குடும்பத்தோடு கண்டுகளிக்கக் கூடிய திரைப்படங்கள் எப்படியிருக்க வேண்டும்? எம்.ஜி.ஆர், ரஜினிகாந்த், தற்போது விஜய், அஜித் நடித்த, அவர்களது உச்சபட்ச ஹீரோயிசத்தை வெளிப்படுத்திய பல படங்கள் இதற்கான உதாரணங்களாகத் திகழ்கின்றன.
நாயகனின் ஒவ்வொரு அசைவையும் சிலாகிப்பது இவ்வகை படங்களுக்கான பார்முலாவில் முக்கிய அம்சம்.
தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உட்பட பல்வேறு மொழிகளிலும் இதனை அடியொற்றிப் பல திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன.
இப்படியொரு நிலைக்கு உயர்வதுதான் இதர ஹீரோக்களின் ஒரே ஆசையாகவும் இருக்கும். அப்படியொரு பார்முலாவில் ஒருவரது அறிமுகத் திரைப்படம் இருந்தால் எப்படியிருக்கும்?
அந்த நபர் இளவயது நாயகனாக அல்லாமல், வேறொரு துறையில் கோலோச்சிய சாதனையாளராக இருந்தால் அப்படத்திற்கு ரசிகர்களிடம் எப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்கும்?
இந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாகத் தற்போது வெளியாகியிருக்கிறது ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் ‘லெஜண்ட்’ சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘தி லெஜண்ட்’.
புளித்துப்போன பார்முலா!
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஸ்ரேயா நடித்த ‘சிவாஜி’ படத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?
அதில் ரஜினி வெளிநாட்டில் ஐடி வேலை பார்ப்பவராக வருவார். இதில், ‘லெஜண்ட்’ அருள் சரவணன் ஒரு வெற்றிகரமான ‘மைக்ரோ பயலாஜி’ விஞ்ஞானியாகத் தோன்றுகிறார்.
அவரும் வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தைத் தமிழ்நாட்டிலுள்ள மக்களுக்குப் பயன் தரும் வகையில் செலவழிக்க விரும்புவார். போலவே, சரவணனும் இப்படத்தில் தான் பெற்ற அறிவியல் அறிவை, ஆண்டிபயாடிக்குகள் தொடர்பான சாதனைகளைத் தன் நாட்டு மக்களுக்குப் பயன் தரும் வகையில் மடைமாற்ற முயற்சிக்கிறார்.
சிவாஜியில் ஸ்ரேயா என்றால் ‘தி லெஜண்ட்’டில் கீதிகா திவாரி. அதில் ரஜினியின் பெற்றோர் ஆக மணிவண்ணன் – வடிவுக்கரசி வந்திருப்பார்கள்; இதில், விஜயகுமார் – லதா தம்பதியர் பெற்றோர் ஆக இடம்பெற்றிருக்கின்றனர்.
கூடுதலாக, அவரது அண்ணனாக பிரபு, அண்ணி, குழந்தைகள் என்று ஒரு பட்டாளமே வீடு முழுக்க நிறைந்திருக்கின்றனர்.
ஆனால், அதில் எப்படி ரஜினியுடன் ஒட்டிக்கொண்டு படம் முழுக்க விவேக் வருவாரோ, அதே வேலையை மாறாமல் இதிலும் செய்திருக்கிறார்.
கொரோனா காலத்தில் ஏற்பட்ட விவேக்கின் திடீர் மறைவு ‘தி லெஜண்ட்டின்’ பின்பாதியில் அவர் இடம்பெறாததை மவுனமாக உணர்த்துகிறது.
இவ்வளவு சொன்னபிறகும், ‘தி லெஜண்ட்’ படத்தின் கதை என்ன என்று கேட்பவர்களுக்காகச் சில வரிகளைத் தருகிறேன்.
டாக்டர் அருள் சரவணன் (அருள் சரவணன்) தன் சொந்த ஊரான பூஞ்சோலைக்கு திரும்புகிறார். அப்போது, தங்கள் குடும்பத்திற்குச் சொந்தமான கல்லூரியில் தோட்டப் பராமரிப்பாளராகத் தன் பள்ளிக்கால நண்பன் (ரோபோ சங்கர்) இருப்பதைப் பார்க்கிறார்.
நண்பனின் மனைவி (தேவதர்ஷினி), மகன் (அஷ்வந்த்), மகள் (மானஸ்வி) என்று அனைவருமே சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர்.
ஒருநாள் நண்பன் மரணமடைய, அவனது குடும்பத்தின் இழப்பை ஈடுகட்டும் நோக்கில் சர்க்கரை நோய்க்கு நிரந்தரத் தீர்வு கண்டறியும் முயற்சியில் இறங்குகிறார் சரவணன்.
