திருக்குறளை மேற்கோள் காட்டிய பிரதமர்!

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டரங்கத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமருக்கு மாமல்லபுர நினைவுச் சின்னத்தை முதலமைச்சர் முகஸ்டாலின் வழங்கினார்.

பின்னர் செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, ‘இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு’ என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘’சிறப்பான ஒரு தருணத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவிற்கு வந்துள்ளது எனவும், தமிழகத்திற்கும் சதுரங்க விளையாட்டிற்கும் நீண்ட வரலாற்று தொடர்பு உள்ளது எனவும், தமிழகத்திலிருந்து பல கிராண்ட் மாஸ்டர்கள் உருவாகியுள்ளனர் என்றும் கூறினார்.

தமிழ்நாட்டின் கோயில்களிலுள்ள சிற்பங்கள் பல்வேறு விளையாட்டுகளை குறிக்கும் விதமாக அமைந்துள்ளது என்றும், துடிப்பான கலாசாரம் கொண்ட தமிழகம், தமிழ் மொழியின் தாயகம் என்றும் பேசினார்.

பிரதமரைத் தொடர்ந்து பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் நாளாக இது அமைந்துள்ளது என்றும், செஸ் ஒலிம்பியாட் தொடரை நடத்தும் வாய்ப்பு தமிழ்நாட்டிற்கு கிடைத்தது பெருமை என்றும் பெருமிதம் தெரிவித்தார்.

இதுபோன்ற பன்னாட்டு விளையாட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகளை செய்ய குறைந்தது 18 மாதங்கள் ஆகும் என்ற நிலையில், நான்கே மாதங்களில் பன்னாட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக செய்துள்ளது என்று பேசிய அவர், தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறை மட்டுமின்றி சுற்றுலா துறையும் மிகப்பெரிய வளர்ச்சியடையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தியாவில் உள்ள 73 கிராண்ட் மாஸ்டர்களில் 26 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் எனவும், தமிழ்நாடுதான் இந்தியாவின் செஸ் தலைநகரமாக உள்ளது எனவும் மு.க.ஸ்டாலின் கூறினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய சர்வதேச செஸ் சம்மேளனத்தின் தலைவர் அர்காடி வோர்கோவிச், தமிழகத்தின் பாரம்பரியம், கலாசாரம் அனைத்தையும் இந்த நிகழ்ச்சிகள் மூலம் காணமுடிந்தது’ என்று கூறினார்.

அவரையடுத்து பேசிய ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர், வரலாற்று சிறப்புமிக்க ஒரு தருணத்தில் நாம் இணைந்திருக்கிறோம் எனவும் இந்தியாவில் முதன்முறையாக நடைபெறும் செஸ் ஒலிம்பியாட்டை காணும் வாய்ப்பை பெற்றுள்ளோம் எனவும் பெருமிதம் பொங்க பேசினார்

You might also like