக்கெட் ஆவரேஜ் என்று சொல்லுவார்கள். அவர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்த ஓய்வு பெறும் பொழுது அவருடைய ஆவரேஜ் 99.94ஆக இருந்தது.
மறுபுறம் சச்சின் டெண்டுல்கரின் சர்வதேச 100 சதங்கள் தான் ஒரு தனிப்பட்ட வீரரின் மிகப்பெரிய சாதனை என்று கூறுவார்கள். டான் பிராட்மேன் சாதனையை முறியடிக்க சாத்தியமே இல்லை என்றாலும், சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை முறியடிக்க விராட் கோலி என்னும் ஒரே ஒரு வீரர் தான் இருக்கிறார்.
ஆரம்ப காலங்களில் விராட் கோலியின் வேகமான ஆட்டத்தை பார்த்து அவர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பது மட்டுமல்லாமல் இன்னும் பல சாதனைகளை படைப்பார் என்று தான் அனைவரும் நம்பினர்.
தற்போது அவர் மோசமான ஃபார்மில் இருக்கும் பொழுது அனைவரும் அவரை விமர்சிக்க தொடங்கி விட்டனர். இருப்பினும் இன்னமும் கூட சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை முறியடிக்க கூடிய ஒரே வீரர் விராட் கோலி தான். ஏனெனில் விராட் கோலியின் ஆரம்பகால சிறப்பான ஆட்டங்களில் மூலம் அவர் ஏற்கனவே சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை நெருங்கி விட்டார்.
சச்சின் டெண்டுல்கர் தனது 40 வயது வரை சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடிக் கொண்டிருந்தார். விராட் கோலி தற்போது தான் 33 வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் விராட் கோலிக்கு இன்னும் ஏழு வருடங்கள் இருக்கலாம் என்று தோன்றுகிறது.
தனது மோசமான ஃபார்மில் இருந்து மீறி தனது பழைய ஃபார்மில் விராட் கோலி விளையாட ஆரம்பித்தால், அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பே மிக சுலபமாக சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை முறியடித்து விடுவார்.
சச்சின் டெண்டுல்கர் தன் வாழ்நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 781 இன்னிங்ஸில் விளையாடி உள்ளார். விராட் கோலி தற்பொழுது தான் 400 இன்னிங்ஸை கடந்துள்ளார். அப்படி ஒப்பிட்டு பார்க்கையில் விராட் கோலி சச்சின் டெண்டுல்கரை விட அதிக பேட்டிங் ஆவரேஜுடன், மிக வேகமாக சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை நெருங்கிக் கொண்டிருந்தார்.
திடீரென்று 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு விராட் கோலியின் ஃபார்ம் சரியத் தொடங்கியதால் அவரின் வேகம் கணிசமாக குறைந்துள்ளது. இருப்பினும் அவர் வேகமாக மீண்டு வந்து தனது அதிரடியான ஆட்டத்தை மீண்டும் தொடருவார் என்றே தோன்றுகிறது.
சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்களின் சாதனையை முறியடிக்க விராட் கோலி இன்னும் 30 சதங்களை அடிக்க வேண்டும். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இதுவரை விராட் கோலி அளித்துள்ள 70 சதங்களில், 62 சதங்கள் 2012ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை உள்ள காலகட்டத்தில் அடித்தது தான்.
அதன் பிறகுதான் அவர் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினார். என்னதான் விராட் கோலி டி20 ஆட்டங்களில் 3000 ரன்களை கடந்து இருந்தாலும், டி20 ஆட்டங்களில் இதுவரை ஒரு சதம் கூட அடிக்கவில்லை.
விராட் கோலி ரசிகர்கள் இன்னமும் அவர் மீண்டு வந்து தனது ஆட்டத்தில் மிகப்பெரிய உச்சத்தை அடைவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அது நடப்பதற்கு வாய்ப்புகள் மிக அதிகமாகவே உள்ளது.
ஏனெனில் சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை முறியடிக்க வேண்டும் என்றால் இன்னொரு வீரர் பிறந்து தான் வர வேண்டும். தற்போது இருக்கும் சூழலில் அந்த சாதனைகளை முறியடிக்க கூடிய ஒரே வீரர் விராட் கோலி தான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
ஆகையால் தற்போது விராட் கோலிக்கு அளிக்கப்பட்டிருக்கும் இந்த ஓய்வை அவர் சரியாக பயன்படுத்தி தனது ஆட்டத்தில் கவனம் செலுத்தி, சர்வதேச கிரிக்கெட்டில் தனது ஃபார்மை நிலை நிறுத்தி மிக சிறப்பாக விளையாடுவார் என்ற எதிர்பார்ப்புகள் மிக அதிகமாகவே உண்டு.
– இளவரசன்