இவ்விஷயம் தெரிய வந்ததும், மருந்து மாபியா உலகம் அலறுகிறது. அவரது முயற்சிகளைத் தடுப்பதற்கான வேலைகளில் இறங்குகிறது.
அதனால் தன் காதல் மனைவி துளசியைப் (கீதிகா) பிரிகிறார்; இதன்பிறகும் தனது ஆராய்ச்சியைத் தொடர, இறுதியில் என்ன நிகழ்ந்தது என்று சொல்கிறது ‘தி லெஜண்ட்’.
வில்லன்களாக சுமன், வம்சி கிருஷ்ணா, லிவிங்க்ஸ்டன், நாசர், மன்சூர் அலிகான், ஊர்வசி ரவுட்லா, தம்பி ராமையா, சிங்கம்புலி, யோகிபாபு, ஹரீஷ் பேரடி, லொள்ளுசபா மனோகர், ஒரு பாடலுக்கு நடனமாடிய வகையில் லட்சுமி ராய், யாஷிகா என்று ஒரு நட்சத்திரப் பட்டாளமே இதில் தலைகாட்டியிருக்கிறது.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், ஒரு வழக்கமான பொழுதுபோக்கு சித்திரத்திற்கான உள்ளடக்கத்திற்கு எவ்வகையிலும் குறைந்ததல்ல ‘தி லெஜண்ட்’.
ஆனால், அதெல்லாமே பெரிய திரையில் முதன்முறையாக அறிமுகமாகும் அருள் சரவணனுக்கான புகழ் மாலைகளாக மாறுவதில் தான் சில சிக்கல்கள் தென்படுகின்றன.
இந்த ‘பில்டப்’ தேவையா?
‘ஒன் மேன் ஆர்மி’ போல படம் முழுக்க நிறைந்திருக்கிறார் நாயகனாக வரும் அருள் சரவணன். வெறுமனே அவரது நிறுவன விளம்பரப் படங்களில் பார்த்தவர்களுக்கு, ஒரு ‘ஃபுல் மீல்ஸ்’ அனுபவத்தைத் தர முயன்றிருக்கிறார்.
சண்டைக் காட்சிகள், பாடல்கள் நிறைந்த படங்களை இளம் நாயகர்களே தவிர்க்கும் காலகட்டத்தில், தானாக முன்வந்து அவற்றைத் தனது முதல் சினிமா தயாரிப்பில் நிரப்பியிருப்பது ஆச்சர்யமான விஷயம்.
ஆனால், அவருக்கான ‘பில்டப்’ தொடர்ந்து படம் முழுக்க இடம்பெற்றிருப்பதுதான் கொஞ்சம் இடிக்கிறது. ‘இது தேவையா’ என்ற கேள்வியை எழுப்புகிறது.
என்னதான் கடுமையாக மெனக்கெட்டிருந்தாலும், சரவணனின் நடிப்பு தியேட்டரில் சிரிப்பலைகளை பெருக்குகிறது.
நகைச்சுவைக் காட்சிகளுக்கு உதட்டைக் கோணுபவர்கள் கூட, சோகக் காட்சிகளில் அவர் அழுதுபுலம்பி நடிக்கையில் ‘ஹோவ்’வென்று பேரொலி எழுப்புகின்றனர்.
’இந்த கேலி, கிண்டலையெல்லாம் எதிர்பார்க்கமலா இருப்பேன்’ என்பது போலவே படம் முழுக்கத் தயக்கமின்றி உலவுகிறார் அருள் சரவணன்.
அறிமுகக் காட்சியில் செயற்கையாகத் தோன்றினாலும், தான் ஒரு அழகான நடிக்கத் தெரிந்த நாயகி என்று நிரூபித்திருக்கிறார் கீதிகா திவாரி. இன்னொரு நாயகியாக வரும் ஊர்வசி ரவுட்லா திரையில் கவர்ச்சி காட்டிய அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தவில்லை.
’அது இது எது’ அமுதவாணன் உட்படப் பலரது இருப்பு கவனம் கவரவில்லை என்றாலும், படம் முழுக்க இடம்பெற்றுள்ள நட்சத்திரங்கள் அனைவருமே தேவைக்கு அதிகமாகவே தங்களது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
சிவாஜி போலவே ‘தி லெஜண்ட்’டிலும் வில்லன் சுமன் தான் என்று சொல்வதைத் தவிர வேறு வழியில்லை.
மன்சூர் இடம்பெற்ற ஒரு காட்சி போலவே, கல்லூரி பின்னணியில் ‘ஊ.. லா..’ என்று கத்திக்கொண்டே வில்லத்தனம் செய்யும் ஒரு இளம் நடிகரையும் அம்போவென விட்டிருக்கிறது திரைக்கதை.
இடைவேளைக் காட்சி அதிர்ச்சியடைய வைத்தாலும், அதில் லாஜிக் 0% கூட இல்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
ஒளிப்பதிவு செய்துள்ள வேல்ராஜ், ஒவ்வொரு ஷாட்டையும் விளம்பரப் படத்தில் இடம்பெறுவது போல பாவித்து படம்பிடித்திருக்கிறார். ரூபனின் படத்தொகுப்பு மிகச்சீராக ஒரு திரைக்கதையைப் பார்க்கும் உணர்வை உருவாக்கியிருக்கிறது.
கலை இயக்குனர் எஸ்.எஸ்.மூர்த்தியின் உழைப்பு திரையை வண்ணமயமாக்கியிருக்கிறது.
இது போதாதென்று காஸ்ட்யூம் டிசைனர்கள் வேறு பல வண்ண ஆடைகளைத் திரை முழுக்க நிரப்பியிருக்கின்றனர்.
அதேநேரத்தில், அருள் சரவணனுக்கு மட்டும் கோட்களையும் ஸ்வெட்டர்களையும் அணிவித்து அழகு பார்த்திருக்கின்றனர்.
ஒவ்வொரு பாடலுக்கும் பத்து பதினைந்து காஸ்ட்யூம்களை அவருக்கே (?!) தந்திருக்கின்றனர். விட்டால், படுக்கையறை காட்சிகளில் கூட கோட் சூட்டுடன் நடிக்க வைத்திருப்பார்களோ எனும் அளவுக்கு பளிச்சிடுகின்றன அவரது காஸ்ட்யூம்கள்.
கமர்ஷியல் படங்களில் வசனங்கள் செயற்கையாகப் படுவது பேராபத்து. அதனைச் சாமர்த்தியமாகச் சமாளித்திருக்கிறது பட்டுக்கோட்டை பிரபாகரின் எழுத்து.
‘தி லெஜண்ட்’ பார்க்கும் ரசிகர் ஒருவரைத் தியேட்டரில் இருந்து வெளியேறவிடாமல் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது ஹாரிஸ் ஜெயராஜின் இசை.
‘வாடிவாசல்’, ‘முசல முசல’, ‘கோனே கோமானே’ உட்பட 5 பாடல்கள் மட்டுமல்லாமல் பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார்.
குறிப்பாக, அனல் அரசு வடிவமைத்துள்ள சண்டைக் காட்சிகளுக்கு உயிர் தருவதில் தன் பங்கே செவ்வனே செய்திருக்கிறது பின்னணி இசை.
இயக்குனர் இணை ஜேடி- ஜெர்ரி இருவருமே உல்லாசம், விசில் படங்களை ஏற்கனவே இயக்கிய அனுபவமுடையவர்கள்.
இயக்குனர் பாலு மகேந்திராவின் பட்டறையைச் சேர்ந்தவர்கள். அதனைச் சிறிதும் நினைவூட்டாத வகையில், ஒரு ‘அபாரமான’ கமர்ஷியல் படம் பார்க்கும் உணர்வை ஏற்படுத்தியிருக்கின்றனர்.
அருள் சரவணனின் நடிப்பு பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகும் என்று நன்கு தெரிந்தபிறகும், எம்ஜிஆர், ரஜினி பார்முலாவில் ஒரு கதையை உருவாக்கி அதில் அவரை நாயகனாக்கியிருப்பது இயக்குனர்களின் தீர்க்கமான பார்வையை வெளிப்படுத்துகிறது.
இதன் மூலமாக, அருள் சரவணனின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்போ அல்லது வேறு மொழிகளில் பிரமாண்ட கமர்ஷியல் படத்தை இயக்கும் வாய்ப்போ ஜேடி ஜெர்ரி இணைக்கு கிடைக்கக்கூடும்.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், ஹீரோயிசத்தை தாங்கிப் பிடிக்கும் பெரிய ஹீரோக்களின் படங்களுக்கும் ‘தி லெஜண்ட்’டுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. அதனால், லாஜிக் ஓட்டைகளைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.
அருள் சரவணன் அவ்விஷயங்களைக் கையாள்வது மட்டுமே அபத்தமாகப் படும். அதைத் தவிர்த்துப் பார்த்தால், இப்படம் நிச்சயம் ஒரு திருவிழா அனுபவம் தான்..!
-உதய்.பா